"அம்மா' எனும் தெய்வத்தைக் கொண்டாடுவோம்! - டாக்டர் சுதா சேஷய்யன்

தினமணி மகளிர்மணியில் வெளிவந்த தொடர் "அம்மா'. இத்தொடரில் பிரபலங்கள் தங்களது அம்மா குறித்த நினைவுகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
"அம்மா' எனும் தெய்வத்தைக் கொண்டாடுவோம்! - டாக்டர் சுதா சேஷய்யன்

தினமணி மகளிர்மணியில் வெளிவந்த தொடர் "அம்மா'. இத்தொடரில் பிரபலங்கள் தங்களது அம்மா குறித்த நினைவுகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இத்தொடர் "அம்மா' என்கிற பெயரிலேயே நூலாக வடிவம் பெற்றது. இதன் வெளியீட்டு விழா அன்னையர் தினம் மே}13 அன்று சென்னை, நாரதகான சபா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்ற, நடிகர் சிவகுமார் நூலை வெளியிட, டாக்டர் சுதா சேஷய்யன் பெற்றுக் கொண்டார்.
 "அம்மா' தொடரில் எழுதியிருந்த 28 பிரபலங்களின் சார்பாக, டாக்டர் சுதா சேஷய்யன் பேசியது:
 "நம்முடைய இலக்கியங்களிலும், புராணங்களிலும் இருக்கக் கூடிய தாய்மார்கள் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள். கலீல் ஜிப்ரான் தனது கவிதையொன்றில், "ஒவ்வொருவர் வீட்டிலும் கடவுள், தான் இருக்க முடியாது என்பதற்காகவே தாயை அனுப்பினான்' என்று எழுதியிருப்பார். ஆனால், கடவுளுக்குக் கூட என்ன ஆசை தெரியுமா... தான் தாயாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. அதனால்தான் "தாயுமானவர்' என அவர் கூடத் தாயாக இருக்க முயற்சி செய்திருக்கிறார்.
 கம்பராமாயணத்தில் ஒரு பாட்டு இருக்கிறது. விராடன், இராமனைப் பார்த்து துதிப்பதாக ஒரு அற்புதமான பாட்டு .. அந்த பாடலில் விராடன் சொல்லுவான்... இராமனைப் பார்த்து "உலகின் தாயாகி அய்ய..' அவன் இராமா என்று சொல்லவில்லை. உலகின் தாயாகி அய்ய... ஆண் வடிவத்தில் நிற்கின்ற இராமனை,
 இராமபிரானே என்று கூப்பிடவில்லை. உலகின் தாயாகி அய்ய என்றான். உலகத்திற்கே தாயாகியவனே என்றான்... அப்படியென்றால் கடவுளுக்குக் கூடத் தாயாக இருக்க வேண்டும் என்கிற ஆசைதான் அதிகம்.


 அதே இராமாயணத்தில், கம்பராழ்வாரின் காவியத்தில். ஒரு தாயைப் பற்றிச் சொல்லக் கூடிய ஒரு சொல் உண்டு. அந்தச் சொல் எல்லா தாய்மார்களுக்கும் பொருந்தும். அது... சுமித்ரைக்கு குழந்தை பிறக்கிறது. அவளது முதல் குழந்தை இலக்குவன் அது நமக்கு தெரியும். இலக்குவனுக்கு இளையவன் என்றொரு பெயர் உண்டு. அந்த இளையவன் பிறந்ததும் கம்பன் என்ன எழுதுகிறான் தெரியுமா? "இளையவற் பயந்தனள் இளைய மென்கொடி' என்று. ஒரு குழந்தை பிறந்தால்.. குழந்தையை "தாய்ப் பெற்றாள்' என்று சொல்லலாம். இல்லை... இலக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் "ஈன்றாள்' என்று சொல்லலாம். ஆனால், கம்பர் என்ன சொல்லுகிறார் தெரியுமா... பயந்தாள்... பயத்தல்.. அதி அற்புதமான சொல். "பயத்தல்' என்றால் "கொடுத்தல்' என்று பொருள். இளைய மென்கொடி, இளையவன் பயந்தாள். அதாவது, இளையவனைப் பெறவில்லை... இளையவனை கொடுத்தாள் என்கிறார். இளையபெருமானைப் பொருத்தவரை எப்போதும் இராமனோடு இருந்தவர். சுமித்ரையின் இன்னொரு மகன் சத்ருகனன் எப்போதும் பரதனோடு இருந்தவன்.
 இந்தப் பிள்ளைகளை அவள் தனக்கென்று பெற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எந்தக் காலத்திலும் அவளுக்கு உதவியாக இருக்கப் போவதில்லை. அடுத்தவர்களுக்கு மாத்திரமே உதவியாக இருக்கப்போகிறார்கள் என்று நினைத்தோ... என்னவோ... கம்பர் "கொடுத்தாள்' என்று முதலிலேயே எழுதினார்.
 அதில்.. சுமித்ரையைப் போன்று ஒரு தாயை எங்குமே பார்க்க முடியாது. இராமன் கானகம் புறப்பட வேண்டும். அம்மா! கானகம் புறப்படுகிறேன் என்று கோசலையிடம் சொன்னான். கோசலை அழுதாள். ஏற்கெனவே கைகேயியிடம் சொல்லியாகிவிட்டது. அவள்தான் போகும்படி ஆணையிட்டாள். எஞ்சியிருப்பது, சுமித்ரை. சுமித்ரையிடம் சொல்லுவதற்காக போனான். இராமன் போனபோது, உடன் போனவன் இளையவன்,
 இளையவனுக்கு மனதிற்குள்ளே ஒரு சின்ன குறுகுறுப்பு... அண்ணனோடு தானும் கானகம் போக வேண்டும். ஆனால், சிக்கல், காட்டுக்கு போக வேண்டுமென்றால் பெற்றவரிடத்தில் அனுமதி வாங்க வேண்டும். அதுதான் முறை. ஏதாவது சாபத்தால் கானகம் போனால் அனுமதி வாங்க வேண்டாம். ஆனால், அப்படியில்லாமல் அவர்கள் கானகம் போக வேண்டும் என்றால் பெற்றோரிடத்தில் அனுமதி வாங்க வேண்டும். அப்பாவிடத்தில் அனுமதி வாங்குகிற நிலைமை இப்போது இல்லை. ஆனால், தாயிடத்திலாவது சொல்லிவிட்டு போக வேண்டும். வந்து நிற்கிறான். அண்ணனோடு வந்து நிற்கிறான். அவனுக்குள் சின்ன குறுகுறுப்பு... அம்மாவிடத்தில் போய் "அம்மா நான் அண்ணனோடு கானகம் போகிறேன்' என்று சொன்னால்.. ஒரு சராசரி தாய் என்ன செய்வாள். போக அனுப்ப மட்டாள்.. "அவனுக்குதானே கைகேயி சொன்னாள், உனக்கில்லையே.. நீயேன் போகிறாய்' என்று அந்தத் தாய் தடுப்பதற்கான வாய்ப்பு உண்டு. எப்படியாவது அவள் தடுப்பாள்... அவள் தடுத்தால் போக முடியாது. அவள், தடுக்காமல் அனுமதி தர வேண்டுமே, என வழி தெரியாமல்... மனதில் குறுகுறுப்புடன் நிற்கிறான், தவிக்கிறான்.
 கைகேயி கொடுத்தனுப்பிய மரவுரிகள் வருகின்றன. மரவுரிகளில் ஒன்று எடுத்து அணிந்து கொண்டு தாயின் கால்களில் போய் விழுகிறான்.
 சுமித்ரை பேசுகிறாள்... தன் காலில் விழுந்த மகனை தூக்கினாள். தூக்கிவிட்டுச் சொன்னாள்... "இனிமேல் உனக்கு அந்த வனம்தான் வழி... அவ்வனம் நீ வணங்கும் தெய்வம்.. இனிமேல் உனக்கு தசரதன் யார் தெரியுமா? இராமன். இனிமேல் உனக்கு தாய்மார்கள் யார் தெரியுமா? ஜனகனுடைய மகளாக இருக்கிறாளே அந்த சீதை. இவ்வழி நிற்பதும் தவறு. இனிமேல் நீ இங்கே நிற்கக் கூடாது... புறப்படு' என்றாள். அம்மா அனுமதிப்பாளா என்று தவிக்கிற இலக்குவனுக்கு எப்படி இருந்திருக்கும் இந்த வார்த்தைகளை கேட்டவுடன்.
 இதோடு அவள் நிறுத்தவில்லை. புறப்படு என்று சொல்லுபோதே இன்னொன்றும் சொன்னாள்... "தம்பி என்னும் படியன்று அடியாரின் ஏவல் செய். (நீ புறப்பட்டு போகும்போது நீயும் இந்த நாட்டின் இளவரசன் என்று நினைத்து போகாதே... அப்படி நினைத்தால் உனக்கு வசதிகளை கேட்கத் தோன்றும்... அதனால் அவனுடைய அடிமையாக போ...' என்றாள்.
 இதோடு அவள் நிறுத்தவில்லை.. இதற்குபிறகு இன்னொன்றும் சொன்னாள்.. "மண்ணும் நகர்க்கே அவன் வந்திடில் வா... இல்லையெனில் முன்னம் முடி... 14 வருஷம் கழித்து அவன் திரும்பி வந்தான் என்றால் அவன் கூட வா.. இல்லையென்றால் அவனுக்கு முன்னால் மடிந்து போடா' என்றாள்... இப்படி ஒரு அம்மா இருக்க முடியுமா? இதென்ன அம்மாவா! அம்மாவின் மனசு இப்படி கல் மனசா.. அப்படி இல்லை.. தாய் என்பவள் எப்போதுமே எங்கே நன்மையிருக்கிறதோ.. எங்கே தர்மம் இருக்கிறதோ... எங்கே செயல் வீரம் இருக்கிறதோ.. அங்கே தன்னுடைய மகனும் இருக்க வேண்டும் என்று ஆசைபடுபவள்.
 தன்னுடைய மகனோ, மகளோ எந்த காலத்திலேயும் தப்பான இடத்துக்கு போகக் கூடாது என்று நினைப்பவள். அதனால்தான் பல நேரங்களிலே தன்னுடைய பிள்ளையோ.. பெண்ணோ தப்பு செய்துவிட்டால்... என்ன சொல்லுவாள் தெரியுமா... "சகவாச தோஷம்...' என் பிள்ளை இதை பண்ணியிருக்கமாட்டான். கூட இருந்தவன் கெடுத்திருப்பான். காரணம், அவள் மனசுகுள்ளே எப்போதுமே தன்னுடைய பிள்ளை நல்ல இடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஆசை.
 தனக்கு எந்த துன்பம் வந்தாலும்... தன்னுடைய பிள்ளையும், பெண்ணும் அந்த துன்பத்தின் சாயலில் விழுந்துவிடக் கூடாது என்கிற மனம்தான் அம்மாவின் மனம்.
 நான் என்னிடம் இருந்தே ஒரு உதாரணம் சொல்கிறேன்... கடைசி மூன்று, நான்கு ஆண்டுகளாக நான் வெளியூர் போவதை நிராகரித்தேன், மறுதலித்தேன். எங்கே போனாலும் இரவு வந்துவிட வேண்டும். அம்மா கூட இருக்க வேண்டும். அம்மாவோடு இருக்க வேண்டும் என்பதை, அந்த உணர்வை ரொம்ப தாமதமாகத்தான் நான் உணர்ந்தேன். என்று நான் நம்புகிறேன். இன்னும் சில ஆண்டுகளுக்கு முன்னாலேயே எனக்கு ஒரு புத்தி வந்திருக்கக் கூடாதா என்று இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன்.
 பல ஆண்டுகள், பல இடங்களுக்கு, பல வெளியூர்களுக்கு, வெளிநாடுகளுக்கு போனபோதெல்லாம். என் அம்மாவிடம் ஒண்ணு சொல்லுவேன். "அம்மா நான் போகிற ஊரின் முக்கியமான டெலிபோன் நெம்பர், முகவரி எல்லாம் எழுதி வெச்சிருக்கேன்' என்பேன். ஆனால், அவர் அதை கண்டு கொள்ளவே மாட்டார்.
 காது கொடுத்து கேட்வே மாட்டார். ஒரே ஒரு பதில் மட்டும்தான் எப்போதும் வழக்கமாகச் சொல்லுவார்.. "இருக்கட்டும்' . நான் மீண்டும் சொல்வேன். "அம்மா ஏதவாது "எமர்ஜென்சி' என்றால் கூப்பிட வைத்திருக்கிறேன்' என்பேன். அதற்கு அவர் சொல்லுவார், "எந்த எமர்ஜென்சியும் வர வேண்டாம் என்று பகவான்கிட்ட வேண்டிக்கிறேன் நீ போய்ட்டு வா' என்பார். இதுதான் எப்போதும் அவரது பதில். ஏதாவது எமர்ஜென்சி ஏற்பட்டு அதற்காக நீ என்னைப் பார்க்க ஓடி வர வேண்டும் என்கிற நிலை வரக் கூடாது. நீ நிம்மதியாக போய்விட்டு வா... நான் போன் பண்ணமாட்டேன் என்பார்... நான் போன் பண்ணினால் அங்கே நீ போய் இருக்கிற வேலை பாதிக்கும், குழப்பம் வரும், நீ வர வேண்டும் என்ற தவிப்பு வரும் அதனால் நான் போன் பண்ணமாட்டேன் என்பார். அதுபோன்று போன்பண்ணவும் மாட்டார். அப்படி ஒரு நிலை ஏற்படாது.. பகவான் பார்த்துக் கொள்வார். அதுதான் ஒரு தாயின் மனது.
 தன்பொருட்டு எந்த துன்பமும், எந்த சலனமும் தன்னுடைய குழந்தைகளுக்கு வரக்கூடாது என்று நினைக்கக்கூடிய தாயின் மன நிலையை, அதுபோன்ற மன நிலையை எல்லாரும் உணர்ந்து கொண்டால் அதன்பின்னர், தாய்மார்களை தவிக்க விடக்கூடிய சூழல் வந்துவிடாது. தாயை தள்ளி வைக்க வேண்டும் என்று நினைக்கும் சூழல்களும் ஏற்படாது.
 தாயிற் சிறந்த கோயிலும் இல்லை... என்கிற நிலையில் இருக்கும் அந்த தாயை தவிக்க விடக் கூடாது.
 ஒவ்வொருவருக்கும் அவரவர் அம்மா ஒசத்திதான். பிரபலங்களின் தாய்மார்கள் என்றில்லை. பிரபலம் இல்லாதவர்களின் தாய்மார்களும் கூட ஒசத்திதான், சிறந்தவர்கள்தான்.
 ஒவ்வொரு அம்மாவும், ஏதோ ஒரு விதத்திலே சிறந்தவர்தான்... நாம சில சமயங்களில் நினைப்போம். என் அம்மா கண்டிப்பானவளாக இருந்தாள், என் அம்மா என்னிடம் பேசுவதில்லை, என் அம்மா என்னைப் பார்க்கவே இல்லை.. என்றெல்லாம் சொல்லியிருப்போம். இதற்கு பின்னால் ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கும். அது அந்தத் தாய்க்குத்தான் தெரியும்.
 குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு போவது சாதாரண விஷயம் இல்லை. ஆனால், அந்த சமயத்தில் கூட "என் அம்மா என் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டாள்' என்று எத்தனை பேர் எழுதியிருந்தார்கள் அம்மா தொடரில். அதனால் ஒவ்வொரு அம்மாவும் உயர்ந்தவள்தான். தெய்வம் தான். அந்த தெய்வத்தை அவரவர் உள்ளங்களிலாவது கோயில் வைத்து கொண்டாடுவோம். அந்த தாயை எவ்வளவு நல்லவிதமாக நாம் பார்த்துக் கொள்ள முடியுமோ, அப்படி பார்த்துக் கொள்வோம்'' என்றார்.
 - ஸ்ரீதேவி குமரேசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com