ராணுவ வீரர்களுக்காக நகைகளை விற்ற பெண்மணி!

இமய மலையின் சியாச்சின் சிகரம் கடல் மட்டத்திலிருந்து இருபதாயிரம் அடிகள் உயரத்தில் இருக்கிறது. பனிப்பாறை களால் மூடப்பட்டிருக்கும் இந்த மலைச் சிகரம் கடுங்குளிர் கோட்டை என்று சொல்லலாம்.
ராணுவ வீரர்களுக்காக நகைகளை விற்ற பெண்மணி!

இமய மலையின் சியாச்சின் சிகரம் கடல் மட்டத்திலிருந்து இருபதாயிரம் அடிகள் உயரத்தில் இருக்கிறது. பனிப்பாறை களால் மூடப்பட்டிருக்கும் இந்த மலைச் சிகரம் கடுங்குளிர் கோட்டை என்று சொல்லலாம். உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள போர்க்களமும் சியாச்சின்தான்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இங்கே அடிக்கடி போர் நடக்கும். எதிரிகளின் தாக்குதல்களை சமாளிக்கும் தருணங்கள் போக மற்ற நேரங்களில் பனிப் புயலை, பனிச்சரிவுகளை தினமும் சந்திக்க வேண்டிய கட்டாயம் இந்திய ராணுவத்தினருக்கு உள்ளது. உயரம் காரணமாகவும், கடுங்குளிர் காரணமாகவும் சியாச்சின் பகுதியில் உயிர் வாயு எனப்படும் ஆக்சிஜனின் அளவு மிகவும் குறைந்தே இருக்கும். அதனால், எதிரிகள் அல்லது பேரிடர்கள் காரணமாக உயிரிழப்பதைவிடவும், சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் இறக்கும் ராணுவ வீரர்கள்தான் இரு தரப்பிலும் அதிகம். ஆக்சிஜன் சிலிண்டர்கள் சண்டிகர் நகரிலிருந்து "லே' மலைப்பாதை வழியாக அனுப்பப்படுகிறது என்றாலும் அவை உரிய நாளில் சியாச்சின் சென்றடையும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பனிப்புயல், பனிச்சரிவுகளும்தான் தாமதத்திற்கு காரணம்.
இப்படிப் பல கோணங்களில் கஷ்டப்படும் நமது ராணுவ வீரர்களின் இன்னல்களை எண்ணி வருத்தப்பட்டதுடன், அனுதாபப்பட்டதுடன் நிற்காமல், வீரர்களுக்கு ஆக்சிஜன் தயாரித்து சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்ய ஓர் ஆலையை சியாச்சின் பகுதியில் சுமார் பதின்மூன்றாயிரம் அடி உயரத்தில் உருவாக்குவதில் உதவ முன் வந்தவர் சுமிதா. இந்த ஆலையை நிர்மாணிக்க ஒன்றேகால் கோடி செலவாகும். தனது பங்களிப்பிற்காக சுமிதா ஒன்றேகால் லட்சம் வழங்கியுள்ளார். அந்தத் தொகைக்காக தனது நகைகளை விற்கவும் சுமிதா தயங்கவில்லை:
"இந்த ஆலையால் ஆக்சிஜன் ராணுவ வீரர்களை சென்றடைவதற்கு ஆகும் நேரமும், செலவும், கால தாமதமும் கணிசமாகக் குறையும். சுமார் 9 ஆயிரம் ராணுவ வீரர்கள் இந்த ஆலையால் பயன் பெறுவார்கள். 1999 லிருந்து ராணுவ வீரர்களின் நலனுக்காக என்னால் ஆனதைச் செய்துவருகிறேன். ஒருமுறை சியாச்சின் அடிவாரத்தில் இருக்கும் முகாமிற்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் அங்கு நிலவும் சூழல் பற்றி அனுபவ பூர்வமாகத் தெரிந்து கொண்டேன்.
கோடைகாலத்திலேயே சியாச்சின் அடிவார முகாமில் குளிரின் அளவு மைனஸ் முப்பத்தைந்து டிகிரி செல்ஷியஸ். குளிர்காலத்தில் அது மைனஸ் ஐம்பத்தைந்து வரை கீழே போகும். அடிவாரத்தில் இந்த சூழ்நிலை இருக்கும் போது , சியாச்சின் சிகரத்தில் பனித்திரையின் உக்கிரம் குறித்து சொல்லவே வேண்டாம். கால்கள் கட்டையாக மரத்துப் போகும். கவனக் குறைவாக இருந்தால் கண் பார்வை கூட போய்விடும். அங்கே சுவாசிப்பது இமாலய சாதனை.. சவால் என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு சிரமங்களை ராணுவ வீரர்கள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. நாட்டைக் காப்பதை மூச்சாகக் கருதும் ராணுவ வீரர்கள் மூச்சு விட்டு சுவாசிப்பதற்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்.
ஆக்சிஜன் ஆலை நிர்மாணிக்கத் தேவைப்படும் தொகையான ஒன்றேகால் கோடியுடன் ஒப்பிடும் போது எனது பங்களிப்பு ஒரு துளியாக இருக்கலாம். ஆனால் இது ஒரு தொடக்கம் மட்டும்தான். தேவைப்படும்போது நான் நன்கொடையை இனியும் தருவேன். நான் ஒரு பள்ளி ஆசிரியை. கணவர் இந்திய விமானப்படையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ராணுவ வீரர்களுக்காக நான் செய்து வரும் பங்களிப்பிற்கு பக்க பலமாக நிற்பவர். சியாச்சின் பகுதியில் இறப்பவர்களின் சுமார் எழுபது சதவீதம் ராணுவ வீரர்கள் அங்கே நிலவும் கடுங்குளிரினால்தான் உயிரை இழக்கிறார்கள். எனது மகனும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறான். அதனால் ராணுவ வீரர்களின் நலனில் அக்கறை காட்டுவது என் கடமையாகிறது. ஆக்சிஜன் ஆலை உருவாக்க ஆகும் தொகையைத் திரட்ட அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளேன். ஆளுக்கு ஒரு ரூபாய் நன்கொடை தந்தால் போதும். ஆக்சிஜன் ஆலை சியாச்சின் அடிவாரத்தில் உருவாகும்..'' என்கிறார் சுமிதா.
- அங்கவை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com