பிரமுகர்கள் வீட்டில் கொலு!

கடந்த 20 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் கொலு வைத்து வருகிறேன். நான் எப்போதும் காலங்காலமாக வைத்து வரும் பாரம்பரிய கொலு மட்டுமே வைத்து வருகிறேன். தற்போது டிரண்டில் உள்ளது

ராஜேஸ்வரி வைத்தியநாதன்

கடந்த 20 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் கொலு வைத்து வருகிறேன். நான் எப்போதும் காலங்காலமாக வைத்து வரும் பாரம்பரிய கொலு மட்டுமே வைத்து வருகிறேன். தற்போது டிரண்டில் உள்ளது போன்று ஏதாவது ஒரு தீமில் கொலு வைக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை உண்டு. ஆனால், எனது பணியின் காரணமாக நேரம் கிடைப்பதில்லை. ஆனால், இருக்கும் பொம்மைகளையே ஒவ்வொரு ஆண்டும் செட் செட்டாக பிரித்து வித்தியாசமாக வைப்பேன்.
பொதுவாக கொலுவை முழுவதுமாக வைக்க எனக்கு குறைந்தது மூன்று நாள்களாவது ஆகும். கடந்த ஆண்டுகள் வரை எனது மகன் உதவிக்கு இருந்தார். இந்த ஆண்டு அவர் டெல்லியில் இருப்பதால் வீட்டில் உள்ளவர்களை வைத்து கொலுவை வைத்துள்ளேன்.
ஒவ்வொரு ஆண்டு கொலுவையும் நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். காரணம், எனது பள்ளி தோழிகளையும், கல்லூரி தோழிகளையும் தவறாமல் அழைத்து வெற்றிலைப் பாக்கு கொடுப்பேன். இதன் மூலம் ஆண்டுக்கு ஒருமுறையேனும் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைப்பதால் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
அது போன்று நானும் தோழிகள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என மற்றவர் வீட்டுக்குச் சென்று வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொள்வதும் ஒரு கெட் டூ கெதர் போன்று அமைந்துவிடுவதால் மனதிற்கு நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்'' என்கிறார்.
நீதிபதி வைத்தியநாதன் மனைவி

காயத்ரி கிரிஷ்

என்னுடைய சிறு வயதில் அம்மா கொலு வைக்கும்போதே மிக ஆர்வமாக இருப்பேன். 9 நாளும் அம்மா காலையும், மாலையும் பூஜை செய்வதும், முடிவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை சுண்டலும், பலகாரமும் செய்து கொடுப்பதும், விருந்தினர் வருகையும் என சிறுவயதில் இதையெல்லாம் மிகவும் ரசித்துள்ளேன். இதனால் திருமணத்திற்கு பிறகு எனது வீட்டிலும் கொலு வைக்கத் தொடங்கிவிட்டேன். சிறுவயதில் இருந்த அதே உற்சாகம் இன்றுவரை தொடர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நான் என்ன கான்சஃப்ட் எடுக்கிறேனோ, அதை முழுமையாக கொண்டு வந்துவிடுவேன். காரணம், இன்றைய தலைமுறையினருக்கு பெரும்பாலும் நமது பாரம்பரியங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போனதால், இதுபோன்று தீமின் மூலம் அதை அவர்களது மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான். உதாரணமாக, ஒருவருடம், திருப்பதி பிரம்மோற்சவத்தை தீமாக வைத்தேன். இதற்காக திருப்பதி சென்று லட்டு வாங்கி வந்து பிரம்மோற்சவம் காணவருபவர்கள் அனைவருக்கும் திருப்பதி லட்டை பிரசாதமாக கொடுத்தேன். கடந்த ஆண்டு கிராமம் என்ற தீமில் கொலு வைத்திருந்தேன். அதற்காக கிராமத்து வீடுகள், விவசாயத்தில் நாத்து நடுவதிலிருந்து ஆறுவடை வரை தத்ரூபமாக கொண்டு வந்தேன். இதன் மூலம் கிராமங்களையே பார்த்தறியாத நகரத்து குழந்தைகள் "கிராமம் இப்படித்தான் இருக்குமா?' என்று கேட்டு அறிந்தனர்.
இந்த ஆண்டு, பஞ்ச பூதங்கள் என்ற தீமில் கொலு வைத்துள்ளேன். இதற்காக பஞ்ச பூதங்களுக்குரிய 5 ஸ்தலங்களையும் வைத்துள்ளேன். அதாவது, ஆகாயத்திற்கு - சிதம்பரம், வாயுவிற்கு- காளஸ்தி, அக்னிக்கு- திருவண்ணாமலை, நீருக்கு- திருவானைக்கா, நிலத்திற்கு- காஞ்சிபுரம், திருவாரூர் (ப்ரித்வி தலம்) என இந்த பஞ்சு பூதங்களுக்குரிய ஸ்தல வரலாறுகளை பொம்மைகளாக வைத்துள்ளேன். காஞ்சிபுரத்தை குறிக்கும் காமாட்சி அம்மன் தேர், திருவாரூர் தேர் இரண்டையும் வைத்துள்ளேன். இவற்றிற்கு தேவையான அனைத்து பொம்மைகளையும் பல இடங்களில் தேடிப்படித்தும், சிலவற்றை பொம்மை செய்பவர்களிடம் ஆர்டர் கொடுத்தும் செய்து வாங்கிக் கொள்வேன். மேலும், எனது மகளும், மகனும் கலைப் பொருள்கள் நன்றாக செய்வார்கள், அவர்களும் தேவையானவற்றை செய்து கொடுப்பார்கள், எனது மகள் 9 நாளும் அழகாக கோலம் போட்டு அசத்துவாள், பிள்ளைகள் இருவரும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை உபசரித்து கவனித்துக் கொள்வார்கள்.
இதனால் எங்கள் வீட்டில் 9 நாளும் விருந்தனர்கள் வருவதும் போவதுமாக கொண்டாட்டமாகத்தான் இருக்கும். மேலும், தோழியர்களையும், உறவினர்களையும் சந்தித்துக் கொள்ளவும், கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி எங்கள் வீட்டில் குடிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது'' என்கிறார் காயத்ரி கிரீஷ்.
கர்நாடக இசைப் பாடகி

டாக்டர் கமலா செல்வராஜ்

நவராத்திரி கொலு வைப்பது எங்கள் வீட்டில் பரம்பரையாக நடைபெற்றுவரும் ஒரு சந்தோஷமான தருணம். அதுவும் குறிப்பாக எங்களைப் போன்ற பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் விமரிசையாக கொண்டாடுவார்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டை சுற்றி ஒரு அரை டஜன் வீடுகள் தான் இருக்கும். நவராத்திரி சமயத்தில் எங்களை பல்வேறு விதமாக அலங்கரித்து ஒவ்வொரு வீடாகச் சென்று அழைக்கச் சொல்வார்கள்.
எங்கள் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி உள்ள ஒரு மாமி தான் எங்களை அலங்கரித்து அனுப்புவார். அவர்கள் கொடுக்கும் வெற்றிலைப் பாக்கு பூ, பழம், மஞ்சள், குங்குமம், வளையல் போன்ற பல்வேறு பொருள்களை வீட்டிற்கு வந்ததும் எங்கள் பாட்டியிடம் கொடுத்து விடுவோம். அவர், அதை எல்லாம் தனித்தனியாக பிரித்து எங்கள் வீட்டிற்கு வரும் பெண்மணிகளுக்கு மறுசுழற்சி செய்து விடுவார். அதெல்லாம் ஒரு இனிமையான காலம் என்றுதான் சொல்லவேண்டும். அப்பா ஜெமினிகணேஷ் எதை செய்தாலும் புதுமையாக செய்யவேண்டும். யாரையும் பார்த்து பின் பற்ற கூடாது என்று நினைப்பவர். அதே எண்ணம் எனக்கும் உள்ளது. ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டு கொலு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவேன். இந்த வருடம் எங்கள் கொலுவை வாசலில் இருந்தே நீங்கள் பார்க்கலாம்.
நெல் பயிரிலிருந்து ஆரம்பித்து நடுவில் பெங்களூரு தக்காளி வைத்து பின்னர் எலுமிச்சை பழம், பெரிய நெல்லிக்காய் என்று பசுமை கோலம் போட்டிருக்கிறேன். பின்னர் இருபுறமும் கிராமிய மணம் வீசும் பொம்மைகள். அதற்கு பிறகுதான் எங்கள் வரவேற்பறையில் கொலு இருக்கும். துர்கா, லட்சுமி சரஸ்வதி பொம்மைகளுக்கு பிறகு எங்கள் கொலு கம்பீரமாக காட்சி கொடுக்கும். எங்கள் வீட்டிற்கு வந்தால் கைநிறைய பரிசும் உண்டு. அத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் குங்குமம், மஞ்சள் மற்றும் மதுரை மல்லியும் உண்டு'' என்கிறார் கமலா செல்வராஜ்.
யிமகப்பேறு மருத்துவர்

நித்யஸ்ரீ மகாதேவன்

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, நவராத்திரி கொலு என்றால் இன்றும் பல்வேறு நினைவுகளில் முழ்கிடுவேன். அன்று பட்டுப் பாவாடை சலசலக்க, அம்மா கையில் கொடுத்த குங்குமசிமிழ் எடுத்துக் கொண்டு சுற்றிலும் உள்ள வீடுகளுக்கு சென்று எங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளோம். வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொள்ள வாருங்கள் என்று பல்வேறு வீட்டில் உள்ள பெண்களை எல்லாம் அழைப்போம். ஒவ்வொரு நாளும் எனக்கு ஜடை வைத்து பின்னல் பின்னி நான் பார்க்கவே அழகாக இருப்பேன் என்று பலரும் கூறக் கேட்டிருக்கிறேன். இது மட்டும் அல்லாமல் குரத்தி போலவும் சிலநேரம் போட்டு விடுவார்கள். போகும் இடமெல்லாம் பாட்டுப் பாட சொல்வார்கள். ஒவ்வொரு வீட்டிலும் என்ன பாட்டு பாடலாம் என்று முன்பே தீர்மானித்து வைத்துக் கொண்டாலும், ஒவ்வொரு வீடாக போய் பாடிவிட்டு வரும்போது வேறு வேறு பாடல்களை பாடி இருப்போம். இப்படி குதூகலித்த நாட்கள் பல உண்டு. சமீப காலமாக ஒவ்வொரு வருடமும் ஒரு தீம் வைத்து கொண்டு கொலு வைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சென்ற வருடம் "கிருஷ்ணலீலா' . இந்த வருடம் தீம் என்ன தெரியுமா? தமிழர் திங்கள் திருநாள். வருடம் முழுவதும் உள்ள பண்டிகைகளை பொம்மைகளாக வைத்துள்ளோம். என் இரு செல்ல மகள்கள் தனுஸ்ரீ, தேஜஸ்ரீ சில பண்டிகைகளுக்கு ஓவியங்களாக வரைந்து அதை பொம்மைகளாக செய்து வைத்துள்ளோம். உதாரணமாக சித்திரை- பங்குனி வரையிலான பண்டிகைகளை இந்த வருட கொலுவில் பொம்மைகளாக நீங்கள் பார்க்கலாம். சித்திரை- புத்தாண்டு, சித்ரா பெüர்ணமி, அக்ஷய த்ரிதியை, வைகாசி-வாகசி விசாகம், ஆனி-திருமஞ்சனம். ஆடி - ஆடி கிருத்திகை, ஆடிப் பூரம், ஆடிப் பெருக்கு. ஆவானி-விநாயக சதுர்த்தி, கோகுலாஷ்டமி, புரட்டாசி-நவராத்திரி, சனிக்கிழமை, ஐப்பசி-தீபாவளி, கார்த்திகை- தீபம், மார்கழி- இசை விழா, வைகுண்ட ஏகாதசி, தை-பொங்கல், மாசி-மகம், சிவராத்திரி, பங்குனி-ஸ்ரீராம நவமி இப்படி ஒவ்வொரு பண்டிகையையும் பொம்மைகளாக வைதுள்ளோம். பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள்'' என்கிறார் நித்யஸ்ரீ.
கர்நாடக இசைப் பாடகி

மதுவந்தி அருண்

சுமார் 20 ஆண்டுகளாக நான் நவராத்திரி கொலு வைத்து வருகிறேன். எனக்கு முன் எனது அம்மா சுதா மஹேந்திரா இந்த கொலுவை வைத்தார். அதற்கு முன் எனது பாட்டி ஒய்.ஜி.ராஜலக்ஷ்மி (திருமதி ஒய்.ஜி.பி.) வைத்தார்கள். இன்றும் எங்கள் வீட்டில் உள்ள அனைத்து பெண்களும் இந்த கொலுவை வைத்து நவராத்திரியை கொண்டாடுவோம்.
ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டில் கொலுவுக்கு ஒரு புது பொம்மை வாங்குவோம். அது யோசித்து வாங்கும் பொம்மை அல்ல. என் வாழ்கையில் நடக்கும் ஒரு விஷயத்தை வைத்தே அந்த பொம்மை வாங்கப்படும். இந்த வருடம் நான் முதன் முறையாக சுவாமி ராகவேந்திரரை தரிசிக்க மந்த்ராலயம் சென்றேன். இந்த வருடம் என்ன பொம்மை வாங்கலாம் என்று சிந்தித்த வண்ணம் மயிலாப்பூர் சென்றேன். சில கடைகளை பார்த்துக் கொண்டு வரும் போது திடீரென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள், பிருந்தாவனத்துடன் இருக்கும் பொம்மை என் கண்ணில் பட்டது. பார்த்தவுடன் பிடித்துப் போக இந்த வருட புது பொம்மை இவர்தான் என்று முடிவு செய்து வாங்கினேன்.
நான் எப்போதுமே வீட்டில் ஒரு கொலு, அலுவலகத்தில் ஒரு கொலு வைப்பேன். அதற்காக இரண்டு பொம்மைகள் வாங்கினேன். ஒன்றைப் போலவே அடுத்ததும் கிடைத்தது ஸ்ரீ ராகவேந்திரர் கருணைதான் என்று அவரை மானசீகமாக வணங்கி இரண்டையும் வாங்கிவந்து இந்த வருட கொலுவில் வைத்துள்ளேன். சுமார் பத்து வருடங்களாக என்னிடத்தில் உள்ள துர்கா, லட்சுமி, சரஸ்வதி பொம்மைகளை இந்த வருடம் எங்கள் வீட்டில் ஒருவராக இருக்கும் தனம் அவர்கள் அழகாக துடைத்து, வண்ணம் பூசி மேருகேற்றி தந்தார். அதுவும் கொலுவில் இடம் பெற்றுள்ளது'' என்கிறார் மதுவந்தி.
திரைப்பட நடிகை


தொகுப்பு: சலன்,
ஸ்ரீதேவி குமரேசன்
படங்கள்: பி.ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com