மணிபென் எனும் மணியான பெண்மணி!

இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்குக் காரணமானவர் என்று அறியப்படுபவர் வர்கீஸ் குரியன். "அமுல்' என்கிற கூட்டுறவு பால் உற்பத்திச் சங்கத்தை நிறுவி, சர்வதேச அளவில் புகழ் தேடித் தந்தவர். இந்திய அரசால் "பத்ம விபூஷண்' விருது வழங்கி கெüரவிக்கப்பட்டவர்.
 "எனக்கும் ஒரு கனவு இருந்தது' என்பது வர்கீஸ் குரியன் எழுதிய தன் வரலாற்றுப் புத்தகம். இந்தப் புத்தகத்தில் 33, 38, 39 பக்கங்களில் சர்தார் வல்லபாய் படேலின் மகள் மணிபென் படேலுடனான அவரது சந்திப்புகளையும், அனுபவங்களையும் பதிவு செய்திருக்கிறார். தனது இறுதி மூச்சுவரை, தனது தந்தையாரைப் போலவே தனது கெüரவத்தையும், சுயமரியாதையையும் பாதுகாத்தவர் மணிபென் படேல் என்று குறிப்பிடுகிறார் வர்கீஸ் குரியன்.
 கடைசிவரை, காங்கிரஸ் தலைமையிடமோ, எந்தவொரு காங்கிரஸ் தலைவர்களிடமோ அவர் உதவி கோரவேயில்லை. தனது இறுதிக் காலத்தில் மணிபென் படேல் வறுமையில்தான் தனது வாழ்நாளைக் கழித்ததாக வர்கீஸ் குரியன் குறிப்பிடுகிறார்.
 ஆறு வயதிலேயே தனது தாயை இழந்த மணிபென் படேல், தனது பெரியப்பா விட்டல் பாய் படேலிடம்தான் வளர்கிறார். மகாத்மா காந்தி தொடங்கிய குஜராத் வித்யா பீடத்தில் பட்டம் பெற்ற மணிபென், அண்ணல் காந்தியடிகள், தந்தை வல்லபாய் படேலுடன் பர்சாத் போராட்டத்திலும், பர்தோலி சத்தியாகிரகத்திலும், கஸ்தூரிபாய் காந்தியுடன் ராஜ்கோட் சத்தியாகிரகத்திலும் கலந்து கொண்டவர். ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம் ஆகியவற்றில் பங்கெடுத்து சிறையிலடைக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.
 அண்ணல் காந்தியடிகளின் சேவையிலும், தந்தை சர்தார் வல்லபாய் படேலுக்கு உறுதுணையாகவும், அவர்களது இறுதிக் காலம்வரை இருந்த மணிபென் படேல், தனது கையால் நெய்த கதர் ஆடைகளைத்தான் கடைசிவரை அணிந்து வந்தார். சுதந்திரத்துக்குப் பின்பு, முதல் இரண்டு தேர்தல்களில் மக்களவைக்கும், 1964-இல் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மணிபென், இந்திரா காந்தி அரசின் அவசரநிலைச் சட்டத்தை எதிர்த்துக் காங்கிரஸிலிருந்து வெளியேறினார். 1977-இல் ஜனதா கட்சியின் சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மணிபென் படேல் எழுதிய "சர்தார் படேல் குறித்த நாட்குறிப்பு', குஜராத்தியில் புத்தக வடிவம் பெற்று ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. 1990-இல் மணிபென் படேல் காலமானபோது அவருக்கு வயது 87. கண் பார்வை மங்கி விட்டிருந்தது. அப்போதெல்லாம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. அப்படியே இருந்திருந்தாலும் மணிபென் படேல் அதை ஏற்றுக் கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே!.
 திருமணம் செய்து கொள்ளாமல் ஆமதாபாதில் தனியாக வாழ்ந்த மணிபென் படேலை சந்திக்கக்கூட எந்தவொரு காங்கிரஸ் தலைவரோ, தொண்டரோ வருவதில்லை. தனியாக ஆமதாபாத் வீதிகளில் நடந்து செல்லும்போது, பார்வைக் குறைவால் அவர் கால் இடறி விழுந்ததுண்டு. வழிப்போக்கர்கள் யாராவது அவருக்கு உதவி வீட்டில் கொண்டுபோய் விடுவார்கள். அப்போதுதான் தாங்கள் உதவியது சர்தார் படேலின் மகளுக்கு என்பதே அவர்களுக்குத் தெரியும்.
 "எனக்கும் ஒரு கனவு இருந்தது' புத்தகத்தில் காணப்படும் வர்கீஸ் குரியனின் பதிவு இதுதான் - மணிபென் படேல் என்னிடம் தெரிவித்த உண்மைச் சம்பவம் இது:
 "எனது தந்தையார் சர்தார் வல்லபாய் படேலின் மறைவைத் தொடர்ந்து, அவருடைய நோட்டுப் புத்தகம் ஒன்றையும், ஒரு கைப்பையையும் எடுத்துக்கொண்டு பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவைச் சந்திக்கச் சென்றேன். மரணத் தருவாயில் என்னை அழைத்து ""இவை இரண்டையும் பிரதமர் நேருவிடம் நேரில் போய் ஒப்படைக்கும்படி எனது தந்தையார் தெரிவித்திருந்தார், அதை வேறு யாரிடமும் கொடுத்துவிடக் கூடாது'' என்றும் கூறியிருந்தார்.
 அந்தப் பையில், காங்கிரஸ் கட்சி நன்கொடையாகப் பெற்றிருந்த கட்சிப் பணம் ரூ.35 லட்சம் இருந்தது. அந்த நோட்டுப் புத்தகத்தில் கட்சியின் கணக்கு வழக்குகள் இருந்தன. அவற்றைப் பெற்றுக் கொண்டு, நேரு "தன்யவாத்' (நன்றி) என்று கூறினார். அவர் மேலும் ஏதாவது கூறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எதுவும் பேசவில்லை. அவருக்கும் எனது தந்தை சர்தார் படேலுக்கும் இடையேயான உறவு கசந்திருந்ததால், பண்டித நேரு அதற்கு மேல் என்னிடம் பேச விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டு நானும் எதுவும் பேசாமல் திரும்பிவிட்டேன்' என்று என்னிடம் தெரிவித்தார்.


 "இனி என்ன செய்யப் போகிறாய்? உனக்கு அப்பா இல்லாத குறை இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று பிரதமர் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைக்கூடச் சொல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. அதை மணிபென் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை.
 மணிபென் தனது இறுதிக் காலத்தைத் தனிமையில்தான் கழித்தார். சர்தார் வல்லபாய் படேலையே மறந்து விட்டிருந்த காங்கிரஸ்காரர்கள், அவரை எப்படி நினைவில் வைத்திருப்பார்கள்? மணிபென் மரணத் தருவாயில் இருக்கிறார் என்று தெரிந்தபோது, அன்றைய குஜராத் முதல்வர் சிமன்பாய் படேல் புகைப்படக்காரருடனும், பத்திரிகையாளர்களுடனும் ஓடோடி வந்தார். அவரது தலைமாட்டில் நின்றபடி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அடுத்தநாள் அந்தப் புகைப்படம் எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்தது.
 வர்கீஸ் குரியனின் "எனக்கும் ஒரு கனவு இருந்தது' புத்தகத்தில் காணப்படும் விழியில் நீர்கோக்கும் இந்தப் பதிவு மணிபென் படேல் போன்று மெழுகுவர்த்தியாக வாழ்ந்து மறைந்தவர்களின் தியாகத்தை எடுத்தியம்புகிறது.
 - சத்தீஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com