நகைகளை இப்படி பராமரிக்க வேண்டும்!

வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் அவை கறுப்பாவதைத் தவிர்க்கலாம்.
நகைகளை இப்படி பராமரிக்க வேண்டும்!

வெள்ளி நகைகள்

* அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் ஊறவைத்து தேய்த்துவிட்டு, சுத்தமான  தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்.

* வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் அவை கறுப்பாவதைத் தவிர்க்கலாம்.

* குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

* புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின்  எடுத்து துலக்கினால் அவை புதியவை போல்  இருக்கும்.

முத்து நகைகள்

* முத்துப் பதித்த நகைகளை மற்ற நகைகளோடு சேர்த்து வைக்கும் போது முத்துகள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே முத்துகள்  பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில் வைப்பதே நல்லது.

* முத்துகள் பதித்த நகைகளை நீரில் அமிழ்த்திக் கழுவக்கூடாது. அப்படிக் கழுவினால் முத்துகள் ஒளியிழக்கும்.  அதுபோன்று,  வாசனைத் திரவியங்கள் பட்டால், முத்துகளின் பொலிவு நாளடைவில் மங்கி விடும். எனவே, ஒப்பனைகள் முடிந்த பின் முத்து நகைகளை அணிவதே நல்லது.

* முத்து நகைகளை பயன்படுத்தாத போது,  அவற்றை தூய்மையான வெள்ளை நிற காட்டன் துணியினுள் வைக்க வேண்டும்.  பேப்பர் அல்லது மற்ற துணிகளுக்குள் வைத்தால், முத்துக்களின் நிறம் நாளடைவில் மங்கிவிடும்.

கற்கள் பதித்த நகைகள்

* கற்கள் பதித்த நகைகளை தினசரி அணிந்தால்,  ஒளி மங்கிவிடும்.  இதற்கு சிறிது நீலக் கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, அழுத்தம் கொடுக்காமல் பிரஷ்ஷால் மெதுவாக தேய்க்க வேண்டும்.  பின்பு தூய நீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய்ப்  பிசுக்கு போன்றவை வெளியேறிவிடும்.

* கற்களில் கீறல் விழுவதைத்  தவிர்க்க,  டிஷ்யூ பேப்பர் அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே கற்கள் பதித்த நகைகளை சுத்தம்  செய்ய பயன்படுத்த வேண்டும்.

தங்க நகைகள்

* தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போதுதான், அதில் கல் மற்றும் முத்து போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும்.  தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளைச் சேர்த்து அணியக் கூடாது.  அவ்வாறு அணிந்தால், தங்க நகைகள் சீக்கிரம் தேய்ந்து விடும்.

* பூந்திக் கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரால் தங்க நகைகளைக் கழுவலாம். இப்படிச் செய்தால், அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும்.

* நாம் அன்றாடம் அணியும் செயின், தோடு, மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்துவிடும்.  எனவே இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பூ  அல்லது சோப்புத் தூளால் தேய்த்து தூய நீரில் கழுவ வேண்டும்.  பின் இவற்றை நீராவியில் காண்பித்தால், அழுக்குகள் நீங்கி, பளபளவென்று ஜொலிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com