ஓய்வுக்கு விடை கொடுத்த தம்பதி!

பணி ஓய்வுக்குப் பின் வீட்டில் டிவி பார்ப்பதும், தூங்குவதுமாக பொழுதை கழிப்பவர்கள் மத்தியில் லஷ்மியும் அவரது கணவர் வீரமணியும் மிகவும் வித்தியாசமானவர்கள்.
ஓய்வுக்கு விடை கொடுத்த தம்பதி!

பணி ஓய்வுக்குப் பின் வீட்டில் டிவி பார்ப்பதும், தூங்குவதுமாக பொழுதை கழிப்பவர்கள் மத்தியில் லஷ்மியும் அவரது கணவர் வீரமணியும் மிகவும் வித்தியாசமானவர்கள். வீரமணி மல்டி நெஷனல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர், அவரது மனைவி லஷ்மி தென்னக ரயில்வேயில் 34 ஆண்டுகள் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர்களது இரு மகன்களில் ஒருவர் வெளிநாட்டிலும், ஒருவர் சென்னையிலும் இருக்கின்றனர். ஓய்வு காலத்தை வீணே தூங்கிக் கழிக்க மனமில்லாததால் கைவினைப் பொருள்கள் செய்வதை கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறார்கள். மேலும் ஸ்நாக்ஸ் அயிட்டமான பப்ஸ் , கேக், பிஸ்கட் தயாரிப்பதிலும் வீரமணி வல்லவர். இவர்களைச் சந்தித்தோம்:
 "நான் ஆரம்பகாலத்தில் பிரபல வனஸ்பதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தேன். நான் சேல்ஸ் மேன் என்பதால் எங்கள் நிறுவனத்தின் வனஸ்பதியை ஊர் ஊராக கொண்டு செல்வேன். வனஸ்பதியின் பயன்கள் மற்றும் எப்படி உபயோகப்படுத் த வேண்டும் என்பதையெல்லாம் அவர்களுக்கு விளக்க வேண்டும். இதனால் எங்கள் நிறுவனம் என்னை பெங்களூருக்கு பிஸ்கட், கேக், பப்ஸ் தயாரிக்கும் பயிற்சி வகுப்புக்கு அனுப்பி கற்றுக்கொடுத்தனர்.
 அதன்பிறகு நான் செல்லும் ஊர்களில் எல்லாம் நானே பப்ஸ் தயாரித்துக் காண்பிப்பேன். இதன் மூலம் எங்கள் வனஸ்பதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சென்னையில் வனஸ்பதி நிறுவனங்களுக்கான மீட்டிங் நடந்தது. அப்போது எங்கள் நிறுவனம் சார்பில் வனஸ்பதி வைத்து ஸ்நாக்ஸ் தயாரிக்கும் டெமோவில் நான் கலந்துகொண்டேன். அதில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக ட்விஸ்ட் பப்ஸும், அதிக அடுக்குகள் உள்ள பப்ஸýம் செய்து காண்பித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
 அதுபோன்று பப்ஸில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக கார பப்ஸில் மசாலா இல்லாமல் ட்விஸ்ட் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது. அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து. அதுபோன்று சில்லி பிஸ்கட் செய்தேன் அதற்கு அவ்வளவாக வரவேற்பு இல்லாமல் போனது. ஆனால் சில்லி பிஸ்கட்டுக்கு கும்பகோணத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு பல ஆண்டுகள் வரை கும்பகோணத்தில் சில்லி பிஸ்கட் தயாரிப்பில் இருந்ததை அறிந்து மகிழ்ந்தேன். இப்போது சில்லி பிஸ்கட் அங்கு இருக்கிறதா? என்பது தெரியவில்லை. பின்னர் படிப்படியாக எனக்கு பதவி உயர்வு கிடைத்தது. பணி ஓய்வு பெறும்போது மல்டி நெஷனல் நிறுவனத்தில் மேனேஜராக இருந்து ஓய்வு பெற்றேன்.
 என் மனைவி லஷ்மி தென்னக ரயில்வேயில் 34 ஆண்டுகள் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். ஓய்வு காலத்தை வீணே கழிப்பதில் எங்கள் இருவருக்கும் உடன்பாடில்லை. அதனால் பொழுதுபோக்குக்காக கைவினை பொருட்கள் செய்யும் பயிற்சி வகுப்பிற்கு சென்றோம். அங்கே சாஃப்ட் டாய்ஸ், கிப்ட் பாக்ஸ், ஜூட் பேக், லிக்விட் சோப், கெட்டி பீனாயில், மிதக்கும் மெழுவர்த்தி போன்றவற்றை தயாரிக்க கற்றுக்கொண்டோம். நாங்கள் கற்றுக்கொண்டதை வீட்டில் வந்து செய்து பார்த்தோம், நன்றாக வந்தது.
 தற்போது இருவரும் சேர்ந்து லிக்விட் சோப், மிதக்கும் மெழுகுவர்த்தி, ஜெல் மெழுகுவர்த்தி, கெட்டி பீனாயில் தயாரிப்பது போன்றவற்றை செய்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்தோம், நல்ல வரவேற்பு கிடைத்து. இதையடுத்து சுய தொழில் கற்றுக் கொண்டு வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நானும் என் மனைவியும் சேர்ந்து பயிற்சி வகுப்புகள் எடுக்கிறோம். இதன் மூலம் எங்கள் ஓய்வுக்காலம் மிக இனிமையாகவும், தனிமை இல்லாமலும் கழிகிறது'' என்றார்.
 - ஸ்ரீ
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com