தறி நடனத்தில் தனி பாணி! 

நெசவாளிகள் தயாரிக்கும் புடவைகளுக்கும் அதை வாங்கி உடுத்துபவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் வகையில் "தறி' என்ற பெயரில் நாட்டிய நிகழ்ச்சியொன்றை தயாரித்துள்ளார்
தறி நடனத்தில் தனி பாணி! 

நெசவாளிகள் தயாரிக்கும் புடவைகளுக்கும் அதை வாங்கி உடுத்துபவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் வகையில் "தறி' என்ற பெயரில் நாட்டிய நிகழ்ச்சியொன்றை தயாரித்துள்ளார், பெங்களூரைச் சேர்ந்த மாளவிகா சருக்கை.
 ஏழு வயதில் கல்யாணசுந்தரம் பிள்ளை, ராஜரத்தினம்பிள்ளை ஆகியோரிடம் பரத நாட்டியம் கற்றுக் கொள்ள தொடங்கிய மாளவிகா, பின்னர் கலாநிதி நாராயணனிடம் அபிநயம் கற்றுக் கொண்டார். இவரது நடன ஆர்வத்தை கண்ட கேலுசரண் மோஹபாத்ரா, ஒடிசி நடனத்தையும் கற்றுக் கொடுத்தார். 12 வயதிலேயே மேடை ஏறிய மாளவிகா, பின்னர் நாட்டியத்தில் தனக்கென்று தனிபாணிகளை உருவாக்கத் தொடங்கினார். இம்முயற்சிக்கு இவரது தாயாரும் உறுதுணையாக உதவி வந்தார்.
 1986- ஆம் ஆண்டு பரத நாட்டியத்தில் உள்ள இலக்கணம் மாறாமல் புதிய கருத்துகளுடன் நடன நிகழ்ச்சிகளை நடத்த நினைத்த இவர். முதல் முயற்சியாக தன் தாயாருடன் கலந்தாலோசித்து "கஜூரஹோ' வில் சிற்பங்களின் பெருமையை விளக்கும் வகையில் நடன நிகழ்ச்சியொன்றை தன் குழுவினர் உதவியுடன் மேடையேற்றினார். இந்த புதுமையான நிகழ்ச்சிக்கு வரவேற்பும், பாராட்டுகளும் குவிந்தன.
 தொடர்ந்து கடந்த 27 ஆண்டுகளாக பாரம்பரிய பரத நாட்டியத்துடன் பல கருத்துகளை நடன வடிவமாக்கி மேடையேற்றினார். ஒருமுறை இவரது சிநேகிதி பாமினி நாராயண், புடவை நெய்வது குறித்த தகவல் குறிப்பொன்னறை இவருக்கு அனுப்பி வைத்தார். அதை படிக்கும் போதே அதில் இருந்த வார்த்தைகளை வைத்தே நடன நிகழ்ச்சியொன்றை வடிவமைத்தால் என்ன என்ற எண்ணம் இவரது மனதில் தோன்றியது. உடனடியாக காஞ்சிபுரம் சென்று நெசவாளர்களின் வாழ்க்கை பின்னணி, தறிநெய்தல், எப்படி புடவை உருவாகிறது போன்ற தகவல்களை கண்டறிந்து சேகரித்தார்.
 ஏற்கெனவே தன்னைப் பற்றி ஆவண படமொன்றை தயாரித்த சுமந்தரா கோஷல் உதவியுடன் பருத்தி விதையிலிருந்து பஞ்சு உருவாகி நூலாக மாறி, நெசவாளி கையில் வண்ண வண்ண டிசைன்களில் தறியில் புடவையாக உருவாகி, பின்னர் பயனாளிகள் கைக்கு மாறுவதை மூன்று பகுதிகளாகப் பிரித்து தறி என்ற பெயரில் நடன நிகழ்ச்சியாக வடிவமைத்தார். தறி நெய்யும்போது ஏற்படும் ஓசை. அதற்கேற்ற இசையமைப்பு பார்ப்பவர்கள் மனதில் பதியும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் அமைத்து தர பல தொழில் நிபுணர்கள் இவருக்கு உதவினார். தறி மேடையேறியபோது இவர் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைக்கவே, தற்போது பல நகரங்களில் இவரது நடன நிகழ்ச்சிக்கு அழைப்புகள் அதிகரித்துள்ளன.
 இது குறித்து மாளவிகா கூறுகையில், "ஒரு புடவை நெசவாளர்களின் வாழ்க்கையை மட்டும் பிரதிபலிப்பதில்லை. அவர்கள் கைத்திறமையால் புடவையாக உருவாகி, வாங்கி உடுத்துபவருக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. இந்நிகழ்ச்சியை பார்த்தவர்கள் கூட ஒரு புடவைக்குள் இவ்வளவு தகவல்கள் அடங்கியிருக்கிறதா என்று பாராட்டியது எனக்கு நிறைவைத் தந்துள்ளது. இதனால் நாட்டியத்தின் மூலம் பல நல்ல சமூக கருத்துகளை மக்களுக்கு உணர்த்தலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியின் வெற்றிக்கு தொழில் கலைஞர்கள் மட்டுமின்றி நடனக்குழுவினர் ஒத்துழைப்பும்தான் காரணம்'' என்கிறார் மாளவிகா.
 - பூர்ணிமா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com