குப்பை லாரி ஓட்டும் இரும்பு மனுஷி! 

ஆண்களுக்கு  என்றே  முத்திரை குத்தப்பட்ட  பல தொழில்களில் சர்வ சாதாரணமாகக் கால் பதித்து  சாதிக்கத் தொடங்கிவிட்டனர் பெண்கள்.  
குப்பை லாரி ஓட்டும் இரும்பு மனுஷி! 

ஆண்களுக்கு  என்றே  முத்திரை குத்தப்பட்ட  பல தொழில்களில் சர்வ சாதாரணமாகக் கால் பதித்து  சாதிக்கத் தொடங்கிவிட்டனர் பெண்கள்.  அந்த வகையில்   ஆட்டோ, டிராக்டர், பேருந்து,  டாக்ஸி என ஓட்டிக் கொண்டு இருக்கும் பெண்களின் வரிசையில்,  தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பை லாரி ஓட்டும்  வேலையில் முதல்  பெண்ணாக  களமிறங்கி தைரியமாக பணி செய்து வருகிறார் ஜெயலட்சுமி.   அவர் கடந்து வந்த பாதை குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை: 

எப்படி ஓட்டுநர் பணியில் ஆர்வம் வந்தது?

எம்.ஏ.படித்துவிட்டு பெற்றோரின் விருப்பப்படி  ஆசிரியை பயிற்சியை முடித்தேன்.  வீட்டில் அம்பாஸிடர் கார் இருந்ததால்  அப்பாவின்  உதவியோடு கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.  அந்த சமயத்தில், என்னுடைய  அப்பாவின் நண்பர் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி வைத்திருந்தார். அதில் டிரைவிங் கற்றுக் கொள்ள வரும் பெண்களுக்கு பயிற்சி அளிக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். நான் மற்ற பெண்களுக்கு பயிற்சி அளித்ததுடன்  கனரக வாகனங்களை ஓட்டவும் கற்றுக் கொண்டேன்.

பின்னர்,  கனரக வாகனங்களுக்காக லைசன்ஸ் எடுக்க முடிவு செய்தேன். இதற்காக தென்காசி ஆர்டிஓ  அலுவலகத்திற்கு சென்றேன்.   பொதுவாக  5கி.மீ. தூரம் ஓட்டிக் காட்டினால் போதும்.  ஆனால் நான் முதல் முயற்சியிலேயே 25கி.மீ. தூரத்தை  சர்வ சாதாரணமாகக் கடந்து வந்தேன்.  இதனால் கனரக வாகன லைசன்ஸ் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு  செய்தேன். 
1999 -இல் திருநெல்வேலி  மாநகராட்சியில்  தண்ணீர் லாரி  ஓட்டுநராக வேலை கிடைத்தது. சில சமயம் அதிகாரிகளின் கார்கள் மற்றும் ஜீப்கள் என ஓட்டியிருக்கிறேன்.  ஆனால், சிறுவயதிலிருந்தே  எனக்கு இராணுவத்தில் சேரவும், வித்தியாசமான சவாலான வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும் கனவு இருந்து வந்தது.

இதற்கிடையில்  திருமணம்  முடிந்தவுடன்  தூத்துக்குடி  வந்தேன். என் கணவர் எனது சொந்த மாமாவின் மகன் பேக்கரி வைத்து இருக்கிறார். அதனால், புகுந்த  வீட்டிலும் எனக்கு பெருமையான  வரவேற்பு கிடைத்தது. அவர்களின் ஒத்துழைப்பு கிடைத்ததால் என்னால் தொடர்ந்து பணி செய்ய முடிகிறது. 

குப்பை லாரி  தூரத்தில் வருகிறது என்றாலே மூக்கைப்  பொத்திக் கொண்டு ஒதுங்கும் நிலையில் .  குப்பை லாரியை ஓட்டுவது இழிவான வேலையாக நான் நினைத்ததில்லை.  ஒரு நாள் குப்பை லாரி வந்து குப்பைகள் அள்ளாமல் போனால் நகரமே நாறிவிடும். தொற்று வியாதிகளை வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்தது மாதிரி ஒட்டிக் கொள்ளும்.  அதனால் தினமும் நகரைச் சுத்தம் செய்யும்  இந்தப் பணியை  மிகவும் ஆத்மார்த்தமாக  நேசிக்கிறேன். 

இந்த வித்தியாசமான பணியில் உங்களுக்கு வரவேற்பு எப்படி ?

அதிகமாக  எதிர் கொண்டது நக்கல் பார்வைகளையும், கிண்டல் பேச்சுகளும் இன்று வரை தொடர்கதைதான். என்னுடைய  திறமையைக் கொண்டு எனக்குப் பிடித்தமான  வேலைகளைச் செய்து வருகிறேன். உடன் பணி செய்யும் சகோதரர்கள். ஏதாவது பிரச்னை என்றால் உதவ முன் வருவார்கள். சிலசமயம் வண்டி பழுதடைந்தால் அவர்கள்  தங்களது வண்டியை எனக்கு கைமாற்றிவிட்டு,  என் வண்டியைச் சரி செய்து எடுத்து வருவார்கள். புயல், மழை, வெள்ளம், சுனாமி காலங்களில்  இரவு முழுவதும் மணல் மூட்டைகளை எடுத்துச் சென்று ஆபத்தான இடங்களில்  போட்டு வந்தேன்.

தனிப்பட்ட முறையில் உங்களால்  எதிர் கொள்ளப்படும் சிரமங்கள்?

எனக்குப் பல சிரமங்கள் இருக்கிறது. தூத்துக்குடி போன்ற நகரங்களில் இவ்வளவு பெரிய வாகனத்தை ஓட்டுவதும். சின்ன சின்ன குறுகிய சந்துகளில், குப்பையை அள்ளிய பின் லாகவமாக  எடுத்துச் செல்லுவதிலும் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் மன உறுதி இருந்தால், நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் எந்தக் கடினமான வேலையாக இருந்தாலும், பெண்களால் எளிதாகச் செய்துவிட முடியும்.

எதிர்வரும்  காலங்களை எப்படி திட்டமிட்டுள்ளீர்கள்?

நமது ஊரில்   நிலவும் இன்றைய  பொருளாதார சூழ்நிலை காரணமாக பெண்களும் கடினமான வேலைகளை செய்யத் தயாராய் இருக்கிறார்கள் அவர்களுக்காகவே  ஒரு டிரைவிங் சென்டர்  தொடங்கி  கனரக வாகனங்களை இயக்க இலவசமாக பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. விரைவில் செயல்படுத்தவுள்ளேன். குடும்பம் என்னும் மிகக் கனமான சுமையைத் தன் தோள்களில், மனதில் சுமந்து வெற்றிகரமாக வாழ்க்கையை ஓட்டும் பெண்களுக்கு கனரக வாகனங்கள் ஓட்டுவதில் பெரிய சிரமம்  தோன்றாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com