பெங்களூருவிலிருந்து சிட்னி வரை! 120 நாட்களில்... 10 நாடுகள்!

ஹூப்ளியைச் சேர்ந்த கேன்டிடா லூயிஸ் (28) தன்னுடைய பைக்கில் தன்னந்தனியாக பெங்களுரிலிருந்து சிட்னி வரை செல்லும் பயணத்தை தொடங்கியுள்ளார்
பெங்களூருவிலிருந்து சிட்னி வரை! 120 நாட்களில்... 10 நாடுகள்!

ஹூப்ளியைச் சேர்ந்த கேன்டிடா லூயிஸ் (28) தன்னுடைய பைக்கில் தன்னந்தனியாக பெங்களுரிலிருந்து சிட்னி வரை செல்லும் பயணத்தை தொடங்கியுள்ளார். சுமார் 28 ஆயிரம் கி.மீ. தொலைவு 120 நாட்களில் 10 நாடுகள் வழியே சென்று இந்த பயணத்தை முடிக்க வேண்டுமென்பது அவரது விருப்பமாகும்.
 விவரம் தெரிந்த நாள் தொடங்கி தன் தந்தை மற்றும் சிநேகிதிகளுடன் ஹூப்ளியிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கோவாவிற்கு பலமுறை பைக்கில் சென்று வந்த இவர், கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு நாடுகளில் பைக்கில் பயணம் செய்துள்ளார். ஒரே வித்தியாசம். அந்தந்த நாடுகளுக்கு விமானத்தில் சென்று இறங்கி, அங்கு பைக்கை வாடகைக்கு எடுத்து பயணம் செய்துள்ளார். இந்த முறை 10 நாடுகள் வழியே தன்னுடைய பைக்கிலேயே தனியாக பயணம் செய்ய தீர்மானித்திருக்கிறார். முதலில் பெங்களூரிலிருந்து லண்டன் வரை செல்ல முடிவு செய்தார். "சேஞ்ச் யுவர் வேர்ல்ட்' என்ற அமைப்பு நிதியுதவி அளிக்க முன்வரவே. சிட்னி வரை செல்ல தீர்மானித்துள்ளார். காரணம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பைக் வீரர் அலிஸ்டர் பார்லாண்ட் என்பவர் அலாஸ்காவிலிருந்து தென் அமெரிக்காவுக்கு பைக்கில் செல்ல மேற்கொண்ட பயணத்தின் போது விபத்தில் பலியானார். மீண்டும் அவர் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவில்லை. அவர் நினைவாக அமைக்கப்பட்ட அமைப்புதான் சேஞ்ச் யுவர் வேர்ல்ட். அதனால் சிட்னி செல்ல தீர்மானித்தாராம் கேன்டிடா.
 பயணத்தின் முதற்கட்டமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து வட கிழக்காக செல்வது. இரண்டாவது கட்டத்தில் மணிப்பூரிலிருந்து மியான்மர், லாவோஸ், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா செல்வது. இடையில் இரண்டு தீவுகளை கடப்பது. முதலாவது மலேசியாவிலிருந்து இந்தோனேஷியா. மற்றது டை மோரிலிருந்து டார்வின். இறுதி கட்டமாக டார்வின்லிருந்து சிட்னி.
 இந்தப் பயணத்தை ஏழுமாதங்களாக திட்டமிட்ட கேன்டிடா, ஆகஸ்ட் 25-ஆம் தேதி காலை 6 மணியளவில் பெங்களூரு விதான்சவுதா முன்பிருந்து கிளம்பியுள்ளார். ஏறக்குறைய 120 நாட்கள் ஆகுமென்பதோடு இந்த ஆண்டு இறுதியில்தான் மீண்டும் இந்தியா திரும்ப முடியும் என்பதால், தான் பயணம் செல்லவுள்ள நாடுகளின் தூதரகங்களிலிருந்து முன்கூட்டியே அனுமதி கடிதம் பெற்றுள்ளார்.
 தொடர்ந்தாற்போல் 120 நாட்கள் ஒரு பெண் தனியாக பைக்கில் பயணம் செய்வது சாத்தியமா?
 வாரந்தோறும் நான் நான்கைந்து முறை பைக்கில் பயணம் செல்வதுண்டு. அதனால் இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க முடியுமென தோன்றியது என்று கூறும் கேன்டிடாவுக்கு ஜிம்மிற்கு போகும் பழக்கமும் இல்லை.
 ஒரு பெண் தனியாக பல நாடுகளுக்கு பைக்கில் செல்வது பாதுகாப்புதானா என்ற எண்ணம் கேன்டிடாவின்மனதில் தோன்றினாலும், ஏற்கெனவே நான் "பான் இந்தியா' பயணம் மேற்கொண்டபோது, நாடுவிட்டுநாடு தனியாக போவது பாதுகாப்பானது அல்ல. இந்த முயற்சியை கைவிடும்படி பலர் கூறினார்கள்.
 அந்த ஏழு மாத பயணத்தின்போது எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், எந்த சூழ்நிலையிலும் பெண்களை பொருத்தவரை இந்தியா பாதுகாப்பான நாடாகவே எனக்கு தோன்றியது. தற்போதைய பயணத்தையும் அதே நம்பிக்கையுடன் கடவுளை நினைத்து தொடங்கியுள்ளேன். பாதுகாப்புக்கு என்னுடைய பைக்கில் ஜிபிஎஸ் பொருத்தியிருப்பதால் நான் எங்கிருக்கிறேன் என்பதை என் பெற்றோர் தெரிந்து கொள்ள முடியும்'' என்கிறார். கேன்டிடா.
 இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன?
 இதன் மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களையும், கலாசாரத்தையும் அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக பெண்கள் சக்தி, கல்வி மற்றும் அவர்கள் சுதந்திரத்தை வலியுறுத்துவதே நோக்கமாகும். பெங்களூரில் பைக் கலாசாரத்தை மேம்படுத்த பல கிளப்கள் உள்ளன. இருப்பினும் 80-90 பைக் வீராங்கனைகள் மட்டுமே உள்ளனர்.
 உலகம் எல்லா துறையிலும் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தாலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெண்கள் பின் தங்கிய நிலையில் உள்ளனர். என்னுடைய இந்தப் பயணம் பெண்களுக்கு தைரியத்தையும், அவர்களது கனவுகளை நனவாக்கவும் உதவலாம். என்னுடைய திட்டத்தை என் சமூக வலைதளத்தில் பதிவேற்றியபோது, நிறையபேர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். என் பயண அனுபவங்களை தினமும் என் சமூக வலைதளத்தில் பதிவேற்றுவேன்'' என்றார்.
 - அ.குமார்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com