இந்தியாவின் அதிவேக மங்கை! 

இரண்டு படகில் பயணம் சாதனை என்றாலும் ஆபத்தும் உண்டு. ஸ்நேகா ஷர்மா இரண்டு தளங்களில் வெற்றிகரமாகப் பயணிப்பவர்.
இந்தியாவின் அதிவேக மங்கை! 

இரண்டு படகில் பயணம் சாதனை என்றாலும் ஆபத்தும் உண்டு. ஸ்நேகா ஷர்மா இரண்டு தளங்களில் வெற்றிகரமாகப் பயணிப்பவர். வான்வெளி... தரைவழி..!. பதினாறாவது வயதில் பந்தைய கார் ஓட்டும் லைசென்ஸ் பெற்றவர். இந்தியாவின் இன்றைக்கு அதிவேகத்தில் பறக்கும் மனுஷியும் ஸ்நேகாதான்..!. அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 "வேகம் நான் பிறந்தவுடன் என்னுடன் சேர்ந்து கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். சைக்கிளைக் கூட மிக வேகமாக ஓட்டத்தான் பிடிக்கும். எப்போதும் நெருக்கடியைத் தந்துவரும் மும்பை நகரின் போக்குவரத்து கூட எனது வேகத்திற்கு தடை போட முடியவில்லை. வாகனம் ஓட்டுவதில் எனது நண்பர்களை முந்திச் செல்வேன். இவை எல்லாம் தரையில். விமானம் ஓட்டும் விமானியாக காக்பிட்டில் அமரும் போது நான் வேறு ஒரு ஸ்நேகாவாக மாறிவிடுவேன். மிக கவனமாக விமானத்தை ஓட்டுவேன்.
 நான் விமானியானது 2012 -இல் என்றாலும், ரேஸ் கார் ஓட்டும் வீராங்கனை ஸ்நேகாவைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். "ரேஸ் கார் ஓட்டும் லைசென்ஸ் பதினாறு வயதில் எப்படி கிடைத்தது... வாகன லைசென்ஸ் பெற பதினெட்டு வயது நிறைவாகணுமே' என்று பலரும் என்னிடம் கேட்பார்கள். பந்தய மைதானத்தில் காரை ஓட்ட லைசென்ஸ் பதினாறு வயதில் வழங்குவார்கள். பந்தய களத்தில் காரை ஓட்ட மட்டுமே அனுமதி உண்டு. இந்த லைசென்ûஸ வைத்துக் கொண்டு நகருக்குள் அல்லது சாலைகளில் கார் ஓட்ட முடியாது. அதற்கு பதினெட்டு வயதாகியிருக்க வேண்டும். லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவில் நடக்கும் "ஃபார்முலா 4' கார் பந்தயத்தில் நான் மணிக்கு இருநூறு கி. மீ. வேகத்தில் பறந்திருக்கிறேன். இந்தப் போட்டியில் வேகத்துடன், விவேகமும் தேவை. அப்போதுதான் போட்டியாளரின் வேகம் விவேகத்தை அனுமானித்து அதற்குத் தகுந்த மாதிரி நமது ஓட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
 "2012-இல் நடந்த கார் பந்தயம் ஒன்றில் மணிக்கு 270 கி. மீ. வேகத்தில் காரை ஒட்டியுளேன். அதன் காரணமாக என்னை "இந்தியாவின் அதிவேக மங்கை' என்று அழைக்கிறார்கள். ஆண் போட்டியாளர்கள் ஒரு பெண் காரோட்டியிடம் தோற்க விரும்ப மாட்டார்கள். அதனால் பல சோதனைகளை ரேஸ் நடக்கும் போது காண்பிப்பார்கள். இவற்றையெல்லாம் எதிர் கொள்ள வேண்டும்.
 ரேஸ் கார் ஓட்டுவது மிகவும் செலவு வைக்கும் விளையாட்டு. ஸ்பான்சர் கிடைக்கவில்லை என்றால் செலவைத் தாங்க முடியாது. எனது அடுத்த குறி ஃபார்முலா 3 ரேஸ் கார் பந்தயம்.
 பிறந்தது கொல்கொத்தாவில். படித்தது வளர்ந்தது மும்பையில். சிறுவயதில் அப்பாவுடன் நிறைய கப்பல் பயணம் செய்திருக்கிறேன். அப்பாவுக்கு வணிகக் கப்பலில் வேலை. அதனால் நீரில் பயணம் செய்து வளர்ந்தேன். இப்போது வான் பயணம் மற்றும் தரையில் விரைவுப் பயணங்களை நிகழ்த்தி வருகிறேன். கடலில் கப்பலில் பயணம் செய்கிற போது வானில் பறக்கும் விமானங்களை அண்ணாந்து பார்த்திருக்கிறேன். பயணிக்கும் கப்பலின் கேப்டனாக ஆசைப்படவில்லை. ஆனால் பறக்கும் விமானத்தை ஓட்டும் விமானியாக வேண்டும்... ரேஸ் காரை ஓட்டும் வீராங்கனையாக வேண்டும் என்று இரண்டு கனாக்களை காணத் தொடங்கினேன். வீட்டில் விமானி ஆக வேண்டும் என்று சொல்லி ஒப்புதலும் வாங்கிவிட்டேன். விமானம் ஓட்டியாக லைசென்ஸ் அமெரிக்காவில் எடுத்துக் கொண்டேன்.
 விமானியா.. ரேஸ் கார் வீராங்கனையா என்றால் நான் கொஞ்சமும் யோசிக்காமல் ரேஸ் கார் பக்கம் வந்துவிடுவேன். விமானத்தை மணிக்கு எழுநூறு கி. மீ வேகத்தைவிட அதிகமாக ஓட்டினாலும், ரேஸ் கார் மீது காதலோ காதல். கார் ரேஸ்சில் எனக்கிருக்கும் ஈடுபாடு குறித்து பெற்றோருக்கு கொஞ்சம் திகில். அவர்களிடம் பொய் சொல்லி ரேஸ் கார் பயிற்சி பெற்று வந்தேன். அது தெரிந்ததும் பெற்றோர் வருத்தப்பட்டார்கள். இரண்டு கார் ரேஸ்களில் பங்கெடுக்க என்னை அனுமதிக்கவில்லை. என் பிடிவாதம் கண்டு பின்னர் அவர்களின் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டார்கள். இதுவரை இருபத்திரண்டு கார் ரேஸ்களில் பங்கு பெற்றுள்ளேன். நான் விமானியாக வேலை செய்யும் தனியார் விமான நிறுவனம் எனது ரேஸ் கார் முயற்சிகளுக்கு ஆதரவு தந்து வருகிறது.
 விமானம் ஓட்டுவதிலும், ரேஸ் கார் ஓட்டுவதிலும் பிசியாக இருப்பதால் தனியாக உடல் பயிற்சிகள் ஏதும் செய்வதில்லை. பதினான்கு தள கட்டடத்தில் படிகள் வழியாக ஏறி இறங்குகிறேன். பதினாறு வயதில் தொண்ணூறு கிலோ எடை எனக்கு. இப்போது முப்பது கிலோ குறைத்திருக்கிறேன். அளவான சாப்பாடு. சர்க்கரையை விலக்கி ஆண்டுகள் பல ஆகின்றன. எனக்கு இருபத்தெட்டு வயதாகிறது.
 சுயமுன்னேற்றம் குறித்து நம்பிக்கை வளர்ப்பதற்காகவும் உரையாற்றி வருகிறேன். வாகன பந்தய வாரியத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக்க நியமனம் பெற்றுள்ளேன். சென்னை, "விட்' பல்கலைக் கழக ரேஸ் கிளப்பிற்கும் ஆலோசகராக இருக்கிறேன். எனது அல்டிமேட் கனவு "ஃபார்முலா 1' ரேஸில் பங்கெடுப்பதுதான். இந்தப் பந்தயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம வாய்ப்புகள் தரப்படுகின்றன. சர்வதேச அளவில் ரேஸ் கார் ஓட்டும் பெண் ஓட்டிகள் மிகவும் குறைவாக உள்ளனர். இந்த சூழ்நிலையில் ஃ பார்முலா 1 பந்தயத்தில் நான் கலந்து கொண்டால்..? நினைத்தாலே சிலிர்க்கிறது'' என்கிறார் ஸ்நேகா ஷர்மா.
 - கண்ணம்மா பாரதி
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com