ஸ்விட்சர்லாந்தில் ஸ்ரீதேவிக்கு சிலை!

அண்மையில் துபாயில்  திடீரென்று  மரணமடைந்த    நடிகை  ஸ்ரீதேவிக்கு   ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சிலை அமைக்க ஸ்விட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. 
ஸ்விட்சர்லாந்தில் ஸ்ரீதேவிக்கு சிலை!

அண்மையில் துபாயில் திடீரென்று மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு  ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சிலை அமைக்க ஸ்விட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. 

லண்டனில் உலகத்தின் பிரபலங்களின் ஆளுயர மெழுகு சிலைகள் நிறுவப்பட்டு வரும் 'மேடம் துசாட்ஸ்' மெழுகு அருங்காட்சியத்தில் 2012 - வாக்கில் நடிகை ஸ்ரீதேவியின் உருவச்சிலையை  நிறுவ  பல முயற்சிகள்  எடுக்கப்பட்டன. ஆனால் ஸ்ரீதேவியின் மெழுகு உருவச்சிலை  'மேடம் துசாட்ஸ்' மெழுகு அருங்காட்சியில் நிறுவப்படவில்லை.

இந்த அருங்காட்சியகத்தில் இந்தியப் பிரதமர் மோடி, அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், சச்சின் டெண்டுல்கர், மாதுரி தீட்சித், கரீனா கபூர் உட்பட இந்திய பிரபலங்களின் பதின்மூன்று சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்தியாவைச்  சேர்ந்த மறைந்த பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குநருமான யாஷ் சோப்ரா தனது பல படங்களின் படப்பிடிப்பை ஸ்விட்சர்லாந்தில் நடத்தினார். இதன் காரணமாக ஸ்விட்சர்லாந்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. இதனால், ஸ்விட்சர்லாந்தின் சுற்றுலா வருவாயைப் பெருக்கிய  யாஷ் சோப்ராவை கெளரவிக்கும் வகையில் 2016-ஆம் ஆண்டு  ஸ்விட்சர்லாந்து அரசு சார்பில் இன்டர்லேகன் நகரில் அவரது சிலை திறக்கப்பட்டது. இது தவிர  அந்த நகரில் ஓடும் ரயில் ஒன்றுக்கும்  அவரது பெயர் சூட்டப்பட்டது.

ஆனால், யாஷ் சோப்ராவின்  முன்னோடியாக,  ஸ்விட்சர்லாந்தின் சுற்றுலாவை இந்தியாவில் பிரபலப்படுத்தியது  மறைந்த நடிகை ஸ்ரீதேவிதான்.  ஸ்ரீதேவி நடித்த 'சாந்தினி' படத்தின் பாடல் காட்சிகள் பெரும்பாலும் ஸ்விட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையிலும்,  அதன் பள்ளத்தாக்குகளிலும்தான்   படம்பிடிக்கப்பட்டன. அதனால், 'சாந்தினி' படத்தில் ஸ்ரீதேவி நடித்த  இடங்களை தேடிப் போய்ப் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம்  இன்றைக்கும்  இருக்கிறது.  

அது போன்று மறைந்த இந்திய  நடிகர் ராஜ்கபூர்தான் ஸ்விட்சர்லாந்தின் இயற்கை அழகை வண்ணத்தில் இந்தியர்களுக்கு முதன் முதலில் வெள்ளித்திரை மூலம் அறிமுகப்படுத்தினார். பின்பு 1964-இல் வைஜெயந்திமாலா நடித்த 'சங்கம்', 1967-இல் ஷர்மிளா தாகூர் நடித்த 'ஆன் ஈவினிங் இன் பாரிஸ்' படங்களை ஸ்விட்சர்லாந்தில் படம் பிடித்தார். இந்தப் படங்கள் மூலம்தான் இந்தியர்களுக்கு 'ஸ்விட்சர்லாந்து என்ற சொர்க்கம் உலகில் உள்ளது' என்று தெரிய வந்தது. தொடர்ந்து ஹிந்திப் படங்களின் படப்பிடிப்புகள் ஸ்விட்சர்லாந்தில்   நடந்தன.  

சிவாஜி - காஞ்சனா ஜோடியில் இயக்குநர் ஸ்ரீதர்  தயாரித்து இயக்கிய  'சிவந்த மண்'  படப்பிடிப்பின்  சில பகுதிகள் ஸ்விட்சர்லாந்தில் எடுக்கப்பட்டன. 

ஆக,  ஸ்ரீதேவி  ஸ்விட்சர்லாந்தின்  சுற்றுலாவுக்கான அழகான  விளம்பர தூதராக மாறியிருந்தார். அதன் அடிப்படையில் இப்போது பெர்ன் நகரில்  ஸ்ரீதேவியின்  சிலை அமையப் போகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com