திருமணங்கள்: அன்றும் இன்றும்!

அன்னை கஸ்தூர்பா காந்தியின் 150-ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் சென்னை, "தக்கர் பாபா வித்யாலயா' வில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் கஸ்தூர்பா குறித்த ஏதேனும்
திருமணங்கள்: அன்றும் இன்றும்!

அன்னை கஸ்தூர்பா காந்தியின் 150-ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் சென்னை, "தக்கர் பாபா வித்யாலயா' வில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் கஸ்தூர்பா குறித்த ஏதேனும் ஒரு தலைப்பில் கலந்துரையாடல் நடத்துவது என்று முடிவெடுத்துள்ளனர். இந்த மாதம், "திருமணம் -அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் காந்திஜி, கஸ்தூரிபாய் இருவரின் வாழ்க்கையையொட்டி நடைபெற்ற கலந்துரையாடல் கருத்துச் செறிவோடு இருந்தது . இந்த கலந்துரையாடலில் லூசியா, சென்னை உயர் நீதி மன்றம், காந்தி மையத்தின் பொறுப்பாளர் பிரேமா, வழக்கறிஞர் மீனா குமாரி, தொழிலதிபர் உஷா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பிரேமா அண்ணாமலை, (காந்தி மையத்தின் பொறுப்பாளர்): திருமணம் என்பது ஆண்-பெண் சம்பந்தப் பட்டது என்பதைத் தாண்டி, அதுவொரு சமுதாயம் சார்ந்த நிகழ்வு. திருமணத்தைப் பொருத்தவரை அன்றும், இன்றும் பல சடங்குகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் "திருமணம்' என்ற நிகழ்வு எல்லோருடைய வாழ்விலும் நிகழவேண்டும். என்னைப் பொருத்தவரை திருமணம் செய்து கொண்டு சமுதாயம், பெருமிதம் கொள்ளும் வண்ணம் வாழ்ந்து காட்டுவது தான் ஒவ்வொருக்கும் சவால். அதற்கான எடுத்துக்காட்டாக காந்தி - கஸ்தூரிபாவின் வாழ்க்கை. இருவருக்கும் 13வது வயதிலேயே திருமணம் நடைபெற்றது. அக்காலக்கட்டத்தில் பால்ய விவாகம் என்பது சமுதாய வழக்கு. அதனால் திருமணம் என்பது ஏன், எதற்கு அதன் தாத்பர்யம் என்ன என்பதெல்லாம் தெரியாமல் சேர்ந்து விளையாட ஒரு தோழி, தோழன் கிடைத்துவிட்டதாக நினைத்தார்கள். அடுத்து வந்த காலங்களில் மனைவி என்பவள் கணவன் சொல்படி கட்டாயம் கேட்கத்தான் வேண்டும் என்று காந்தி நினைத்தார். ஆனால், தனக்கு விருப்பமானதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கஸ்தூரிபாவிற்கு இருந்தது. அன்பும் பாசமும்தான் அவர்கள் இருவரையும் இறுதிவரை இணைபிரியாமல் வைத்திருந்தது. 
காந்தியடிகளைப் பொருத்தவரை கணவன், மனைவி உறவு என்பது.. not made for each other...it is complementary to each other''. ஒருவருக்கொருவர் இணையாக, துணையாக, நிறைவாக இருப்பதுதான். அப்படித்தான் காந்தி-கஸ்தூரிபா உறவு இருந்தது. காந்தியடிகளைப் பொருத்தவரை அவர் வெளிநாட்டிற்கு சென்று படித்தவர். உலக ஞானம் கொண்டவர். அவர், தனது மனைவிக்கும் உலக விஷயங்களை சொல்லித் தரவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அம்மையாரோ, அவற்றைத் தெரிந்துக் கொள்வதைவிட தனது கணவனை சரியாகப் புரிந்துக் கொண்டார். தன் கணவர் தன் மீது கொண்ட அதீதமான அன்பு என்ன என்பதும் நன்றாக புரிந்து வைத்திருந்தார். அதனால் தான் அன்பின் மூலம் எல்லாரையும் எந்தவிதமான ஏற்றதாழ்வும் பார்க்காமல் அவர் செய்த வேலை வெறும் கஸ்தூரி என்றிருந்தவரை கஸ்தூரி"பாவாக மாற்றியது. தன் ஊண், உயிரோடு தன் கணவரது நாட்டுக்கான பணியை ஏற்றுக் கொண்டார். இப்படிப்பட்ட எண்ணங்கள் உடைய இருவரும் இணைந்து கடைசி வரை வாழ்ந்தார்கள் என்பதே மிகவும் சிறப்பான ஒன்று. இதுதான் இன்றைய தலைப்பிற்கு சரியான உதாரணம் என்று நான் நினைக்கிறேன்.
லூசியா, (சென்னை உயர் நீதி மன்றம்): கஸ்தூரிபா மிக சிறிய வயதில் திருமணம் செய்து கொண்டவர். விளையாட்டுப் பருவம் . தனது கருத்துகளை சொல்லுவதில் உறுதியாக இருந்தவர். கணவருடைய குறிக்கோளை, லட்சியத்தைப் புரிந்து கொண்டவர். அதற்கு துணை நின்றவர். நான்கு ஆண் குழந்தைகளையும் பெற்று, அனைவரையும் அன்பாக வளர்த்தவர். ஆசிரமத்தை நிர்வகித்தவர். சிறந்த கணக்காளர். கணவரின் கருத்துகளையும் கோட்பாடுகளையும் குறிக்கோளையும் முன்னிறுத்தி தனது வாழ்வை நடத்திச் சென்றவர். அவர் இறந்தபோது அவரது உடலை தனது மடியில் ஏந்திய காந்திஜி, "இவள் இல்லாத என் வாழ்வை நினைத்துப் பார்க்க முடியவில்லை'' என்றார். "Behind every successful man there is a woman' என்று சொல்வது காந்தியின் குடும்பத்திற்கு மிகப் பொருந்தும். அன்றும் இன்றும் என்று சொல்வதை விட என்றும் இப்படி ஒரு திருமண வாழ்க்கை அமைந்தால் யார்தான் மகிழமாட்டார்கள்.
மீனா, (வழக்கறிஞர்): திருமணத்தில் சப்தபதி எனும் சடங்கிணைப் பற்றி கூற வேண்டும். இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். கணவன் மனைவி இருவரும் ஏழு அடிகளை இணைத்து எடுத்துவைத்து ஆண்டவனை பிரார்த்திக்கும் போது, "எங்களுக்கு ஆரோக்கியமான உணவை தா : கஷ்ட நஷ்டங்களில் இருவரும் சேர்ந்திருப்போம், வாழ்க்கையில் அனைத்தையும் பகிர்ந்துக்கொள்வோம் என்று சபதம் மேற்கொண்டு திருமண பந்தத்தில் இணைகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் அனைவரும் இணைந்து பல மணி நேரம் ஒன்று கூடி, ஒன்றாக சமைத்து, ஒன்றாக உணவு உண்டு கருத்துகளை, எண்ணங்களை பரிமாறிக்கொண்டனர். அதனால் ஒரு புரிதல் இருந்தது. ஆனால், இன்றைய சூழலில், ஆர்டர் செய்த, யாரோ சமைத்த உணவினை தனித்தனியாக - கைப்பேசியையோ அல்லது தொலைக்காட்சியினைப் பார்த்துக் கொண்டே உண்ணும் பழக்கமே உள்ளது. இதில் புரிதல் எங்கிருந்து தோன்றும் ? அன்றைக்கு வாழ்ந்த வாழ்க்கையில் சில மாற்றங்களும், இன்றைக்கு பல மாற்றங்களையும் நாம் செய்தாக வேண்டிய நிலை இருக்கிறது.
உஷா (தொழிலதிபர்): "காந்தி சுயசரிதையில் கூறுகிறார் "நான் எனது மனைவி மீது அதிகாரத்தை செலுத்தும் ஒரு கணவனாக இருந்தேன். அவள் எழுதப்படிக்க தெரியாதவள் என்பதால் அவளை படி என்று கட்டாயப்படுத்தியுள்ளேன்; கருத்துவேறுபாட்டினால் பல நாட்கள் இருவரும் பேசிக்கொள்ளாமலேயே இருந்தோம்'' என்றுக் கூறுகிறார். கஸ்தூரிபா துன்புறுத்தல்களை மௌனமாக தாங்கிக்கொண்டு, கணவர் என்றேனும் திருந்திவிடுவார் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார். 
காந்தியும் ஒரு கட்டத்தில் தன் தவற்றினை உணர்ந்து "என் மனைவி தான் எனக்கு சத்தியாகிரகத்தை சொல்லிக்கொடுத்த குரு'' என புகழ்கிறார். இன்றைய மனைவிகளும் தங்களது கணவர்கள் திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறார்கள்; ஆனால் ஆண்களில் பலர் "இவள் எனது மனைவி, இவளால் என்னை மீறி எங்கும் போய்விட முடியாது; நான் என்ன செய்தாலும் இவள் என் காலடியில்தான் கிடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் திருமண வாழ்க்கையில் அமைதி உருக்குலைந்துப் போகிறது. கணவனும் மனைவியும் விட்டுக்கொடுத்து, ஒருவர் மீது ஒருவர் மரியாதையை செலுத்தினால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். 
- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com