பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது! 

கோட்டூர்புரம் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டாள். இவரை, "ஆட்டோ ஆண்டாள்' என்றால் அந்தப் பகுதியில் அனைவருக்கும் தெரியும்.
பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது! 

கோட்டூர்புரம் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டாள். இவரை, "ஆட்டோ ஆண்டாள்' என்றால் அந்தப் பகுதியில் அனைவருக்கும் தெரியும். 17 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் ஆண்டாள். தனிமைத் தாயாக இருந்து தனது மகளை வளர்த்து பயோ மெடிக்கல் வரை படிக்க வைத்திருக்கிறார். ஆண்டாள் கடந்து வந்த பாதை குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
" திடீரென்று கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட, என் குழந்தையின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்தது. அதனால், எங்கள் வீட்டிற்கு அருகில் லோடு வண்டி வைத்திருந்த ஒரு பெரியவரிடம் சென்று ஏதாவது வேலை இருக்குமா என்று கேட்டேன். "லோடு வண்டியில் நீ என்னம்மா வேலை செய்வ' என்றார். பின் சூழலைப் புரிந்து கொண்டு "கிளீனராக இருக்கிறாயா' என்று கேட்டார். சரி என்றேன். தினமும் வண்டியை துடைக்க வேண்டும். காலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து காய்கறி லோடு ஏற்றி வர அவருடன் செல்ல வேண்டும். தினமும் 50 ரூபாய் சம்பளம் தருவார்.
ஒரு கட்டத்தில், "50 ரூபாய்க்காக இப்படி கஷ்டப்படுவதைவிட, ஆட்டோ ஓட்டினால் உனக்கு அதிகமாக வருமானம் கிடைக்கும் என்றார் பெரியவர். அது என் மனதில் பதிந்துவிட, எப்படியும் ஆட்டோ வாங்கிவிட வேண்டும் என்று சிறிது சிறிதாக 10 ஆயிரம் ரூபாயைச் சேர்த்தேன். என் அம்மாவை துணைக்கு அழைத்துக் கொண்டு, ஆட்டோ எடுக்கச் சென்றேன். பெண் என்பதால், எங்குச் சென்றாலும் ஆட்டோ தர மறுத்தார்கள்.
இந்நிலையில், எங்கள் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவரது பழைய ஆட்டோவை விற்றுவிட்டு, புது ஆட்டோ வாங்குவதை அறிந்து அவரிடம் அந்த பழைய ஆட்டோவை வாங்கினேன்.
அதுவரை ஆட்டோ ஓட்டி எனக்கு பழக்கமில்லை. ஆனால், ஆட்டோவை வீட்டிற்கு கொண்டு வர வேண்டுமே? அதனால் அவரிடமே ஆட்டோ எப்படி ஸ்டார்ட் செய்ய வேண்டும், கிளட்சை எப்படி மாற்ற வேண்டும் என்பதையெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டேன். அதற்கு முன்பு நான் பஜாஜ் எம்.ஐ.டி வண்டியை ஓட்டியிருக்கிறேன். அதில் கிளட்ச் போட்டு ஓட்டிய பழக்கமிருந்ததால், அந்த வண்டியை ஓட்டுவது போன்று நினைத்துக் கொண்டு ஆட்டோவை வீட்டுக்கு ஓட்டி வந்தேன்.
பின்னர், தினமும் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு சவாரிக்கு செல்வேன். அதுவரை ஆட்டோ ஓட்டியதே இல்லை என்பதே எனக்குத் தோன்றவில்லை. சர்வ சாதாரணமாக ஆட்டோவை ஓட்டினேன். இப்போது, நினைத்துப் பார்த்தால் அது நான்தானா என்று ஆச்சரியமாக இருக்கிறது. அன்றைய சூழ்நிலைதான் எனக்கு அந்த தைரியத்தை கொடுத்தது. கோழையாக இருந்திருந்தால் நான் என்னவாகியிருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை.
ஆரம்பத்தில் ஆட்டோவில் ஏறுவதற்கு அனைவரும் பயப்படுவார்கள். பெண் ஆட்டோ ஓட்டினால் பத்திரமாக கொண்டுபோய் சேர்ப்பாளா என்ற பயம். அது ஒருபுறம் என்றால் எங்கள் பகுதியில் உள்ளவர்கள் என்னை ஏளனமாக பார்ப்பார்கள். புறம் பேசுவார்கள். மனது உடைந்து போவேன். ஆனால், எந்த நிலையிலும் என் தைரியத்தை மட்டும் இழக்கவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சவாரி கிடைக்க ஆரம்பித்தது.
ஆனால், ஆட்டோ ஸ்டாண்டில் சேர்க்க மாட்டார்கள். அதனால், ஸ்டாண்டில் நிறுத்தாமல் கொஞ்சம் தள்ளிச் சென்று நிற்பேன். ஒரு கட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக கேட் அருகே நிற்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் என்னை அங்கே நிற்க அனுமதித்தார்கள். தற்போது, 17 ஆண்டுகளை கடந்து வந்துவிட்டேன். என் மகளை பயோ மெடிக்கல் வரை படிக்க வைத்துள்ளேன். சொந்தமாக எங்களுக்குன்னு ஒரு வீடும் வாங்கிவிட்டேன். எல்லாம் கனவு மாதிரி தோன்றுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக "ஓலா' ஆட்டோ ஓட்டி வருகிறேன். இன்று பெண்கள் அதிக நம்பிக்கையோடு வந்து என் ஆட்டோவில் ஏறுகிறார்கள். பாதுகாப்பாகவும் உணருகிறார்கள். எல்லாவற்றுக்கும் காலச் சூழல்தான் காரணம்'' என்கிறார்.
- ஸ்ரீதேவி குமரேசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com