வானமே எல்லை!

வீர சாகசங்களை பெண்கள் செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வானிலிருந்து குதிப்பது.. அதுவும் ஒன்பது கஜ சேலை உடுத்திக் கொண்டு குதிப்பது சாதாரண விஷயமல்ல.
வானமே எல்லை!

வீர சாகசங்களை பெண்கள் செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வானிலிருந்து குதிப்பது.. அதுவும் ஒன்பது கஜ சேலை உடுத்திக் கொண்டு குதிப்பது சாதாரண விஷயமல்ல. இந்த சாதனையை செய்திருக்கும் முதல் இந்திய பெண்மணி ஷீத்தல் ரானே மகாஜன். பூனா நகரைச் சேர்ந்தவர். இவர் விமானத்தில் பறந்து சென்று வானிலிருந்து குதிப்பதில் சாதனை படைத்திருப்பவர். முப்பத்தைந்து வயதாகும் ஷீத்தல் தனது சாதனை குறித்து பகிர்கிறார்:
 "வானில் 13,000 அடி உயரத்திலிருந்து குதிக்க வேண்டும். அப்படி இரண்டு முறை வெற்றிகரமாக குதித்து தாய்லாந்தின் பட்டாயா மண்ணில் வந்து இறங்கினேன். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுமையான சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று நினைத்திருந்தேன். புதுமையை சேர்ப்பதற்காக வழக்கமாக வானிலிருந்து குதிக்கும் வீரர்கள் வீராங்கனைகள் அணியும் சம்பிரதாய உடைகளை அணியாமல், ஒன்பது கஜ புடவையை அணிந்து கொண்டு குதித்தேன். புடவையைக் கட்டிக் கொண்டு குதிப்பதில் பல அசெüகரியங்கள் உண்டு. முதல் பிரச்னை. வானிலிருந்து குதிக்கும் போது காற்றின் சக்தியால் புடவை பறக்கும்.... அவிழவும் வாய்ப்புகள் உண்டு. அதனால் சில முன்னெச்சரிக்கையாக சேலை பறக்காமல் இருக்க கால் பக்கத்தில் பின்களை வைத்து நன்றாக இறுக்கிக் கொண்டேன்.
 எனக்குப் பயிற்சி அளித்த தாய்லாந்தின் பயிற்சியாளர் முதலில் முடியாது என்று மறுத்தாலும்... "சேலை அணிந்து குதிப்பது பொழுதுபோக்கிற்காக அல்ல.. சாதனை நிகழ்த்துவதற்காக' என்று எடுத்துச் சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன். பிறகு பாராசூட், தலைக்கு ஹெல்மெட், மூக்கு கண்ணாடி, ஷூ அணிந்து கொள்ள வேண்டும். முதல் முறை குதித்ததில் தரையில் இறங்கும் போது கொஞ்சம் தடுமாறிவிட்டேன். இரண்டாம் முறை எந்தக் குறையும் இல்லாமல் தரை இறங்கினேன். சேலை கட்டிக் கொண்டு வீட்டில், அலுவலகத்தில் வேலை செய்வதுடன், சேலை கட்டிக்கொண்டு வானிலிருந்து குதிக்கலாம். பாரம்பரிய இந்திய பெண்ணால் சேலையுடன் வானிலிருந்து குதிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த சாதனை'' என்கிறார் ஷீத்தல்.
 வானிலிருந்து குதித்தலில் ஷீத்தல் பதினெட்டு தேசிய சாதனைகளையும் ஆறு சர்வதேச சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். உலகம் முழுவதுமாக இதுவரை 704 முறை வானிலிருந்து குதித்திருக்கிறார். அதன் காரணமாக சர்வதேச விருதுகள் ஷீத்தலை வந்தடைந்திருக்கின்றன. ஷீத்தலுக்கு பத்மஸ்ரீ விருதும் 2011 - இல் வழங்கப்பட்டுள்ளது.
 "நான் முதன் முதலாக வானிலிருந்து குதித்தது 2004 - இல். வட துருவத்திலிருந்து எந்த பயிற்சியும் பெறாமல் குதித்தேன். ரஷ்ய விமானம் என்னை வானில் கொண்டு போய் விட்டது. 2400 அடி உயரத்திலிருந்து குதித்தேன். ஆனால் அப்போது குளிர் மைனஸ் 37 டிகிரி. காற்று வேகத்தில் குளிர் உடலை ஊசியாய் குத்தி நடுங்க வைக்கும். இந்த கடுங்குளிர் சூழலில் வானிலிருந்து குதித்த உலகின் முதல் பெண் நான்தான். இரண்டு ஆண்டுகளுக்குப் பின், சரியாகச் சொன்னால் 2006 டிசம்பர் 15 அண்டார்டிகாவின் வான் பகுதியிலிருந்து குதித்தேன். அங்கேயும் கடுங்குளிர்தான். வட தென் துருவங்களில் வானிலிருந்து குதித்த ஒரே பெண் என்ற பெருமையும் எனது 23 வயதிலேயே கிடைத்தது.
 "எனக்கு 2008- இல் திருமணம் ஆனது. கணவர் வைபவ் ரானே. ஃபின்லாந்தில் பொறியாளராக பணி புரிகிறார். திருமணம் நடந்ததும் வானத்தில்தான். வானில் பறக்கும் ராட்ஷச பலூனில் திருமணம் நடந்தது. பலூன் தரையிலிருந்து சுமார் 750 அடி உயரத்தில் புனா நகரின் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. புரோகிதரும் எங்களுடன் பறந்து கொண்டு மந்திரங்கள் ஓதி திருமணத்தை நடத்தி வைத்தார். வானத்தில் நடந்த இந்தியாவின் முதல் திருமணம் எங்களுடையதுதான். "வைபவ் எனக்கு கணவரானது ஓர் அபூர்வப் பொருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கும் வானத்திலிருந்து குதிக்கும் ஆர்வம் உண்டு. இதுவரை அவர் 57 தடவைகள் வானிலிருந்து குதித்திருக்கிறார். "கணவன் மனைவியாக ஒரு சேர வானத்திலிருந்து குதித்தால் என்ன' என்று யோசித்தோம். "நாம ஒண்ணா குதிக்கிறோம்..' என்று முடிவும் எடுத்தோம். 2011 நவம்பர் 11 அன்று இருவரும் ஒன்றாக வானிலிருந்து குதித்தோம். வானிலிருந்து குதிக்கும் முதல் தம்பதி என்ற சிறப்பும் எங்களுக்கு கிடைத்தது.
 எனக்கு ஒரே ஒரு ஆசை. இமயமலையின் சிகரமான எவரெஸ்ட்டின் வான்பகுதியிலிருந்து குதிக்க வேண்டும். 2010 - இல் இரண்டு முறை முயன்றும் அது வெற்றிகரமாக நிறைவேறவில்லை.
 "வானம்தான் எனக்கு எல்லை. வானத்திலிருந்து குதிப்பதுதான் எனது லட்சியம். ஆம்... கடந்த பத்து ஆண்டுகளில் ஏழு கண்டங்களின் வான் பகுதியிலிருந்து குதித்திருக்கிறேன். இந்த சாதனைக்காக இந்திய ஏரோ கிளப்பின் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசும் எனக்கு உதவுகிறது. அமெரிக்காவில் பயிற்சி பெற ஏற்பாடுகள் செய்து கொடுத்தது. எனக்கு விருதுகளாக இரண்டு மகன்கள். இரட்டையர்கள். ஒன்பது வயதாகிறது. அடுத்து எங்கிருந்து குதிக்கலாம் என்று யோசித்து வருகிறேன்...." என்கிறார் ஷீத்தல் ரானே மகாஜன்.
 - கண்ணம்மா பாரதி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com