சவாலே சமாளி! 

சின்னத்திரையில் தனக்கென தனிமுத்திரைப் பதித்துள்ள ராடான் நிறுவனம் தற்போது "வாணி ராணி' தொடரில் 1500 எபிசோட் களையும், "தாமரை' தொடரில் 1000 எபிசோட்களையும் தாண்டி பயணம் செய்து கொண்டிருக்கிறது
சவாலே சமாளி! 

சின்னத்திரையில் தனக்கென தனிமுத்திரைப் பதித்துள்ள ராடான் நிறுவனம் தற்போது "வாணி ராணி' தொடரில் 1500 எபிசோட் களையும், "தாமரை' தொடரில் 1000 எபிசோட்களையும் தாண்டி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இந்த வெற்றி பயணம் குறித்து நடிகை ராதிகா நம்முடன் பகிர்ந்து கொண்டவை: 
1500 எபிசோட் என்பது சவாலான விஷயம்? ஒரு தயாரிப்பாளராக நிதி மேலாண்மை, நேர மேலாண்மை, நிர்வாக மேலாண்மையில் ஏற்படும் சவால்கள்? 
இந்த நீண்ட பயணம் என்பது கடுமையான உழைப்பு, அந்த உழைப்புக்கு கிடைத்த பரிசு. சவால் எல்லாவற்றிலும் இருக்கிறது. அதை எவ்வாறு நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். கஷ்டம் என்று நினைத்தால் நாம் எதையும் செய்ய முடியாது. எதையும் யோசித்து செய்தால் எவ்வளவு பெரிய சவால்களையும் எளிதில் கடந்துவிடலாம். ரிலாக்ஸ் ஆகி உட்கார்ந்து விட்டால் சோர்ந்து விடுவோம். அந்த உந்துதல்தான் நிதியாகட்டும், நேரமாகட்டும், நிர்வாகம் ஆகட்டும் எல்லாவற்றிலும் என்னை அடுத்தக்கட்டத்துக்கு இட்டுச் செல்கிறது. 
நிஜத்தில் நீங்கள் வாணியா? ராணியா? ராணி கேரக்டரில் நிறைய மருத்துவக் குறிப்புகளை வழங்குகிறீர்களே அதைப் பற்றி?
எனக்கே தெரியவில்லை. இரண்டிலும் எனது நிஜம் கலந்திருக்கிறது. மருத்துவக் குறிப்புகள் எல்லாம் உண்மை. தற்போது கூட திடீரென்று மூட்டு வலிப்பது போன்று தோன்றியது. உடனே முடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிட்டேன். தற்போது வலி பராவாயில்லை. நமது பாரம்பரியத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் நாம் இப்போதுள்ள நவீன வாழ்க்கையைத் தேடி அதையெல்லாம் தொலைத்துவிட்டோம். பாட்டி சொன்ன வைத்தியங்கள் எத்தனை இருக்கிறது. அவற்றையெல்லாம் கேலி பேசுகிறோம். ஆனால் அனுபவத்திற்கு எப்போதும் ஒரு மதிப்பு உண்டு. அதனால்தான் நமது பாரம்பரியத்தை ஞாபகப்படுத்தும்படியான கேரக்டராகத்தான் ராணி இருக்க வேண்டும் என்று நினைத்தோம். எல்லா பெண்களுக்கும் இப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று தெரியவேண்டும் என்று நினைத்தோம். 
உங்கள் இளமையின் ரகசியம்?
நான் ஹெல்த் விஷயத்தில் ரொம்பவும் கட்டுப்பாடு உள்ளவள். டயட் ஆகட்டும், யோகாவாகட்டும் எல்லாவற்றிலும் ரொம்பவும் கவனமாக இருப்பேன். அதற்காக அதிக கவனம் செலுத்துவேன் என்பது கிடையாது. தினசரி அதற்கான நேரங்களை எத்தனை வேலை பளூ இருந்தாலும் ஒதுக்கிவிடுவேன்.
சீரியல் சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லும்போது ஏற்பட்ட சவால்கள், நினைவுகள்?
சீரியல்தானே இதுபோதும் என்று நான் எப்போதும் நினைத்தது கிடையாது. ஒவ்வொரு நாளும் புதிதாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருப்பேன். அப்படி நினைத்ததில் உருவானதுதான் வெளிநாட்டில் சூட்டிங். ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது அந்த அனுபவம். ஆஸ்திரெலியாவில் சாலையில் சூட்டிங் எடுத்துக் கொண்டு இருக்கும்போது, அங்குள்ள தமிழர்கள் சிலர் என்னிடம் வந்து அடுத்து ராணிக்கு என்ன நடக்கப்போகிறது என்று விசாரித்தார்கள். அங்குள்ளவர்களும் "வாணி ராணி' பார்க்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.
நிர்வாகத்தைப் பொருத்தவரை உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் யார்?
என்னுடைய அலுவலகத்தில் இருக்கும் அத்தனைப் பேரின் உழைப்பும்தான் எனது நிர்வாகத்தின் பக்கபலம். என்னிடம் இருப்பவர்களில் பலரும் பல ஆண்டுகளாக இங்கு வேலை பார்ப்பவர்கள். அதுவே என் நிர்வாகத்திற்கு கிடைத்த சான்று. 
நிர்வாகத்தில் உங்கள் மகள், மகன் உதவி எப்படி இருக்கிறது?
ரெயான் எனக்கு நல்ல உதவியாகவும், பலமாகவும் இருக்கிறார். டிஜிட்டல் ஓர்க் எல்லாம் அவர்தான் பார்த்துக் கொள்கிறார்கள். மகன் ராகுல் படித்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் அவ்வப்போது ஐடியா எல்லாம் கொடுப்பார். வளர்ந்த பிறகு என்னவாகப் போகிறார் என்பது தெரியாது. பிள்ளைகளை பொருத்தவரை "உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதைச் செய்யுங்கள். ஆனால் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணாதீர்கள்' என்பதை மட்டும்தான் சொல்வேன். 
நடிகை ஸ்ரீதேவி பற்றி?
நிறைய படங்கள் ஸ்ரீதேவி கூட நடித்திருக்கிறேன். அவங்க இறந்தது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. "சிகப்பு ரோஜக்கள்' படத்தின்போதுதான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். திரைத்துறையைப் பொறுத்தவரை நான் பார்த்த ஹீரோயின்யின்களில் சிறந்த ஹீரோயின் என்றால் அது ஸ்ரீதேவிதான். குதிரைக்கு கடிவாளம் வைத்தமாதிரி அவரின் வேலையைத் தவிர வேறு எதுவும் அவருக்கு தெரியாது. மிகக் கடின உழைப்பாளி. அந்த உழைப்புக்கு தகுந்த வெற்றியும் அ வருக்கு கிடைத்தது. அவருக்கு எப்பவுமே இந்தியில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் விருப்பம். அப்போது நான் நடித்த சில இந்தி படங்கள் நன்றாக ஓடியது. அதனால் எனக்கு தொடர்ந்து இந்தியில் வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு மும்பை வாழ்க்கை செட்டாகவில்லை. அதனால் சென்னைக்கு போறேன்னு ஓடிவந்திட்டேன். அப்போ அவங்க சொல்வாங்க நல்ல ஹீரோயின் ரோல் எல்லாம் வருகிறது இதை மிஸ் பண்ணிட்டு போறீயேன்னு திட்டுவாங்க. 
உங்களின் ரோல்மாடல் யார்?
என்னுடைய அம்மாதான். சின்ன வயதில் நான் ரொம்பவும் விளையாட்டுத்தனமாக இருப்பேன். எனக்கு நடிக்கப் படிக்காது, என்னை ஒரு பாதையில் கொண்டு வர அவங்கப்பட்ட கஷ்டம் அதிகம். மற்றபடி ரோல்மாடல் என்றால் அது அமிதாப் பச்சன்தான். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். 
கமல், ரஜனி எல்லாம் அரசியலுக்கு வந்துவிட்டார்கள், நீங்கள் ஏற்கெனவே அரசியல் பின்னணியில் இருக்கிறீர்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்? இந்த சிஸ்டம் சரியில்லை என்று ரஜனி சொன்னதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ரஜனி சார் எதை அடிப்படையாக அப்படிச் சொன்னார் என்பது எனக்கு புரியவில்லை. மற்றபடி இருவருமே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது வரவேற்க வேண்டியதுதான். ஆனால் அவர்கள் வந்திருக்கிற நேரம்தான் சரியானதா என்பது தெரியவல்லை. இத்தனை ஆண்டுகள் எதுக்குமே அவர்கள் குரல் கொடுக்கவில்லை. இப்போது எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எல்லாம் கம்பேர் செய்றாங்க. அவர்கள் மக்களோட மக்களா வாழ்ந்தவர்கள், மக்களோட மக்களா நிறைய பயணம் செய்தவர்கள். ஜெயலலிதா பார்த்தீங்கன்னா கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும்போது ஒரு கிராமம் விடாமல் சென்று மக்களோட மக்களாக பழகினார்கள். எம்.ஜி.ஆர் நடிக்கிற காலத்திலிருந்தே மக்கள் மக்கள் என்று மக்களைப் பற்றித்தான் அதிகம் யோசித்தார். கலைஞரை எல்லாம் பார்த்திருக்கிறேன். அவர்களைப்போன்று லீடர் ஷிப் குணம் மெல்லாம் இனி யாரிடமாவது வருமா? என்பது தெரியவில்லை. நான் அவர்களை எல்லாம் பார்த்து வளர்ந்தவள். ஆனால், இவர்கள் அப்படி எதுவும் செய்யவில்லையே, ஒரு வகையில் விஜயகாந்த்தும் சரி, சரத்தும் சரி அவங்க நடிக்கும்போதே சமூக உணர்வுடன் இருந்திருக்காங்க. சரத்தை பொருத்தவரை "நாட்டாமை' படத்தில் நடிக்கும்போதே தேர்தல் பிரசாரத்திற்கு எல்லாம் போய் இருக்கிறார். விஜயகாந்தை பொருத்தவரை சாதாரண மக்களோடு பழகியவர். ஆனால் இவர்களை அப்படியெல்லாம் பார்த்ததே கிடையாது. இனிமேல் எப்படி செயல்படுவார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
சமீபத்தில் கலைஞரை சந்தித்துள்ளீர்கள் இது அரசியல் சார்ந்த சந்திப்பா?
நிச்சயமாக இல்லை. கலைஞரை பொருத்தவரை நான் ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறேன். அவர் உடம்பு சரியில்லாமல் இருக்கிறாரே என்ற மரியாதை நிமித்தமாகத்தான் சென்று பார்த்துவிட்டு வந்தோம். 
- ஸ்ரீதேவி குமரேசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com