அரசியலுக்கு பெண்கள் அதிக அளவில் வரவேண்டும்!

இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனத்தின் ( ஃபிக்கி) மகளிர் பிரிவு சார்பில் "அரசியலும் - கவிதையும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது
அரசியலுக்கு பெண்கள் அதிக அளவில் வரவேண்டும்!

இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனத்தின் ( ஃபிக்கி) மகளிர் பிரிவு சார்பில் "அரசியலும் - கவிதையும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தி.மு.க எம்.பி கனிமொழி பேசியது:
 "பெண்கள் அமைப்போடு, தமிழ்நாடு சேம்பர்ஸ் அமைப்பின் பெண்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் கலந்து கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சுயதொழில் தொடங்குவதற்காகவும் இந்த அமைப்பு நிறைய பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. நாடளவில் பெண்கள் முன்னேறுவதற்கும், தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும், சொந்த காலில் நிற்பவர்களாகவும் அவர்களை மாற்றுவதற்கு இந்த அமைப்பின் பங்கு அளப்பரியது'' என்றார். பார்வையாளர்களின் கேள்விகளில் சில...
 அரசியலும் - கவிதையும் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
 கவிதை என்பது நமக்குள்ளே இருக்கக் கூடிய அரசியலை வெளிப்படுத்தும் வாகனமாகத்தான் நான் பார்க்கிறேன். ஒவ்வொரு கவிதைக்கு பின்னாலயும் ஒ ரு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. காதல் கவிதைகளில் கூட அதற்கான ஒரு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. அதனால், அரசியலையும், கவிதைகளையும், கலையையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. அப்படி அரசியல் நீக்கப்பட்ட எந்தவொரு கலை வடிவத்திற்கும் அர்த்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
 அரசியலும் - பெண்களும் உங்கள் பார்வையில்?
 எல்லா பொறுப்புகளில் பெண்கள் நிறைய வர வேண்டும் என்பது எனது ஆசை. தற்போது, பெண்கள் ஓரளவு அனைத்து துறைகளிலும் பரவலாக இருக்கிறார்கள். உதாரணமாக பத்திரிகை துறையை எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு காலகட்டத்தில் பத்திரிகை துறையில் பெண்களே இல்லாத நிலையை நானே பார்த்திருக்கிறேன். அந்த நிலை தற்போது மாறி பத்திரிகை துறையில் பெண்கள் அதிகம் வந்திருப்பதையும் பார்க்கிறேன். ஆனால், அதே சமயம் ஒரு தொலைக்காட்சியின் தலைவராகவோ, எடிட்டராகவோ, பத்திரிகையின் எடிட்டராகவோ பெண்கள் அதிகம் இல்லை. அந்த இடத்திற்கும் பெண்கள் வரவேண்டும். அதுபோலத்தான் அரசியலிலும் பெண்கள் நிறைய வர வேண்டும். கட்சியின் தலைவராகவோ, மாவட்ட செயலாளராகவோ ஆணுக்கு சரிசமமாக பதவிகளிலும், பொறுப்புகளிலும் பெண்கள் வரவேண்டும்.
 இன்றைக்கு பாராளுமன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் எத்தனை பெண்கள் அரசியலில் பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மத்திய காபினெட்டை எடுத்துக் கொள்ளுங்கள், ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கக் கூடிய காபினெட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். மாநில முதலமைச்சர்களை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள். அரசியல் என்பது, ஒரு நிறுவனத்திற்கு சென்று 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு வருவதுபோன்ற வேலை இல்லை. அரசியல் என்பது 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டிய வேலை. அதனால் ஒரு பெண் தன்னுடைய நேரத்தையும், தன்னுடைய வாழ்க்கையையும் பல விஷயங்களில் பங்கு போட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. அந்த சூழல் ஆண்களுக்கு இருப்பதில்லை. அரசியல் என்று வந்துவிட்டால் அவர் முழுமையாக அரசியல்தான் வாழ்க்கை என்று இருப்பார்கள். ஆனால் பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் பல எதிர்பார்ப்புகள் இருக்கிறது இதையெல்லாம் கடந்து வரக் கூடிய பெண்கள் மிகச் சிலர்தான். அதனால் பெண்கள் அரசியலுக்கு வர தயக்கங்கள் இருக்கிறது. அதையெல்லாம் கடந்து, தடைகளை உடைத்துக் கொண்டுதான் வர வேண்டும்.
 அரசியல் பின்ணனி குடும்பத்தில் பிறந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?
 நான் பிறக்கும்போதே அரசியல் பின்னணியில் பிறந்ததால், அரசியல் சார்ந்தே வளர்ந்ததால் நார்மலான வாழ்க்கையைப் பற்றி தெரியவில்லை. இப்படி ஒரு குடும்பத்தில், பிரபலமான அப்பாவுக்கு மகளாக பிறந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்.

அம்மா - அப்பாவுடனான சிறுவயது நாள்கள் பற்றி?
 அம்மா ரொம்ப கண்டிப்புடன் இருப்பார். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், பள்ளி பருவத்தில் ஸ்கூல் கேன்டீனில் ஏதாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்று அம்மாவிடம் 5 ரூபாய் கேட்பேன். அதற்கு 100 கேள்விகள் கேட்டுவிட்டு பின்புதான் பணத்தைக் கொடுப்பார். அப்பா ரொம்ப தாராளமானவர். ரொம்ப அன்பாக இருப்பார். எப்போதும் ஏதாவது சரித்திர புத்தகங்களையோ, நாவல்களையோ படித்துக் கொண்டிருப்பது எனது வழக்கமாக இருந்தது.
 பள்ளி, கல்லூரி நாட்களில் நடந்த மறக்க முடியாத நினைவு?
 எத்திராஜ் கல்லூரி படித்துக்கொண்டிருக்கும்போது கட்டுரை போட்டி ஒன்றில் கலந்து கொண்டேன். அதில் என் கட்டுரை பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. பரிசு பெறுவதற்காக ஆடிட்டோரியத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அமர்ந்திருந்தபோது, திடீரென்று அப்பா ஆடிட்டோரியத்திற்குள் சிறப்பு விருந்தினராக வந்தார். பரிசை வழங்கப் போவது அப்பாதான் என்பது அப்போதுதான் எனக்கு தெரியும். அப்பாவுக்கும் நான் பரிசு பெறப் போகிறேன் என்பது அப்போதுதான் தெரியும். என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். நான்மேடைக்குச் சென்றதும் அரங்கத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் சிரித்து ஆரவாரம் செய்ததையும், அப்பா கையில் பரிசு வாங்கியதையும் மறக்க முடியாது.
 உங்களது ரோல் மாடலாக யாரை நினைக்கிறீர்கள்?
 பெரியாரின் புத்தகங்கள்தான் எனது ரோல்மாடல். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் பெரியாரின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். அவை எனக்குள் பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியது.
 - ஸ்ரீதேவி குமரேசன்
 படங்கள்: அண்ணாமலை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com