கருவூலம்: வேலூர் மாவட்டம்!

கருவூலம்: வேலூர் மாவட்டம்!

தமிழகத்தின் வட பகுதியில் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி வேலூர் மாவட்டம் உள்ளது.

தமிழகத்தின் வட பகுதியில் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி வேலூர் மாவட்டம் உள்ளது. இதனைச் சுற்றிலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் எல்லையாக உள்ளது. 6.077 ச.கி.மீ பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏற்படுத்திய வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1989இல் வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டம், திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1996இல் வட ஆற்காடு மாவட்டம் என்பது வேலூர் மாவட்டம் என பெயர் மாற்றப்பட்டது. 

வரலாறு:
 மன்னராட்சி காலத்தில் பல்லவர்கள், இடைக்கால மற்றும் பிற்காலச் சோழர்கள், விஜயநகரப் போரரசர்கள், ராஷ்டிரகூடர்கள், கர்நாடகப் பேரரசர்கள் என பல மன்னர்களால் ஆளப்பட்டது.  17 மற்றும் 18ஆம் நூற்றாண்டில் மராத்தியர், முஸ்லீம் மன்னர்கள் பின் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யப்பட்டது. 

நிர்வாக அமைப்பு:
 இந்த மாவட்டம் நிர்வாக வசதிக்காக ஆம்பூர், அணைக்கட்டு, அரக்கோணம், ஆற்காடு, குடியாத்தம், காட்பாடி, நாட்டராம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர், வாலாஜாபேட்டை என 11 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் தலை நகரமும், பெரிய நகரமும் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள வேலூர் மாநகரம்தான். இந்நகரம் உள்ளாட்சி அமைப்பினில் மாநகராட்சி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

நீர்வளம்:
 பாலாறுதான் இம்மாவட்டத்தின் முக்கிய நதி. கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் உருவாகி 93கி.மீ.கர்நாடகத்திலும், 23கி.மீ. ஆந்திர மாநிலத்திலும் ஓடி, வேலூர் மாவட்டத்தின் வழியாக தமிழகத்திற்குள் வந்து 222கி.மீ. தூரம் கடந்து வங்கக் கடலில் கலக்கிறது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 4.5 லட்சம் ஏக்கர் விளைநிலம் இந்நதியைச் சார்ந்து உள்ளது. 
 இந்நதியில் ஆந்திர மாநிலத்தில் மட்டும் 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதால் தமிழகத்திற்குள் ஆற்று நீர் வருவது மிகவும் குறைவாக உள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் இது வறண்ட நதி ஆகிவிட்டது. 
 இதனைத் தவிர மழைக்காலத்தில் மட்டுமே நீர்வரத்து இருக்கும் மலட்டார், கெளண்டின்ய நதி, கோட்டாறு, பாம்பாறு, தென்பெண்ணையாறு, தட்சிண கங்கா எனப்படும் அகரம் ஆறு, கல்லாறு, நாகநதி என சிற்றாறுகளும் இம்மாவட்டத்திற்கு வளம் சேர்க்கின்றன. 
 இங்குள்ள தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஏரியும், பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனால் உருவாக்கப்பட்டதுமான காவேரிப்பாக்கம் ஏரி முக்கியமான நீராதாரமாக உள்ளது. 

தொழில்வளம்:
 முன்னர் விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்தது. தற்போது பலவகையான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, முக்கியத் தொழில் மையமாக உள்ளது. தோல் மற்றும் தோல் பதனிடும் தொழில் முக்கியத் தொழிலாக வளர்ச்சியடைந்துள்ளது. வாலாஜா பகுதியில் மூங்கில் அறைகலன் 
(FURNITURE) செய்தல் மற்றும் பட்டு நெசவு முதலிய தொழில்கள் பிரசித்தி பெற்றுள்ளன. மேலும் ராணிப்பேட்டைப் பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் BHEL, M.R.F.LTD, தமிழ்நாடு வெடிபொருள் ஆலை, வேதிப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள், வாகன உற்பத்தித் தொழில், சர்க்கரை உற்பத்தி, சந்தன ஆலை, எனப் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. 
 வேலூரில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ மனைகளில் ஒன்றான "கிறிஸ்டியன் மருத்துவ மையத்தின் (C.M.C) மருத்துவமனை' மருத்துவ சேவையில் மிகுந்த புகழ் பெற்றுள்ளது. இந்தியாவின் பல பகுதியைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து மருத்துவம் செய்து கொள்கின்றனர். 

பெருமைக்குரிய சுற்றுலாத் தலங்கள்!
வேலூர் கோட்டை
 வேலூரின் பெருமைக்குரிய அடையாளமாக நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசுக்குக் கட்டுப்பட்ட  நாயக்க மன்னர்களான திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால் கட்டப்பட்டது. 
 133 ஏக்கர் பரப்பளவில் கருங்கல்லால் கட்டப்பட்ட இக்கோட்டையின் கம்பீரமான உயர்ந்த மதில்களும், அதனைச் சுற்றிலும் 191அடி அகலமும், 29அடி ஆழமும் கொண்ட அகலமான அகழியும், வலுவான கட்டட அமைப்பும் பார்ப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்திவிடும். 
 ராணுவ பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இக்கோட்டயில் வெளி மதில், உள் மதில் என இரண்டு சுற்றுச் சுவர்கள் உள்ளன. இவற்றில் ஆங்காங்கு பெரிய கொத்தளங்களும் கட்டப்பட்டுள்ளன.
 அக்காலத்தில் எதிரிகள் உள்ளே வந்து விடாமல் தடுப்பதற்காக நீர் நிறைந்த அகழியில் 10,000 முதலைகள் வளர்க்கப்பட்டன. தற்போது முதலைகள் இல்லை. சுற்றுலா வருபவர்களை மகிழ்விக்க படகுப் பயணம் நடக்கிறது. 
 கோட்டைக்குள் இருந்து ஆபத்துக் காலத்தில் தப்பித்துச் செல்வதற்காக 12கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதை இருந்துள்ளது. ஆனால் தற்போது அது இல்லை. 
 இக்கோட்டையானது நாயக்க மன்னர்கள், பீஜப்பூர் சுல்தான், மராட்டியர், கர்நாடக நவாப், பிரிட்டிஷார் என பலருடைய கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. தற்போது இந்திய தொல்பொருள் பாதுகாப்பு துறையினரின் பராமரிப்பில் உள்ளது. இங்கு பல்வேறு அரசு அலுவலகங்கள் இப்போது இயங்கி வருகின்றன. சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.
 இக்கோட்டைக்குள் திப்பு மஹால், ஹைதர் மஹால், பாஷா மஹால், பேகம் மஹால், என பல அழகிய அரண்மனைகள் உள்ளன. அவை உயர்ந்த தூண்களுடனும், எழிலான சிற்பங்களுடனும், மண்டபங்களுடனும் காணப்படுன்றன. பசுமையான பூங்காவும் உள்ளது. 
 இவற்றுடன் சிறை வைக்கப்பட்டு இறந்து போன இலங்கை மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜ சிம்மன் சமாதியைச் சுற்றிக் கட்டப்பட்ட முத்து மண்டபமும் காண வேண்டிய இடமாகும்.

ஜலகண்டேஸ்வரர் ஆலயம்
 இக்கோயில் கட்டுமானக் கலைக்கு எடுத்துக்காட்டாக அழகிய தோற்றத்துடனும், அற்புதமான கலைநயத்துடனும் உள்ளது. கண்கவர் ஓவியங்களும், சிற்பங்களும் சிறப்பானவை. நுழைவு வாயில் தாழ்வாரச் சிற்பங்கள் அற்புதமானவை.
 பலகாலம் ஆயுத உற்பத்திச் சாலையாகப் பயன்படுத்தப்பட்ட இவ்வாலயம், பின்னர் தெய்வச்சிலை வைக்கப்பட்டு வழிபாட்டுத் தலமாக நித்திய பூஜை, சடங்குகளுடன் இப்பொழுது உள்ளது. 
 இக்கோட்டைக்குள்ளே ஆற்காடு நவாபினால் கட்டப்பட்ட மசூதியும், ராபர்ட் கிளைவினால் கட்டப்பட்ட தேவாலயமும் கூட உள்ளது.

அருங்காட்சியகம்
 1985இல் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் ஆயுதங்கள், தொல்லியல் கலைப்பொருட்கள், கைவினைப்பொருட்கள், நாணயங்கள், மற்றும் தாவரவியல், விலங்கியல், நிலவியல் சார்ந்த பொருட்கள் என பலவகைப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழமையான ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் படித்தல் போன்ற நடவடிக்கைகளும் நடைபெறுகிறது. 

சிப்பாய்க் கலகம்
 1806 ஜூலை 9ஆம் நாள் பிரிட்டிஷ் படையினரை எதிர்த்து இந்திய படை
வீரர்கள் முதன் முதலாக இக்கோட்டைக்குள் கலகம் செய்தார்கள். இப்போரில் 130 ஆங்கிலேயச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இருந்த போதும் சில மணி நேரத்திலேயே கலகத்தை அடக்கிக் கட்டுக்குள் கொண்டு விட்டார்கள். ஆனாலும் இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப் போராட்டம் என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இத்தகைய பெருமைகள் பல கொண்ட இக்கோட்டையினால் வேலூர் நகரமே "கோட்டை நகரம்' (FORT CITY) என்று அழைக்கப்படுகிறது. 

அடுத்த இதழில் முடியும்.....
தொகுப்பு: கே.பார்வதி, 
திருநெல்வேலி டவுன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com