முடி திருத்தும் ஆசிரியை!

மேல்நிலை ஆசிரியையாக  அரசு ஆணை கிடைத்ததும், அந்தப் பெண்ணுக்கு ஆனந்தம் பொங்கியது. இரவலாகப் பெற்ற உடைகளை அணிந்து, கால்வலிக்க நீண்ட  தூரம்  நடந்து படித்தது வீணாகவில்லை என்பதையும் தாண்டி
முடி திருத்தும் ஆசிரியை!

மேல்நிலை ஆசிரியையாக  அரசு ஆணை கிடைத்ததும், அந்தப் பெண்ணுக்கு ஆனந்தம் பொங்கியது. இரவலாகப் பெற்ற உடைகளை அணிந்து, கால்வலிக்க நீண்ட தூரம் நடந்து படித்தது வீணாகவில்லை என்பதையும் தாண்டி வறுமையைப் போக்க வழி பிறந்துள்ளது என்பதில்  அந்தப் பெண்ணுக்கு பரம நிம்மதி. பணியில் சேர திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலைப் பகுதியில் அரசவெளி அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிக்கு 2006 -இல் மாணவ மாணவிகளுக்கு பகிர்ந்தளிக்க  பிஸ்கட்டுகள் மிட்டாய்களுடன் சென்றபோது  அவருக்கு பெரிய  அதிர்ச்சி   காத்திருந்தது. மாணவர்கள் யாரும் இல்லாமல் பள்ளி வெறிச்சோடி கிடந்தது. வருகை ஏட்டில் மாணவ மாணவிகளின் பெயர்கள் இருந்தன.  ஆனால்  பள்ளிக்கு  வருவதில்லை. "மதிய உணவு வாங்க  சில மாணவர்கள் வருவார்கள்.  வாங்கிக் கொண்டதும் போய் விடுவார்கள்' என்று  பள்ளியில் சொன்னார்கள்.  மற்றபடி  கால்நடைகளை மேய்க்கவும், வீட்டிற்குத் தேவையான சுள்ளி விறகு பொறுக்கவும்  காட்டுக்குள் செல்வதும்தான்  சிறுவர் சிறுமியரின் பிரதான வேலை  என்று தெரிய வந்ததும், தனக்கு  எவ்வளவு  சுமையுள்ள  பணி தரப்பட்டுள்ளது என்பதை  அந்த ஆசிரியை புரிந்து கொண்டார். 

சிறுவர் சிறுமிகளை பள்ளிக்கு அழைத்து வர வீடு வீடாக ஏறி இறங்கினார். ""பிள்ளைகளை பள்ளிக்கு  படிக்க  அனுப்பணுமா'' என்று  ஏதோ  குற்றம் செய்ய அழைப்பது மாதிரி அந்த ஆசிரியையை ஒருமாதிரி பார்த்தனர் பெற்றோர் ""நீங்க  சொல்லிக் கொடுத்தாலும் கொடுக்கலைன்னாலும் மாசம் முடிஞ்சா சம்பளம் கிடைக்கும்... இவங்களை  ஸ்கூலுக்கு அனுப்பினா  மாடு மேய்க்கிற வேலையை யார் பார்ப்பா... வீட்டு வேலைகளை யார் பார்க்கிறது'' என்று கிராம மக்கள் கேட்க, ""வேணும்னா ஞாயிறு  அன்று நான் வந்து உங்க வீட்டு வேலைகளை செய்து தர்றேன்.. பிள்ளைகளை படிக்க அனுப்புங்கள்'' என்று அதிரடியாக  ஆசிரியை  சொல்ல, திகைத்து நின்றனர் கிராமத்து மக்கள்.  

பல  முயற்சிகளுக்குப் பின்  சிலர்  தங்கள் பிள்ளைகளை  வேண்டா வெறுப்பாக பள்ளிக்கு அனுப்பினார்கள். குளிக்காமல் எண்ணெய் பாராத பரட்டை தலையுடன் அழுக்கு உடையுடன் வந்த பிள்ளைகளில் சிறுமிகளுக்கு  அந்த ஆசிரியை தலையில் எண்ணெய் தடவி சீவி ரிப்பன்   வைத்து  பின்னி விட்டார்.   ஆண் பிள்ளைகளுக்கு  நீண்டு  சிலும்பி நிற்கும்  தலை முடியை  எப்படி  சரி செய்வது  என்று  குழம்பினார்.   முடி வெட்டக் கூட  அவர்கள் வீட்டில் காசில்லை என்பதை புரிந்து கொண்ட  ஆசிரியை,  முடி வெட்டிவிடவும்   பயிற்சி பெற்று ஆண் பிள்ளைகளுக்கு முடி வெட்டிவிடத்  தொடங்கினார்.  விடுதியில் தினமும் குளிக்கச் சொல்லி  துவைத்த ஆடையை  உடுத்தச்  சொல்லி  கண்ணாடியில் பார்க்கச்  சொன்னதும். "அட..  நான்தானா இது'  என்று  ஆச்சரியப்பட்ட மாணவ மாணவியர் குளித்து  துவைத்த  உடையை  அணிந்தால்  தோற்றத்தில் வரும் மாற்றத்தை  உணர்ந்தனர்.  மதிய உணவை தேவைப்படுபவர்களுக்கு ஊட்டி விட்டு  அந்த  ஆசிரியை  அனைத்து பிள்ளைகளுக்கும் தாயாக மாறினார். மாணவ மாணவியரும் ஆசிரியையிடம் ஒட்டிக் கொண்டனர். அந்த பிள்ளைகளைக் கொண்டு பள்ளிக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் பிள்ளைகளை அழைத்து வரச் சொல்லி  பெயரளவில் இருந்த பள்ளியை மாணவ மாணவிகளால் நிரப்பினார்.  பெற்றோர்களும்  தங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டு  குழந்தைகளைப் பள்ளிக்கு  தொடர்ந்து அனுப்ப ஆரம்பித்தனர். 

2013- இல் அந்த  ஆசிரியையை  பணி மாற்றம் செய்ய,   மாணவ மாணவியர் பெற்றோருடன்  சேர்ந்து  காட்டிய எதிர்ப்பால்  அந்த  ஆசிரியை  அந்தப் பள்ளியிலேயே  தொடர்கிறார். அந்த  ஆசிரியை  மகாலட்சுமி. மகாலட்சுமி கூறுகையில்: 

""நான் திருவண்ணாமலை  மாவட்டத்தில்  செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவள். கண் பார்வை போய்  உடல் நலம் இல்லாத அப்பா.. பயனிலை சரியில்லாத அம்மா... அக்காதான் கூலி வேலை செய்து படிக்க வைத்தார். பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேறினேன். மருத்துவம் படிக்க நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணுக்கு மூன்று குறைவாக எடுத்ததால் ஆசிரிய பயிற்சியில் சேர்ந்தேன்.  அரசு ஆசிரியர் வேலையும் கிடைத்தது.  தேவையான அளவுக்கு மாணவர்கள் கிடைத்ததும், கல்வி அதிகாரிகளிடம் சொல்லி பழைய கட்டடத்தைப் புதுப்பித்தேன். புதியதாகவும்  கட்டிக் கொடுத்தார்கள். அரசு, மாணவ மாணவிகளுக்குத் தரும் உதவிகள் அவர்களுக்குச் சென்றடையச் செய்தேன். இவை எல்லாம் என் கடமை என்றுதான் செய்கிறேன்.  ஏனென்றால் நான் வறுமைக்  கோட்டுக்கு மிகவும் கீழே உள்ள குடும்பத்தில்  பிறந்தவள். தமக்கை இல்லாமலிருந்தால் எனக்கு படிப்பு வெளிச்சம் கிடைத்திருக்காது. ஆசிரியையாக  ஆகியிருக்க முடியாது.  அதனால்தான்  வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மாணவர் மாணவிகளிடம் அன்பு செலுத்துகிறேன். பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். அவர்களுடன் ஆடி... பாடி... விளையாடுகிறேன். ஆரம்பத்தில் ஒரு மாணவனுக்கு முடி வெட்டிவிட அரை மணி நேரம் தேவைப்படும். இப்போது பத்து நிமிடத்தில்  முடிக்கிறேன். பாடம் நடத்துவதுடன், முடி திருத்தல் வேலையும்  தொடர்கிறது.

முகநூல் மூலம் எனது வேண்டுகோளை ஏற்று, பள்ளிக்குத் தேவையான உதவிகள் கிடைத்து வருகின்றன. தரைக்கு டைல்ஸ்  போட்டிருக்கிறோம். மாணவ மாணவியர் தங்கும் விடுதியை மேம்படுத்தியிருக்கிறோம். மேல் கூரைகளை மாற்றி அமைத்துள்ளோம். 

எனக்குத் திருமணமாகி ஒரு மகன் உண்டு. அவனும் இந்தப் பள்ளியில் படிப்பான். கணவரும் எனக்கு ஒத்துழைப்பு தந்து உற்சாகப்படுத்துகிறார். எனக்கென்று குடும்பம் அதன் பொறுப்புகள் இருந்தாலும், பள்ளிப் பொறுப்புகளை  நான் மாற்றி வைப்பதில்லை.  சில சமயங்களில்   திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் முழு நேரத்தையும் பள்ளிக்காக செலவழித்திருக்கலாம்  என்று  கூட  நினைத்திருக்கிறேன்.  அந்த அளவுக்கு இந்தப் பள்ளியையும், மாணவ மாணவிகளையும்  நேசிக்கிறேன். இந்தப் பள்ளி நான் வளர்த்த குழந்தை.     மாணவ மாணவியருக்குத்தான் என் வாழ்க்கையில் முதலிடம் தந்து வருகிறேன்'' என்கிறார்  மகாலட்சுமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com