கருவூலம்: சென்னை மாவட்டம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்,
கருவூலம்: சென்னை மாவட்டம்

சென்னையின் பெருமை மிகு அடையாளங்கள்!
ஆன்மிகத் தலங்கள்!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், வட திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில், அண்ணாசாலையில் உள்ள 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தர்கா, திருவல்லிக்கேணியில் 1795இல் கர்நாடக நவாப் கட்டிய வாலாஜா மசூதி, 1898இல் கட்டப்பட்ட பிரமாண்டமான சாந்தோம் தேவாலயம், எழும்பூர் ரயில் நிலையம் பகுதியில் அழகிய புத்த விஹார் உள்ளிட்ட எண்ணற்ற வழிபாட்டுத் தலங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன! இவற்றுடன் மயிலாப்பூர் பகுதியில் பசுமையும், அமைதியும் சூழ்ந்த ராமகிருஷ்ண மடம் உள்ளது. 

ஆங்கிலேயர் காலத்திய கம்பீரமான கட்டடங்கள்!
 ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட, சென்னை சென்ட்ரல், மற்றும் எக்மோர் ரயில் நிலையங்கள், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டடம், விக்டோரியா பப்ளிக் ஹால், கிழக்கிந்தியக் கம்பெனியாரால் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை, உள்ளிட்டவை கம்பீரமான அழகுடன் சென்னைக்குப் பெருமை சேர்க்கிறது!

மெரினா கடற்கரை!
13கி.மீ. நீளம் கொண்ட இந்த கடற்கரையே உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாகும்! மணற்பாங்கான இந்த அழகிய கடற்கரை சென்னை மாவட்டத்தின் கிழக்கு எல்லையாக உள்ளது. இப்பகுதியில்தான் கலங்கரை விளக்கம், அண்ணா சமாதி, மற்றும் நினைவகம், எம்.ஜி.ஆர். சமாதி, ஜெயலலிதா சமாதி, உழைப்பாளர் சிலை மற்றும் மறக்க இயலாத பலரின் சிலைகள் உள்ளன. 
இக்கடற்கரை பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே 1869இல் கட்டப்பட்ட நேப்பியர் பாலம் அமைந்துள்ளது. 6வளைவுகளுடன் 149 மீ. நீளம் கொண்ட இந்த ஆறுவழிச்சாலைப் பாலம் 2010இல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
 இக்கடற்கரை பகுதியிலேயே சுதந்திர தின, குடியரசு தின அணிவகுப்புகள் நடைபெறுகிறது. 

எழும்பூர் அருங்காட்சியகம்!
1851இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் இதுதான். இங்கு தொல்லியல், நாணயவியல், பண்டைய சிலைகள், படிமங்கள், போன்ற சேகரிப்புகள் சிறப்பானவை. 

நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம்!
வான்புகழ் திருக்குறள் தந்த அய்யன் திருவள்ளுவரை போற்றும் வகையில் தமிழக அரசால் 1976இல் கட்டப்பட்டது. கல்லில் பிரமாண்டமான தேர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. 

சென்னை புறநகர் பேருந்து நிலையம் -கோயம்பேடு
ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் இதுதான்! 2002இல் தொடங்கப்பட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக 2.5 லட்சம் மக்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். 

அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம் 
தெற்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் ஆகும் இது! 3.75 லட்சம் சதுர அடி பரப்பளவில் 9 தளங்களுடன் ஒரே நேரத்தில் 5000 பேர் படிக்கும் வசதி கொண்டது. 1896இல் தொடங்கப்பட்ட பழமையான புகழ்பெற்ற கன்னிமாரா நூலகமும் சென்னையில் உள்ளது. 

கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கம்!
 அறிவியலோடு பொழுதைக் கழிப்பதற்கான மையம் இது! கோள்கள், துணைக்கோள்கள், கிரகணங்கள் உள்ளிட்ட வானிலைத் தகவல்களுடன் பிரமிப்பூட்டும் திரைக்காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. மேலும் ரயில் தொடங்கி விமானம், நீர் மூழ்கிக் கப்பல் வரை பல்வகை வாகனங்கள் இயங்கும் விதங்களை விளக்கும் அரங்குகள் என பல வகையான அறிவியல் பூர்வமான அமைப்புகள் இங்கே உள்ளன. 

டைடல் பார்க் - தரமணி
 டைடல் பார்க் என்பது ஒரு மென்பொருள் பூங்கா. சென்னையின் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடையாளச் சின்னமாக உள்ளது. தமிழ்நாடு அரசால் கட்டப்பட்ட 13 மாடிக் கட்டடமான இதில் பல முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இது ஆசியாவின் மிகப்பெரிய மென்பொருள் பூங்காவாகும். 

ராயபுரம் ரயில் நிலையம்
இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள மிகவும் பழமையான ரயில் நிலையம் இதுதான்! 1856இல் தொடங்கப்பட்ட இந்த ரயில் நிலையத்தில் இருந்துதான் முதல் தென்னிந்திய போக்குவரத்து வாலாஜா வரை சென்றது. 
மேலும் உலகின் பெரிய நீதிமன்ற வளாகங்களில் ஒன்றான அழகிய பிரமாண்டமான கட்டடங்கள் கொண்ட சென்னை உயர் நீதி மன்ற வளாகம்! 
 1916இல் உருவாக்கப்பட்ட எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம், நேரு உள்விளையாட்டு அரங்கம்!  போன்றவை சென்னைக்குப் பெருமை சேர்ப்பவை!

சென்னை மாநகரம் - சில தகவல்கள்!
தமிழகத்தின் தலைநகரம்! 
வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம், என பலவித காரணங்களுடன் சென்னைக்கு வந்தவர்கள் புறநகர்ப் பகுதிகளில் குவிந்ததால் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு பெருநகரமாக வளர்ந்துள்ளது. 
தற்போது சென்னை மாநகரம் என்பது 1189ச.கி.மீ நிலப்பகுதியைக் கொண்டது. இதில் சென்னை (176ச.கி.மீ.)...,காஞ்சிபுரம் (376 ச.கி.மீ.) மற்றும் திருவள்ளூர்(637ச.கி.மீ) மாவட்டங்களின் நிலப்பகுதி இணைந்துள்ளது. இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகவும் உள்ளது. 
வாகன உற்பத்தியில் சென்னை மாநகரமே இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. தகவல் தொழில் நுட்பத்தில் நாட்டின் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

சென்னை மாநகராட்சி
இந்தியாவின் பழமையான நகராட்சி அமைப்பாகும். உலகின் இரண்டாவது பழமையான நகராட்சி அமைப்பு! 
கிழக்கிந்தியக் கம்பெனியாரால் 30 டிசம்பர் 1687இல் பட்டயம் உருவாக்கப்பட்டு, 29 செப்டம்பர் 1688இல் நகராட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது! புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி 10 மைல் பரப்பளவு இதன் எல்லையாக அன்று வரையறுக்கப்பட்டது! இந்த நிர்வாக அமைப்பு 1947வரை "சென்னை நகராண்மைக் கழகம்'' என்ற பெயர் கொண்டு இயங்கியது. 
தற்போது சென்னை மாநகராட்சி அமைப்பு ரிப்பன் கட்டடத்தில் இயங்குகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மற்றும் 200 உறுப்பினர்கள் கொண்டது.
இந்தியாவில் கொல்கத்தா மாநகருக்கு அடுத்ததாக சென்னை மாநகர எல்லைக்குள்தான் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்று மற்றும் பண்பாட்டு சிறப்பு மிக்க (HISTORICAL AND CULTURAL SIGNIFICANCE) சிறந்த கட்டட அமைப்புடன் கூடிய பாரம்பரியப் பெருமை மிக்க 2467 கட்டடங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது! 
-நிறைவு

தொகுப்பு: கே.பார்வதி,
திருநெல்வேலி டவுன்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com