ஸ்டெம் செல்: உயிர் காக்கும் அற்புதம்! 

உடல் உறுப்புகள், ரத்த தானம் போன்று இப்போது ஸ்டெம் செல் தானம் பேசப்படுகிறது. ஸ்டெம் செல் தானம் செய்பவருக்கும் அதை பெறுபவருக்கும் இந்த செல்லின் அமைப்பு எல்லா வகையிலும்
ஸ்டெம் செல்: உயிர் காக்கும் அற்புதம்! 

உடல் உறுப்புகள், ரத்த தானம் போன்று இப்போது ஸ்டெம் செல் தானம் பேசப்படுகிறது. ஸ்டெம் செல் தானம் செய்பவருக்கும் அதை பெறுபவருக்கும் இந்த செல்லின் அமைப்பு எல்லா வகையிலும் பொருத்தமாக ஒன்று போல இருக்க வேண்டும். ஆனால் இது அபூர்வத்திலும் அபூர்வமாக அமையும் பொருத்தமாகும். கோடியில் சிலர் மட்டுமே ஸ்டெம் செல்களை தானமாகப் பெறமுடியும். ஒன்றுபோலான ஸ்டெம் செல்கள் கிடைப்பது அரிதிலும் அரிது என்பதினால், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை அதில் இருக்கும் ஸ்டெம் செல்களுக்காக மருத்துவ ரீதியாக சேமித்து வைக்கச் சொல்கிறார்கள். குழந்தை வளரும் போது எந்த வகை நோய் வந்தாலும் தொப்புள் கொடியில் ஸ்டெம் செல்களை புதுப்பித்து குணப்படுத்திவிடலாம். ஒருவரது எலும்பு மஜ்ஜையை நோயாளிக்கு செலுத்தியும் ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கலாம். இந்த சிகிச்சை முறை நோயைக் குணப்படுத்தும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இன்றைய நவீன மருத்துவத்தின் அறிய கண்டுபிடிப்பு ஸ்டெம் செல்கள் மூலம் புற்று நோய் முதலான குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்தலாம் என்பதுதான்.
 பெண்களும் ஸ்டெம் செல்களை தானம் செய்யலாம் என்று செய்து காட்டியிருக்கும் முதல் பெண் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். ஸ்டெம் செல்களைத் தானம் செய்து ஐந்து வயது இலங்கையைச் சேர்ந்த சிறுமியை காப்பாற்றி மறுவாழ்வு தந்திருக்கிறார், திருச்சியை அடுத்துள்ள பச்சபெருமாள்பட்டியைச் சேர்ந்த டாக்டர் கண்மணி கண்ணன். கண்மணி மருத்துவம் படிக்க கொச்சி எர்ணாகுளத்தில் இருக்கும் "எய்ம்ஸ்" (எய்ம்ஸ்) மருத்துவக் கல்லூரிக்கு வந்த மாணவி. வந்த இடத்தில் ஸ்டெம் செல் தானத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு தன் பெயரைப் பதிவு செய்தார்.
 மீதியை டாக்டர் கண்மணி விளக்குகிறார்:
 "ரத்தப் புற்றுநோய், சிவப்பணுக்கள் குறைபாட்டால் உருவாகும் "தாலசீமியா', வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், தட்டணுக்கள் குறைபாட்டால் ஏற்படும் "ஏபிளாஸ்டி அனீமியா' போன்ற நோய்களுக்கு நம்பகமான சிகிச்சை ஸ்டெம் செல்கள் மூலம் குணப்படுத்துவதுதான். நோயாளிக்குப் பொருத்தமான "ஸ்டெம் செல்'கள் தானமாகக் கிடைத்தால் அவரது நோய் முழுமையாகக் குணமாகிவிடும். ஆனால் நோயாளிக்குப் பொருத்தமான ஸ்டெம் செல்கள் கிடைப்பது குதிரைக் கொம்பு. அதுபோன்று, ஸ்டெம் செல் தானம் செய்ய முன்வருபவர் பதினெட்டு முதல் ஐம்பது வயதுக்குள் இருக்க வேண்டும்.
 பச்சபெருமாள்பட்டி தான் எனது சொந்த ஊர். அப்பா டாக்டர். அம்மா பள்ளி ஆசிரியை. கொச்சி}எர்ணாகுளத்தில் உள்ள "அம்ருதா' மருத்துவக் கல்லூரியில் நுழைவுத் தேர்வு எழுதி தகுதியின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிக்க என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். இரண்டாம் ஆண்டு படிக்கும் போதுதான் , "ஸ்டெம் செல்' பற்றியும் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சைகள் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஸ்டெம் செல்கள் கொண்டு பல தீராத நோய்களைத் தீர்க்க முடியும். ஸ்டெம் செல்கள் கடவுள் கொடுத்த வரம் என்று தெரியவர, நாமும் ஸ்டெம் செல்களை தானம் செய்வோம். தீரா நோயினால் அல்லல்படுபவர்களுக்கு உதவுவோம் என்று முடிவு செய்தேன். ஸ்டெம் செல்கள் தானம் செய்வதை ஊக்கப்படுத்தும் "தாத்ரி' அமைப்பில் எனது பெயரைப் பதிவு செய்தேன்.
 ஸ்டெம் செல் தானம் செய்யவும் கொடுப்பினை வேண்டும். ஸ்டெம் செல்கள் தனித்தன்மை கொண்டவை. ஒருவரது ஸ்டெம் செல்கள் இன்னொருவரது ஸ்டெம் செல்கள் போலிருக்காது. பத்து லட்சம் பேரில் ஒருவருக்குத்தான், வேறொருவரின் ஸ்டெம் செல்கள் பொருந்தும். ஒருவர் ஸ்டெம் செல்களைத் தானம் செய்ய பதிவு செய்திருந்தாலும் அவர் தானம் செய்ய வாய்ப்பு கிடைக்காமலே போய்விடலாம். நான் பதிவு செய்தாலும், அப்படித்தான் எனக்கும் இரண்டு ஆண்டுகள் ஓடின. அழைப்பு ஏதும் வரவில்லை.
 "சென்ற ஆண்டு அந்த அழைப்பு வந்தது. ரத்த அணுக்கள் தொடர்பான "தாலசீமியா' நோய் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி பெங்களூருவில் மருத்துவ சிகிச்சை பெற்றுவர, அந்தச் சிறுமிக்கு எனது ஸ்டெம் செல்கள் கச்சிதமாகப் பொருந்துகின்றன என்று உமிழ் நீர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அந்த சிறுமி சிகிச்சைக்காக இலங்கையிலிருந்து குடும்பத்துடன் பெங்களூரு மருத்துவமனையில் இருந்தார்.
 "உமிழ் நீர்' பரிசோதனை என்பது ஸ்டெம் செல் தானம் செய்பவரின், அதை பெறுபவரின் உமிழ் நீரை எடுத்து பரிசோதனை செய்தால், அவரவர் ஸ்டெம் செல்லின் அமைப்பு பற்றி தெரியவரும். தானம் செய்பவர் தனக்கு வேண்டிய ஸ்டெம் செல்களை வைத்துக் கொண்டு, நோயாளிக்குத் தேவையான ஸ்டெம் செல்களை உடலினுள் உற்பத்தி செய்ய வேண்டும். அதற்காக சில மருந்துகளை நான் உட்கொள்ள ஆரம்பித்தேன். அந்த மருந்துகளில் சில பின்விளைவுகள் உண்டு. அது தெரிந்துதான், தானத்திற்கு சம்மதித்தேன்.
 ஸ்டெம் செல்களை சேகரிப்பது கிட்டத்தட்ட டயாலிசிஸ் செய்வது மாதிரிதான். ஒரு தமனியிலிருந்து ரத்தம் எடுத்து மெஷின் வழியாக செலுத்தி ஸ்டெம் செல்களை பிரித்து எடுத்துவிட்டு மீண்டும் இன்னொரு தமனி வழியாக உடலுக்குள் ரத்தத்தை செலுத்துவார்கள். உடலில் எலும்பில் நல்ல வலி ஏற்படும். சேகரிக்கப்பட்ட செல்களை பெங்களூருக்கு அனுப்பி அங்கே, அந்த இலங்கைச் சிறுமிக்கு செலுத்தினார்கள். இது நடந்தது 2017 ஏப்ரல் மாதம். எனது ஸ்டெம் செல்லை அந்தச் சிறுமியின் உடல் ஏற்றுக் கொண்டதா என்று கண்காணிப்பார்கள். 2018 ஏப்ரலில் எனது ஸ்டெம் செல்களை அந்தச் சிறுமியின் உடல் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது என்று ஆய்வுகள் நிரூபிக்க... அந்த சிறுமி தாலசீமியா நோயிலிருந்து முழு விடுதலை பெற்றதாக மருத்துவரீதியாக அறிவிப்பு வெளியானது. அதற்குள், நான் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சொந்த ஊர் வந்து அப்பாவுடன் சேர்ந்து டாக்டராக சேவை செய்து வருகிறேன். ஸ்டெம் செல் தானம் குறித்த விழிப்புணர்ச்சியை கேரள பெண்களிடையே பரப்பவும், எனது ஸ்டெம் செல்களைத் தானமாகப் பெற்ற இலங்கைச் சிறுமியின் பெற்றோர் என்னைச் சந்தித்து நன்றி சொல்ல விரும்பியதால், கொச்சி அம்ருதா மருத்துவக் கல்லூரியில் ஒரு "சந்திப்பை' ஏற்பாடு செய்திருந்தார்கள். நானும் பெற்றோருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
 சந்திப்பின்போது, இலங்கைச் சிறுமி ஸ்ரீமல்லி பாலசூர்யாவுடன் சந்திப்பு நிகழ்ந்தது. "தாலசீமியா' நோய் பாலசூர்யாவுக்கு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டபோது அவளுக்கு வயது இரண்டு. தொடர்ந்து சுமார் இரண்டரை ஆண்டுகள் பதிநான்கு நாட்களுக்கு ஒரு முறை புதிய ரத்தம் செலுத்தி காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். ஸ்டெம் செல் சிகிச்சைக்காக பெங்களூரு வந்து பாலசூர்யாவும் ஸ்டெம் செல்களுக்களைப் பெற பெயரைப் பதிவு செய்ய... நல்ல நேரம் எனது ஸ்டெம் செல்கள் பாலசூரியாவுக்குப் பொருந்த... பாலசூரியாவுக்கு மறுபிறவி கிடைத்துள்ளது. அவளது பெற்றோர் கண்களில் தளும்பும் கண்ணீருடன் நன்றி சொன்னார்கள். எனது தங்கையாக பாலசூரியாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். பாலசூரியாவுக்கு அவளது பழைய ரத்தப் பிரிவு போய், எனது ரத்தப் பிரிவிற்கு வந்துவிட்டாள். அந்த வகையில். பாலசூரியா எனது தங்கைதானே...
 கேரளத்தில் ஸ்டெம் செல்களைத் தானம் செய்த முதல் பெண் நான் என்பதால், என்னைப் பற்றி ஊடகங்கள் எழுதின. அதன் வீச்சு அமெரிக்க வரை போய் அங்கிருந்து ஒரு அமெரிக்கக்காரர் பாராட்டினார். "எனது மனைவியைப் புற்றுநோய் காவு வாங்கிவிட்டது. ஸ்டெம் செல்கள் மூலம் சிகிச்சை அளித்தாலும் பயன் தரவில்லை. மனைவி இறந்ததும் நான் ஸ்டெம் செல் தானம் குறித்து பரப்புரை நடத்தி வருகிறேன். நீங்களும் ஸ்டெம் செல் குறித்த விழிப்புணர்வை இந்தியாவில் பரப்பவேண்டும் இந்த வேண்டுகோளை இறந்து போன என் மனைவி உங்கள்முன் வைப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்' என்று கேட்டுக் கொண்டார்'' என்கிறார் டாக்டர் கண்மணி.
 - பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com