நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!

பருப்பு பாயசம், கடலைப் பருப்பு சுண்டல், நவதானிய சுண்டல், மொச்சை சுண்டல்

பருப்பு பாயசம்

தேவையானவை:
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கிண்ணம்
பொடித்த வெல்லம் - அரை கிண்ணம்
நெய் - 2 தேக்கரண்டி
பால் - 2 டம்ளர்
முந்திரி - 8
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து, மசித்துக்கொள்ளவும். நீரில் வெல்லத்தைக் கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும் வடிகட்டவும். பாலை நன்கு காய்ச்சி, அதில் மசித்த பருப்பு விழுது, வெல்லக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிட்டு, நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். சுவையான பருப்பு பாயசம் தயார்.

மொச்சை சுண்டல்

தேவையானவை:
மொச்சை - ஒரு கிண்ணம்
(ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - அரை தேக்கரண்டி
பொடி செய்ய:
புதினா - ஒரு கைப் பிடி
ஓமம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
(ஓமம் மற்றும் மிளகாய் வற்றலை லேசாக வறுத்து, பின், புதினா சேர்த்து லேசாக வதக்கி பொடி செய்து கொள்ளவும்.)
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு, வேகவைத்த மொச்சை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய்த் துருவல் போட்டு மூன்று நிமிடம் கிளறவும். பின், பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி இறக்கவும். மொச்சை சுண்டல் தயார்.

கடலைப் பருப்பு சுண்டல்

தேவையானவை:
கடலைப் பருப்பு - ஒரு கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் - தலா அரை தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை: கடலைப்பருப்பை உப்பு சேர்த்து மலர வேகவைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, நறுக்கிய வெங்காயத்தாளினை மேலே தூவவும்.

நவதானிய சுண்டல்

தேவையானவை:
வெள்ளை கொண்டைக்கடலை,
கறுப்பு கொண்டைக்கடலை, காராமணி,
பச்சை பயறு, கொள்ளு, மொச்சை,
சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி - தலா 1 கைப்பிடி அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
சோம்பு - கால் தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
இஞ்சி - சிறிய துண்டு
செய்முறை: பயறுகளை முதல்நாள் இரவே ஊற வைத்து காலையில் தண்ணீர் வடித்து ஈரத்துணியில் சுற்றி வைத்தால் மாலை அதில் இருந்து லேசாக முளைவிட்டிருக்கும். அதனை வேக வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்புடன் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வெந்த பயறுடன், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனைப் போனதும், (விருப்பப்பட்டால்) தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கினால், நவதானிய சுண்டல் தயார்.
- தவநிதி





 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com