தாய் சொல் வீணாய்ப் போவதுண்டோ..?

காட்டுக்குப்பம் என்கின்றகுக்கிராமம் ஒன்றினிலே
தாய் சொல் வீணாய்ப் போவதுண்டோ..?

கதைப்பாடல்
 காட்டுக்குப்பம் என்கின்ற
 குக்கிராமம் ஒன்றினிலே
 குமரன் அருணன் என்கின்ற
 ஏழை இளைஞன் வாழ்ந்துவந்தான்.
 அருமைத் தமிழில் பேச்சாற்றல்
 அவனுக்கு இறைவன் அளித்த வரம்
 என்றே ஊரார் போற்றிவந்தார்.
 
 குமரன் அருணன் பேச்சுக்கள்
 பற்பல மேடையில் ஒலித்தாலும்
 உள்ளூர்த் தாண்டி அவன் பெருமை
 இன்னும் பரவ வில்லையென்று
 அவனைப் பெற்ற தாயும்தான்
 அடிக்கடி கவலை கொண்டுவந்தாள்.
 
 ஒருநாள் சென்னை விழா ஒன்றில்
 குமரன் அருணன் சொற்பொழிவாம்...
 வாய்ப்பு கதவைத் தட்டியது!
 போக வரவே செலவாகும்
 ரூபாய் பலவே என்றாலும்
 செலவுக்கெல்லாம் பொறுப்பேற்றார்
 விழாக்குழுவின் தலைவர்தான்.
 
 குமரன் அருணன் பேச்சுக்கே
 பெரும் கரவொலி யெழுந்ததுவே!
 மூச்சு விடாமல் அவனும்தான்
 மூன்று மணிகள் நேரம்வரை
 உரைகள் நிகழ்த்தி உட்கார்ந்தான்!
 அவனுக்கான சன்மானம்
 உறையில் இட்டுத் தந்தார்கள்
 எண்ணிப் பார்க்க வில்லையவன்.
 
 ரயிலில் திரும்பி வருகையிலே
 உறையைப் பிரித்துப் பார்க்கின்றான்...
 நூற்றியொன்று ரூபாய்தான்
 அன்பளிப்பு எனக் கண்டான்...
 எண்ணி எண்ணிக் கலங்கிட்டான்.
 
 போய் வர செலவோ பல நூறு!
 மேடைப் பேச்சுக்கொரு நூறா?
 உழைப்பு, அலைச்சல் மிக அதிகம்...
 உறையில் வரவோ மிகக் குறைவு...
 வெளியூர் நிகழ்ச்சிகள் இனி வேண்டாம்...
 தாயிடம் சொல்லிப் புலம்பிட்டான்!
 
 அருணா... கவலை ஏன் கொண்டாய்?
 சென்னை விழாவின் உன் பேச்சு...
 தொலைக்காட்சியிலே ஒளியாச்சு!
 சிறப்பாய் இருந்தது உன் பேச்சு...
 இன்று ஊரெல்லாம் உன்பேச்சு..!
 
 உரையின் வீச்சை உலகோர் கண்டார்
 உறையில் இருந்ததைக் கண்டாரா..?
 பிறகு எதற்குக் கலங்குகிறாய்...
 விரைவில் உன் பெயர் உயருமப்பா..!
 சிறு காய் காய்க்கும் ஆலமரம்
 சிறந்தே உலகில் வாழ்கிறதே...
 அற்பப் பணத்தை நினைக்காதே...
 உந்தன் உழைப்பு எல்லாமே
 தமிழுக்ககர்ப்பணம்...! மறக்காதே...!
 
 காய்..., கனி... ஆவதில் பேதமுண்டோ..?
 தாய் சொல் வீணாய்ப் போவதுண்டோ..?
 ஆண்டுகள் சிலவே ஆனதுவே...
 அவன்தாய் சொல்லும் பலித்ததுவே...!
 அருணன் வீட்டு வாசலிலே
 அழகுக் கார்கள் பவனி வர...
 ஒருநாள் ஓரூர்... மறுநாள் வேறூர்...
 பேச்சுப் பணிகள் தொடர்கிறதே...!
 
 வான வூர்தியில் சென்றானே...
 வெகுமதி வெகுவாய்ப் பெற்றானே...
 ஐந்து நிமிடப் பேச்சுக்கே...
 ஆயிரம் பத்து... அடைந்தானே..!
 தாயின் சொல்லைத் தட்டாத
 தகைமைப் பண்பால் உயர்ந்திட்டான் -சிறு
 காட்டுக் குப்பத்தில் பிறந்தாலும் -இன்று ஓர்
 எடுத்துக் காட்டாய் இருக்கின்றான்..!
 
 -ரவிவர்மன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com