சமையல்... சமையல்!

பீன்ஸ் பனீர் மசாலா, வெள்ளரி சாதம், வெஜிடபிள் ஊத்தப்பம், பழ சொய்யன், பழ சொய்யன்

பீன்ஸ் பனீர் மசாலா

தேவையானவை
பீன்ஸ் - 200 கிராம்
பனீர் - 150 கிராம்
தக்காளி - 4
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - அரைதேக்கரண்டி
தனியாத்தூள் - 4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
கொத்துமல்லி - சிறிது
செய்முறை: பீன்ஸையும், பனீரையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம் பச்சை மிளகாய் இவைகளை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பாதி வெந்ததும், தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், பனீர், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, தனியாத்தூள் சேர்த்து உப்பிட்டு நன்கு கலந்து தொடர்ந்து வேக வைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றி, மசாலா கலவை நன்கு சுருண்டு கமகம என வாசனை வந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். இதில் கொத்துமல்லியை மேலாகத் தூவிக் கொள்ளவும். பீன்ஸ் பனீர் மசாலா தயார். எல்லா வித சாதங்களுடனும் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். 
குறிப்பு: பீன்ஸ், பனீரில் புரதம், தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் உள்ளதால் ஆரோக்கியத்திற்கும் 
நல்லது. குறிப்பாக உடலுக்கு புரதம் நன்கு கிடைக்கும்.
எம். கார்த்திகா, பெங்களூரு. 

வெள்ளரி சாதம்

தேவையானவை: 
பச்சரிசி -1 கிண்ணம்
வெள்ளரி துருவல்- 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - ஒரு துண்டு
எலுமிச்சம்பழச்சாறு - 1 மேசைகரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கறுவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1/ 2 தேக்கரன்டி
உளுத்தம்பருப்பு - 1/ 2 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
செய்முறை : முதலில் அரிசியில் உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து, வெள்ளரி துருவலையும் சிறிது உப்பையும் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி இறக்குங்கள். அந்தக் கலவையுடன் உதிராக வடித்து வைத்துள்ள சாதம், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள். சுவையான வெள்ளரி சாதம் தயார். மிகவும் சத்தானதும் கூட.

வெஜிடபிள் ஊத்தப்பம்

தேவையானவை:
இட்லி மாவு - அரை கிலோ
கேரட், முட்டை கோஸ் துருவல் - தலா 1 கிண்ணம் 
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கிண்ணம்
நறுக்கிய குடமிளகாய் - 1 கிண்ணம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய கேரட், முட்டைகோஸ், நறுக்கிய குடமிளகாய், வெங்காயம் எல்லாவற்றையும் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்றாக வதக்கவும். அத்துடன் உப்பு சேர்த்து கிளறி எடுத்து, தோசை மாவுடன் கலந்து வைக்கவும். பின்னர், அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறிய தோசைகளாக வார்த்து எடுக்கவும். 
குறிப்பு: சூடாகச் சாப்பிட்டால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். இதற்கு புதினா சட்னி சிறந்த 
காம்பினேஷன்.
- முத்தூஸ், தொண்டி. 

பழ சொய்யன்

தேவையானவை:
வாழைப்பழம் - 4
கொய்யாப்பழம் - 2
பலாச்சுளை - 12
ஆப்பிள் பெரியது - 1
சர்க்கரை - 300 கிராம்
மைதா - 200 கிராம்
நெய் - 4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - சிறிது 
சோடா - 1 சிட்டிகை
செய்முறை: அனைத்துப் பழங்களையும் நன்கு கழுவி, தோலெடுத்து, பின்பொடிப்பொடியாக, அரிந்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி சூடாக்கி, அதில் இந்தப் பழக் கலவைகளைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். இரு நூறுகிராம் சர்க்கரையைப் பாகாக்கி, அதில் இந்தப் பழக் கலவையைப் போட்டு நன்கு கிளறவும். பின் வேறொரு வாயகன்ற பாத்திரத்தில் மீதமுள்ள சர்க்கரை, மைதா, உப்பு, சோடா எல்லாவற்றையும் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின் பழப் பூரணத்தை ஒரு தட்டில் எலுமிச்சை அளவிற்கு உருட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை, ஒவ்வொன்றாக மைதா கலவையில் முக்கி எடுத்து எண்ணெய்யில் போடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும். பின் சிவந்ததும் எடுத்து ஒரு தட்டில் பரத்தவும், பழ சொய்யன் தயார்.
- சுகந்தா ராம், சென்னை.

கோதுமை உருண்டை

தேவையானவை:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
நெய் - 1 1/4 கிண்ணம்
மாவு சர்க்கரை - 1 கிண்ணம்
(வெல்லத்தை நன்றாக பொடி செய்தும் மாற்றாக 
கலக்கலாம்)
பொடித்த ஏலக்காய் - 1 தேக்கரண்டி
வறுத்த பாதாம் பருப்பு - 8
செய்முறை: வாணலியில் கோதுமை மாவை கொட்டி வறுத்துக் கொள்ளவும். மாவு சர்க்கரை அல்லது வெல்லத்தைப் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். வறுத்த கோதுமை மாவில், வெல்லத்தைக் கொட்டி, முக்கால் கிண்ணம் நெய்யை ஊற்றி நன்றாக கலக்கவும். அத்துடன் 1 தேக்கரண்டி ஏலக்காய்ப் பொடியைச் சேர்க்கவும். பாதாம் பருப்பை, தனியாக நெய்யில் வறுத்து ரெடியாக வைத்திருந்து, கலக்கவும். பிறகு கையின் மத்தியில், மாவை எடுத்து வைத்துக் கொண்டு சிறுசிறு பந்துகளாக உருட்டவும்.
இந்த இடத்தில் ஒரு சிறு யோசனை: கோதுமை ரவையை பொடித்து வைத்துக் கொண்டு, நெய்யில் வறுத்து, உருண்டையாகப் பிடிக்கும்போது, மேலாக சேர்ப்பது உண்டு. இதனால் கோதுமை உருண்டையை கடிக்கும்போது கரகரவென தனி டேஸ்ட்டாக இருக்கும்.
குறிப்பு: கூடுதலாக நெய் கொஞ்சம் வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் உபயோகித்துக் கொள்ளலாம்.
- ராஜிராதா, பெங்களூரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com