சமையல்... சமையல்... 

வாழைப்பூ சீரகச் சம்பாக் கஞ்சி, சத்து நிறைந்த பாலக் நெய் சாதம், வங்காளி தேங்காய்ப் பப்பாளி லட்டு

வாழைப்பூ சீரகச் சம்பாக் கஞ்சி

தேவையானவை:
வாழைப்பூ இதழ் - 15
இஞ்சித்துருவல் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சீரகச் சம்பா அரிசி - கால் கிண்ணம்
பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - 1
கொத்துமல்லித்தழை - சிறிது
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: அரிசி, பாசிப்பருப்பை நன்றாக கழுவி நீரில் ஊற வைக்கவும். பின்னர், வாழைப்பூவை காம்பு நீக்கி நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். சின்னவெங்காயம், தக்காளி, கொத்துமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சீரகம், இஞ்சித் துருவல் போட்டு தாளித்தபின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இரண்டும் நன்றாக வதங்கியதும் அதில் வாழைப்பூ (மோரிலிருந்து எடுத்துப் பிழிந்து) சேர்த்து வதக்கி நீரில் ஊறவைத்த அரிசி, பருப்பு (நீரைவடிகட்டிவிட்டு) சேர்த்து கிளறவும். பிறகு உப்பு மற்றும் தேவையான நீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கி கொத்து மல்லித் தழை தூவிப் பரிமாறவும். சுடச்சுட வாழைப்பூ சீரகக்கஞ்சி ரெடி.
குறிப்பு: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், டயட்டில் இருப்பவர்கள் குடிக்க வேண்டிய கஞ்சி இது. இந்த கஞ்சி உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.
- சி. ஜெயலட்சுமி, செங்கற்பட்டு.

சத்து நிறைந்த பாலக் நெய் சாதம்

தேவையானவை: 
பாலக் கீரை - 4 கைப்பிடி அளவு
பாசுமதி அரிசி - அரை கிலோ
கேரட் - 50 கிராம்
நெய் - 6 தேக்கரண்டி
மிளகாய் - 4
பட்டை - சிறிய அளவு
கிராம்பு - 6
பிரிஞ்சி இலை - 2
முந்திரி பருப்பு - 10
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
உலர்திராட்சை - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: பாலக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பாசுமதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும் ( உதிரி உதிரியாக இருக்க வேண்டும்). வாணலியில் சிறிது நெய்விட்டு கீரையைப் போட்டு வதக்கி பின்னர் சிறிது நீர் ஊற்றி வேக வைத்து, உதிரி பதத்தில் எடுக்கவும். பின்னர், மீண்டும் வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி மிளகாய், கேரட், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் உதிரியான சாதம், வேக வைத்த கீரை, மீதமுள்ள நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடத்தில் இறக்கவும். பாலக் நெய்சாதம் தயார். இத்துடன் வெங்காய தயிர் பச்சடி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு: பாலக் கீரையில் தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் மிகுதியாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.
- மாலினி சத்தியன், பெங்களூரு.

வங்காளி தேங்காய்ப் பப்பாளி லட்டு

தேவையானவை:
தேங்காய்த் துருவல் - 2 கிண்ணம்
மிகப் பொடியாக நறுக்கிய பப்பாளிக்காய் - 1 கிண்ணம்
சர்க்கரை - முக்கால் கிண்ணம்
கொப்பரை தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
செய்முறை: நறுக்கிய பப்பாளிக்காயை வாணலியில் எண்ணெய் விடாமல் நன்கு வதக்கவும். பின்னர், 2 கிண்ணம் தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கவும். அத்துடன் சர்க்கரை சேர்த்து வதக்கவும். சர்க்கரை இளகிய நீர் முழுவதும் வற்றும் வரை வதக்க வேண்டும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி லேசாக ஆறவிட்டு, மிதமான சூடு வந்ததும் சிறுசிறு உருண்டைகளாக பிடிக்கவும். பின்னர், உருண்டைகளை கொப்பரை தேங்காய்த் துருவலில் புரட்டி எடுக்கவும். சுவையான தேங்காய் பப்பாளி லட்டு தயார். 
குறிப்பு: பப்பாளிக்காயில் வைட்டமின் ஏ, சி அதிக அளவில் உள்ளன. இது, சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும். பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு.

கோடைக்கேற்ற எலுமிச்சை ரசம் 

தேவையானவை:
வேக வைத்த துவரம் பருப்பு - 1 கிண்ணம்
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தாளிக்க: 
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
மிளகு- சீரகம், தனியா - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை - சிறிது
பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், நெய் ஊற்றி கடுகு , சீரகம் தாளிக்கவும். பின்னர், பச்சை மிளகாய் , பொடித்த இஞ்சி, தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர், வேகவைத்து மசித்தத் துவரம் பருப்பை தேவையான நீர் விட்டு கரைத்து சேர்க்கவும். அத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும், உப்பு, மிளகு சீரகப்பொடி, பெருங்காயப்பொடி, எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து கிளறி கொதிநிலை வந்ததும் இறக்கிவிடவும் (ரசம் கொதிக்கக் கூடாது). சுவையான எலுமிச்சை ரசம் தயார்.
குறிப்பு: எலுமிச்சை குளிர்ச்சி தன்மை உடையது. இதனால் கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை குறைக்கும் தன்மை இந்த ரசத்திற்கு உண்டு.
- கிரிஜா ராகவன், கோயம்புத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com