97 வயதில் காமன்வெல்த் நல்லெண்ணத் தூதுவர்!

கேரளத்தில் ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினியம்மா கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று நிரூபித்தவர்.
97 வயதில் காமன்வெல்த் நல்லெண்ணத் தூதுவர்!

கேரளத்தில் ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினியம்மா கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று நிரூபித்தவர். இவருக்கு வயது 97 ஆகிறது. 96 வயது வரை எழுதப் படிக்கத் தெரியாது. இன்று கேரளத்தில் மட்டுமல்ல அகில இந்தியாவிலும் கார்த்தியாயினியம்மா பிரபலம். தனது 96 வயதில், கேரளத்தின் "அறிவொளி' இயக்கமான "அக்ஷரலக்ஷம்' நடத்திய வகுப்புகளில் கலந்து கொண்டு , கேரள கல்வியறிவு தேர்வில் நான்காம் வகுப்பில் 98 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றார். கேரளத்தின் தலைப்பு செய்தியானார்.
 தற்போது, அவரது சாதனையை, கல்வி கற்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை அங்கீகரிக்கும் விதமாக காமன்ல்வெல்த் நாடுகளில் கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் கார்த்தியாயினியம்மாவை நல்லெண்ணத் தூதுவராக நியமித்துள்ளார்கள். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 "வறுமை காரணமாக பள்ளிக்குப் போகவில்லை. திருமணம் ஆகி ஆறு குழந்தைகள் பிறந்தன. கணவர் இறந்ததினால் ஆறு குழந்தைகளை வளர்க்க வீடுகளுக்குச் சென்று வீட்டு வேலை பார்த்து சம்பாதித்தேன். எனது முதுமைக் காலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியதற்கு காரணம், எனது பேத்திகள் அபர்ணா, அஞ்சனாதான். அவர்கள் படிப்பதை பார்த்து நானும் படிக்கலாம் என்று உந்தப்பட்டேன். பேத்திகள் உதவியுடன், பாடங்களைப் படிக்க ஆரம்பித்தேன். தினமும் தவறாமல் படித்தேன்... எழுதி பார்த்தேன்.. அதனால் பாடங்களைச் சரிவர புரிந்து கொள்ள முடிந்தது. எழுத முடிந்தது. இப்போது என்னால் தாய் மொழியான மலையாளம் எழுதப் படிக்க முடியும். அத்துடன் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போடவும் தெரியும்'' என்று பெருமையுடன் கூறுகிறார் கார்த்தியாயினியம்மா.
 கார்த்தியாயினியம்மா நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதால் காமன்வெல்த் அமைப்பில் இருக்கும் சுமார் 53 நாடுகளின் "முறைசாரா கல்விமுறை' வட்டத்திற்குள் கார்த்தியாயினியம்மாவின் வெற்றிக் கதை பெரிதும் பேசப்படுகிறது. அந்த நாடுகளின் பிரசுரங்களில் கார்த்தியாயினியம்மா கல்வி கற்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது இடம் பெற்றுள்ளது. இவைதான் கார்த்தியாயினியம்மாவிடம் "கல்வி அறிவில்லாதவர்களிடையே கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் நல்லெண்ணத் தூதுவர்' என்ற நியமனத்தைக் கொண்டு வந்து சேர்த்துள்ளது. காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த கல்வி பயிலாத மூத்தோர்களிடையே கல்வி கற்கும் ஆர்வத்தை வளர்க்க உதவுகிறது. அநேகமாக காமன்வெல்த் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பும் கார்த்தியாயினியம்மாவை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 - கண்ணம்மா பாரதி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com