பாரம்பரியத்தை நினைவு கூர்ந்த கல்லூரி மாணவிகள்!

பாரம்பரிய வாழ்வியல் முறைகள் சிறப்பானது என பேச்சளவில் இருந்து வரும் நிலையில், அந்த வாழ்வியல் முறைக்கு மாற முடியாமல் ஒவ்வொருவரும் இயந்திரத்தனமாக ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறோம்
பாரம்பரியத்தை நினைவு கூர்ந்த கல்லூரி மாணவிகள்!

பாரம்பரிய வாழ்வியல் முறைகள் சிறப்பானது என பேச்சளவில் இருந்து வரும் நிலையில், அந்த வாழ்வியல் முறைக்கு மாற முடியாமல் ஒவ்வொருவரும் இயந்திரத்தனமாக ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.
 கையில் ஒரு செல்லிடைப்பேசி இருந்தால் போதும் அதை தடவிக் கொடுத்துக் கொண்டே உறவுகளையும், தனது அடையாளத்தையும் இழந்துக் கொண்டிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை.

 பாரம்பரிய உணவு முறைகள், பாரம்பரிய வாழ்வியல் முறைகளை வெறும் பேச்சளவில் இல்லாமல் அதை எப்படி வாழ்வது என்பதை தூத்துக்குடியில் ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவிகள் மூன்று நாள்கள் வாழ்ந்து காட்டியுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
 தூத்துக்குடியில் உள்ள ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில், "அன்றைய வாழ்வும் அறிவியலும்' என்ற தலைப்பில், "களம் காண வா ராணி வா' என பெண்களுக்கான நிகழ்ச்சி அண்மையில் மூன்று நாள்கள் நடைபெற்றது. உள் அரங்க விளையாட்டுகள், வெளி அரங்க விளையாட்டுகள் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்ட அனைத்து விளையாட்டுகளும் மறந்து போனவற்றை நினைவுப்படுத்தின.
 தாயம், பல்லாங்குழி, சுழற்சிக்காய், கிச்சு கிச்சு தாம்பளம், பாம்பு கட்டம், கோலி ஆகியவை உள் விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது. கிராமப் புற கல்லூரி மாணவிகள் இந்த விளையாட்டுகளில் ஆர்வம் காட்டியபோதிலும் நகர்புற மாணவிகள் தெரியாத ஒன்று போல வியப்புடன் விலகிச் சென்றனர். இதேபோன்று, வெளி அரங்க விளையாட்டுகளான பாண்டி, பம்பரம், கயிறு தாண்டுதல், பூப்பந்து, ஒரு குடம் தண்ணீர், சைக்கிள் டயரை சிறிய கம்பு கொண்டு ஓட்டுதல், உறியடி, கயிறு இழுத்தல் என அனைத்து விளையாட்டுகளிலும் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

விளையாட்டுகள் ஒருபுறமிருக்க பாரம்பரிய மருத்துவ முறைகளின் விளக்கம், மண்பாண்ட பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை, சணல் பொருள்கள், கைவினைப் பொருள்கள், பாரம்பரிய மிட்டாய் கடை, குச்சி ஐஸ் விற்பனை, மாட்டு வண்டியில் இனிமையான பயணம், பாரம்பரிய உணவுத் திருவிழா என மூன்று நாள்களும் கல்லூரி களை கட்டியது.
 மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டியில் அமர்ந்து பயணம் செய்த மாணவிகள் பலர் அதை சுயபடம் எடுத்து பாதுகாத்துக் கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்களும், பெண் குழந்தைகளும் இந்த பாரம்பரிய திருவிழாவில் கலந்து கொண்டு தங்களை புத்துணர்ச்சிபடுத்திக் கொண்டனர்.
 மரங்களின் மேலே அமைக்கப்பட்டிருந்த குடில்களில் மாணவிகள் ஆர்வமுடன் ஏறி அமர்ந்தனர். குடிசைகளில் வாழ்வது, கைக்குத்தல் அரிசி தயாரிப்பது என மாணவிகள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களை பாரம்பரிய வாழ்வியல் முறையோடு இணைத்துக் கொண்டனர்.


 இதுகுறித்து ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் சத்தியபாமா கூறியது: "மாணவிகளுக்கு நமது பாரம்பரியத்தை பற்றி நினைவு கூற விரும்பினோம். அதை சிறப்பாக செய்து முடித்துள்ளோம். ஒரே நேரத்தில் 400 மாணவிகள் கலந்து கொண்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சி அனைவரும் வியக்கும் வண்ணம் இருந்தது.
 கரகம், கோலாட்டம், கும்மியாட்டம், மயிலாட்டம், பொய்கால்குதிரை, தப்பாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை ஒரே நேரத்தில் நடந்ததை அனைவரும் ரசித்துச் சென்றனர். இதுதவிர, கருப்பட்டி காபி, பணியாரம், கீரை வடை, உளுந்தங் கஞ்சி என்ற பாரம்பரிய உணவுகளை மாணவிகள் ருசித்துச் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

மேலும், பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நிலைக்காட்சிகளைப் பார்வையிட்ட மாணவிகள் அந்த பொருள்களுடன் தங்களை சுயபடம் எடுத்துக் கொண்டனர். பழங்கால பொருள்களின் கண்காட்சியையும் மாணவிகள் ரசித்து பார்த்துச் சென்றனர். மாணவிகளை மூன்று நாள்கள் நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைக்கு அழைத்துச் சென்றது எங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.


 - தி. இன்பராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com