கருவூலம்: திருவனந்தபுரம்

மரபுக்கும் நவீனத்துக்கும் பாலமிடும் திருவனந்தபுரம் கேரளத்தின் தலைநகரம். நம் நாட்டில் உள்ள அழகான நகரங்களில்
கருவூலம்: திருவனந்தபுரம்

மரபுக்கும் நவீனத்துக்கும் பாலமிடும் திருவனந்தபுரம் கேரளத்தின் தலைநகரம். நம் நாட்டில் உள்ள அழகான நகரங்களில் ஒன்று. இந்தியாவில் தென்மேற்கு முனையில் அமைந்துள்ள இந்த நகரத்தில் பாரம்பரிய மற்றும் காலனிக்கால கட்டடங்கள், மாளிகைகள், கோயில்கள் போன்றவை பாதுகாக்கப்பட்டு சிறப்பாக விளங்குகின்றன.
 அரபிக் கடலோரம் ஏழு மலைக்குன்றுகளுக்கு இடையில் அமைந்துள்ள திருவனந்தபுரத்தில் அரச பரம்பரையினர் வாழ்ந்த அழகான அரண்மனைகள் மரபுகெடாமல் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 பரப்பளவு: 2192 சதுர கி.மீ. மழைப்பொழிவு: 170 செ.மீ. சுற்றுலா காலம்: செப்டம்பர் முதல் மே வரை.

அகஸ்தியர் கூடம்: கடல் மட்டத்திலிருந்து 1869 மீட்டர் உயரத்திலிருக்கும் அகஸ்தியர் கூடம் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியாகும். இங்கு அகஸ்தியர் தவம் செய்ததாக நம்பப்படுகிறது.
அக்குளம் சுற்றுலா கிராமம்: திருவனந்தபுரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள பொழுதுபோக்கு சுற்றுலாத்தலம் இது. படகு சவாரி, குழந்தைகள் பொழுதுபோக்கு விளையாட்டுகள், ஆழமற்ற நீச்சல் குளம் என முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடமிது. அனுமதி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை. படகு சவாரி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

அருவிப்புரம்: திருவனந்தபுரத்திலிருந்து 24 கி.மீ. தூரத்தில் ஸ்ரீநாராயண குருவால் கட்டப்பட்ட இந்து சிவாலயம் உள்ளது. ஆண்டுதோறும் சிவராத்திரி திருவிழாவின்போது இங்கு பக்தர்கள் கூடி இறைவன் அருளைப் போற்றுவார்கள். இங்குள்ள அழகான அருவி பக்தர்களை மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளையும் வசீகரிக்கும்.
அருவிக்கரா அணை: திருவனந்தபுரத்தில் தாகத்தை இந்த அணைதான் தீர்த்து வைக்கிறது. நகரத்தின் வடகிழக்கே அமைந்திருக்கும் இந்த அருவிக்கரா அணை மற்றும் இதைச் சுற்றியுள்ள அணைக்கட்டு வளாகமும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய இடங்களாக உள்ளன. இங்குள்ள ஓடை முனையில் உள்ள சிறிய கோயில் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியகம் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் மின்னியல் சம்பந்தமாக கருவிகள் உபகரணங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆற்றுக்கால் பகவதி கோயில்: திருவனந்தபுரத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி கோயிலை பெண்களின் சபரி
மலை என்று அழைக்கின்றனர். இங்கு பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசியில் பரணி நட்சத்திரத்தில் நடக்கும் ஆற்றுக்கால் பொங்கலா திருவிழா புகழ்பெற்றது. இந்த திருவிழாவின் தனிச் சிறப்பான விஷயம் பெண்களுக்கு மட்டுமே உரித்தான பொங்கலா விழா. அரிசி, வெல்லம், தேங்காய்ப்பால், வாழைப்பழம் போன்றவற்றைக் கொண்டு அம்மனுக்குப் படைக்கும் பாயசம்தான் ஆற்றுக்கால் பொங்கலா. இது திருநாளில் காலையில் துவங்கி மேல்சாந்தி என்று கூறப்படும் பிரதான பூசாரி பகவதி அம்மனுக்கு பாயசத்தைப் படையலிடுவதோடு முடியும்.
கனகக்குன்னு பேலஸ்: இந்த அரண்மனை இன்று பல கலை நிகழ்ச்சிகளும் விழாக்களும் அரங்கேறும் இடமாக உள்ளது.
கல்சுரல் இன்ஸ்டிடியூஷன்: திருவனந்தபுரம் நகரத்தில் பல முக்கியமான பண்பாட்டு கல்விக் கழகங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் நூலகங்கள் உள்ளன. இவைகளில் அருங்காட்சியக வளாகத்தில் கலை மற்றும் இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்கள் உள்ளன. இவற்றில் கலைக்கூடம் மற்றும் உயிரியல் தாவரவியல் தோட்டங்கள் முக்கியத்துவமுடையவைகள். நகரத்தின் இதயப்பகுதியில் 80 ஏக்கர் பரப்பளவுள்ள நிலவெளியில் இந்த வளாகம் அமைந்துள்ளது.

குதிரமாளிகா பேலஸ் மியூசியம் (புத்தன் மாளிகா) :  இந்த அரண்மனை, கவிஞர், இசை ஆர்வலர் சமூக சீர்திருத்தவாதி எல்லாவற்றுக்கும் மேலாக திருவாங்கூரை ஆண்ட மன்னரான சுவாதி திருநாள் பலராம வர்மாவால் கட்டப்பட்டது. அரண்மனையில் அழகிய மர வேலைப்பாடுகள் திருவாங்கூரின் பாரம்பரியமிக்க கட்டடக் கலையைப் பறைசாற்றுகின்றன. அரண்மனைக் கண்காட்சியகத்தில் ஓவியங்களும், அரசக் குடும்பம் சேகரித்த அரிய பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பத்மநாபசுவாமி கோயிலுக்கு அருகில் இந்த அரண்மனை உள்ளது சிறப்பு.
கோழிக்கல் அரண்மனை நெடுமண்காடு: திருவனந்தபுரத்திலிருந்து 18 கி.மீ. தூரத்தில் பொன்முடி மலைக்கும் குற்றால அருவிக்கும் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் இந்த அரண்மனை 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதில் இரட்டை அடுக்குகளுடன் சரிவான மேற்கூரை வேய்ந்த நாலுகெட்டு என்ற பாரம்பரியமான கட்டடங்களைக் காணலாம். இந்த அரண்மனையில் கொலு மண்டபம் மற்றும் நாட்டார் கலை அருங்காட்சியகம், நாணயக் கண்காட்சி சாலை ஆகியவை தொல்லியல் துறையினரால் பராம

ரிக்கப்படுகின்றன.

கேரள சட்டசபை வளாகம்: பாளையத்தில் அமைந்திருக்கும் கேரள சட்டசபை வளாகத்தில் இந்தப் புதிய கட்டடம் கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டிருப்பதுடன், தேக்கு மரத்தில் வேலைப்பாடுகளுடன் அமைந்த தூண்களும், மேற்கூரைகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. கலை நுட்பத்தின் பாரம்பரியத்தையும், நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கும் பிரமாண்ட எடுத்துக்காட்டாக சட்டசபை கட்டடம் நிமிர்ந்து நிற்கிறது.
கைவினைப் பொருட்கள் உற்பத்தி மையம்: கைவினைப் பொருட்களுக்குப் பெயர் பெற்ற திருவனந்தபுரத்தில் உள்ள இந்த மையத்தில் தந்தம், மரம் மற்றும் சங்கினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையத்திற்கு அருகில் அற்புதமான நீச்சல் குளம் ஒன்றும் உள்ளது.


சங்குமுகம் பீச்: திருவனந்தபுரத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த கடற்
கரையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்கென்றே சுற்றுலாப் பயணிகள் அலைகடலென திரள்வார்கள். இந்த கடற்கரை திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கும் வேலி சுற்றுலா கிராமத்திற்கும் அருகில் உள்ளது. இங்கு மத்ஸ்ய கன்யகா (மீன் கன்னி) உள்ளரங்க கேளிக்கை விடுதியும் நட்சத்திர மீனின் வடிவிலான ஓய்வு விடுதியும் உணவகமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்குள்ள சாச்சா நேரு டிராபிக் பார்க்கில் குழந்தைகளுக்கு போக்குவரத்து விதிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

சர்கரா: திருவனந்தபுரத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த இடம். இங்குள்ள பகவதி அம்மன் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் பரணி ஆண்டுத் திருவிழாவை மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொண்டாடுகிறார்கள். இந்த பரணி உற்சவத்திற்கு ஒரு மாதம் முன்பாக களியூட்டு என்னும் நிகழ்ச்சி  நடைபெறுகிறது.
சாச்சா நேரு குழந்தைகள் அருங்காட்சியகம்:
இங்கு எல்லா வயது குழந்தைகளும் பார்த்துப் பரவசப்படும் வகையில் 2000-க்கும் மேற்பட்ட பொம்மைகள், தபால் வில்லைகள், விதவிதமான முகமூடிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சென்ட்ரல் ஸ்டேடியம்: இது கேரளத் தலைமைச் செயலகத்தின் பின்னால் உள்ளது. இந்த ஸ்டேடியத்தில் கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை இங்குள்ளவர்கள் விளையாடுவார்கள்.
தலைமைச் செயலகம்: ரோமானியக் கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்ட இச்செயலகத்தில் கேரள அரசின் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
தொலைநோக்ககம்: குன்றின் மீதுள்ள இத்தொலை நோக்ககத்தின் கட்டடங்கள் கட்டுமானக் கலையின் சின்னமாக விளங்குகின்றன. வானத்தை உற்று நோக்குவதற்கான சிறந்த காட்சி கோணம் இங்கிருந்து கிடைக்கும்.
தொடர்ச்சி அடுத்த வாரம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com