இளமையில் வெல்! அருணிமா சின்ஹா!

இவர் ஒரு முன்னாள் வாலிபால் மற்றும் கால்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். 11.4.2011 அன்று தில்லியில் நடைபெற
இளமையில் வெல்! அருணிமா சின்ஹா!

இவர் ஒரு முன்னாள் வாலிபால் மற்றும் கால்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். 11.4.2011 அன்று தில்லியில் நடைபெற இருந்த CISF பரீட்சையில் கலந்துகொள்வதற்காக லக்னௌவில் பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார். இவர் ஏறிய பெட்டியில் இருந்த நால்வரும் ஆண்களாகவே இருந்தனர். ரயில் மெல்ல நகரத் துவங்கியதும் ஒருவன் இவரது கைப்பையை இழுத்தான். மற்றொருவன் இவரது தங்கச்சங்கிலியைப் பறிப்பதற்காக கழுத்தில் கை வைத்தான்.
 அவர்களிடம் எப்படியோ போராடி கீழே தள்ளிவிட்டு ரயில் பெட்டியை விட்டு இறங்குவதற்காக பெட்டியின் வாசல் பகுதிக்கு வந்தார். ஆனால், அதற்குள் ரயில் வேகமெடுக்கத் தொடங்கியது. அவரைப் பின்தொடர்ந்து வந்த அந்த ஆண்கள் அவரது கைப்பையையும், தங்கச் சங்கிலியையும் பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து அவரை கீழே
தள்ளிவிட்டனர். அவரது அலறல் சத்தம் ரயிலின் சத்தத்தில் ஒருவருக்கும் கேட்கவில்லை.
 அருணிமா விழுந்த இடம் அருகிலிருந்த மற்றொரு தண்டவாளம் ஆகும். அவர் அதிர்ச்சியில் இருந்து சுதாரித்து எழுவதற்குள் அந்த வழியே வந்த மற்றொரு ரயில் அவரது ஒரு காலை (முட்டிக்குக் கீழ் உள்ள பகுதி) நசுக்கிவிட்டது. இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில் அவர் இறந்துவிட்டதாகவே அனைவரும் நினைத்தனர். மருத்துவமனையில் சேதமடைந்த அவரது கால் வெட்டி எடுக்கப்பட்டது.
 18.4.2011 அன்று புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் AIIMS) அவர் சேர்க்கப்பட்டார். நான்கு மாத தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த நான்கு மாதமும் நாளிதழ் படிப்பதிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் அவர் செலவிட்டார். மிகவும் மனம் உடைந்து போன அருணிமா தான் உயிர் வாழ்வதில் இனிப் பயன் இல்லை என்றே கூறி வந்தார். எந்நேரமும் கண்ணீர் விட்டபடி இருந்தார்.
 தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கிரிக்கெட் விளையாட்டு வீரர் யுவராஜ் சிங்கின் பேட்டி ஒளிபரப்பானது. புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த யுவராஜ் சிங் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையின் பிற பரிமாணங்கள் பற்றியும், தான் ஆற்ற வேண்டிய சேவைகள் பற்றியும் கூறினார். இந்நிகழ்ச்சி அருணிமாவிற்கு ஒரு மாபெரும் தூண்டுகோலாக அமைந்தது. அவர் தன் சகோதரர் ஓம் பிரகாஷிடம் தான் எவரெஸ்ட் சிகரத்தை ஏற விரும்புவதாகக் கூறினார். பிற உறவினர்களும், நண்பர்களும் "உனக்கு ஏன் இந்தப் பேராசை? முதலில் நடக்க முயற்சி செய்!' என்று கூறியபொழுது அவரது சகோதரர் மட்டும் "நீ நிச்சயம் எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவாய்!' என்று கூறி வந்தார்.
 மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட உடனேயே கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். இதற்காக உத்தரகாசியில் உள்ள நேரு மலையேற்றப் பயிற்சிக் கழகத்தில் சேர்ந்து பயிற்சி பெறத் தொடங்கினார். மலையேற்றத்தின் அடிப்படைத் திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்றார். வதோதராவில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் இவரது மலையேற்றப் பயிற்சிக்கு ஆன நிதியுதவிகளை அளித்தது.
 2011-ஆம் ஆண்டு தொலைபேசி மூலம் இந்தியாவின் முதல் பெண்மணி (எவரெஸ்ட் சிகரத்தை) அடைந்த பச்சேந்திரி பாலைத் தொடர்புகொண்டு தமது விருப்பத்தைக் கூறினார். இவரது தன்னம்பிக்கையையும், அசாத்திய துணிச்சலையும் கண்ட பச்சேந்திரி பால் தான் பயிற்சி அளித்து வந்த "டாடா ஸ்டீல் சாகசக் கழகம்' (TATA STEEL ADVENTURE FOUNDATION) என்று நிறுவனத்தில் 2012-ஆம் ஆண்டு சேர்த்துக் கொண்டு பயிற்சி அளித்தார்.
 மலையேற்றப் பயிற்சியின் முன்னோட்டமாக 2012-ஆம் ஆண்டு 6150 மீட்டர் உயரமுள்ள "ஐலேண்ட் பீக்' (ISLAND PEAK) என்ற சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தார். சூசன் மாட்டோ (SUSEN MAHTO) என்ற மலையேற்றப் பயிற்சியாளருடன் 1.4.2013 அன்று எவரெஸ்ட் சிகரத்தை ஏறத் தொடங்கினார். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய அவருக்கு 52 நாட்கள் ஆனது. அதிலும் மலை உச்சியை அடைய இருந்த கடைசி 17 மணி நேரங்கள் "மரணத்தின் வாயில்' என்று கூறலாம். அவ்வளவு பனிப்பொழிவும், கடுமையான உடல் மற்றும் மனநலக் குறைவும் அருணிமாவைத் துரத்திய
படியே இருந்தன.
 "அடைந்தால் எவரெஸ்ட் மலை உச்சி! இல்லையேல் மரணத்தின் உச்சி!' என்று விடாமுயற்சியோடு போராடி 21.5.2013 அன்று சரியாகக் காலை 10.55 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார். ஒருவரின் சாதனையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது "இமாலய சாதனை' என்று குறிப்பிடுவார்கள். ஆனால், இதுவே உண்மையான இமாலய சாதனை ஆகும். ஏனெனில் நல்ல உடல் வலு உள்ளவர்களே எவரெஸ்ட் மலையை அடைய முடியாமல் பாதியிலேயே தம் பயணத்தைக் கைவிட்டுத் திரும்பியுள்ளனர்.
 ஆனால் அறுவை சிகிச்சையினால் கால் அகற்றப்பட்ட (AMPUTEE) அருணிமா மலை ஏறுவதென்பது மிகவும் கடினமான செயலாகும்.
 இவரது சாதனையைப் பாராட்டி இந்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் 25 லட்சம் ரூபாயை ஊக்கப் பரிசாக அளித்தனர். மேலும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் அவருக்கு பல லட்ச ரூபாய்களை வழங்கின.
 அவை எவற்றையும் தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தவில்லை இவர். மாறாக ஏழைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் பயிற்சி அளிக்க விரும்பி இலவச விளையாட்டு அகாடமி ஒன்றை நிறுவியுள்ளார் இந்த சாதனையாளர்.
 1988-ஆம் ஆண்டு பிறந்த அருணிமா தனது 25-ஆவது வயதில் புரிந்த சாதனையானது "பாரதப் பெண்களின் சகிப்புத்தன்மை, விடாமுயற்சி, ஆற்றல் ஆகியவற்றை உலகிற்குத் தெரியப்படுத்தியுள்ளது' என்று தனது சாதனை பற்றிக் கூறுகிறார் இவர்.
 "சிகரத்தின் மேல் மீண்டும் பிறந்தேன்!' (BORN AGAIN ON THE MOUNTAIN) என்ற தலைப்பில் இவர் எழுதிய நூல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் 2014-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பாரத அரசு இவருக்கு 2015-ஆம் ஆண்டு "பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது. எவரெஸ்ட் சிகரம் மட்டுமல்லாது இவர் பிற கண்டங்களில் உள்ள சிகரங்களையும் எட்டியுள்ளார். அவை
ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ
ஐரோப்பாவில் உள்ள எல்பிரஸ் (ELBRUS)
கோசியுஸ்கோ - ஆஸ்திரேலியா (Kosciuszko in Australia)
அர்ஜென்டினாவில் உள்ள அகன்காகுவா (ACONCAGUA)
இந்தோனேசியாவில் உள்ள கார்ஸ்டென்ஸ் பிரமிட் (CARSTENZ PYRAMID) ஆகியவை ஆகும்.
நினைத்தே பார்க்க முடியாத சாதனைகள் புரிந்த இந்த மலையரசி நம் நாட்டைச் சேர்ந்தவர் என்பதில் நமக்கெல்லாம் பெருமைதானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com