கருவூலம்: அலெக்ஸாண்டிரியாவின் கலங்கரை விளக்கு! 

ஆசியா மைனரை வென்ற அலெக்ஸாண்டருக்கு எகிப்தையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது!
கருவூலம்: அலெக்ஸாண்டிரியாவின் கலங்கரை விளக்கு! 

ஆசியா மைனரை வென்ற அலெக்ஸாண்டருக்கு எகிப்தையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது! கடுமையான போருக்குப் பின் அவன் எண்ணம் நிறைவேறியது. போர் முடிந்தவுடன் ஒரு கப்பலில் நைல் நதிக்கரை ஓரமாகப் பிரயாணம் செய்தான். 

அந்த நீண்ட நைல் நதி மத்தியதரைக் கடலில் கலக்கும் இடத்தை அடைந்தபோது அந்த இடத்தில் சில மண்குடிசைகள் மட்டுமே இருப்பதைப் பார்த்தான். அந்த இடம் ஒரு துறைமுகம் கட்ட மிகத் தகுதியான இடம் என்பதை உணர்ந்தான். அதனால் தன்னுடைய புதிய நாட்டின் வியாபாரம் பெருகும் என்று எதிர்பார்த்தான். அந்த இடத்தில் தன்னுடைய பெயரில் ஒரு பெரிய நகரை உருவாக்கவும் தீர்மானித்தான். அது தன்னுடைய எகிப்து வெற்றியை என்றும் நினைவூட்டும் என்று கருதினான். 

அக்காலத்தின் மிகச் சிறந்த கட்டடக் கலை நிபுணர்களை தன் நாட்டிலிருந்து எகிப்துக்கு விரைந்து வர உத்தரவிட்டான். நகரை நிர்மாணிக்கும் பணியைச் செவ்வனே திட்டமிட்டுச் செயல்படுத்த ஆணையிட்டான். 

அதன்படி மெதுவாக மிகப் பெரிய நகரம் உருவானது. அழகிய மிகச் சிறந்த கட்டடங்களும், அகன்ற அழகிய வீதிகளும் அமைக்கப்பட்டன. பூந்தோட்டங்கள், கடலுக்கு இட்டுச் செல்லும் அழகிய சலவைக்கல் படிக்கட்டுகள் என்று சிறந்து விளங்கிய அந்நகரின் புகழ் உலகெங்கும் பரவியது. அந்நகர் மிகச் சிறந்த கல்வி மையமாகவும் விளங்கியது. அந்நகர்தான் மிகப் புகழ்பெற்ற அலெக்ஸாண்டிரியா!

கல்வி கேள்விகளில் மிகுந்த ஆர்வமாய் இருந்த அலெக்ஸாண்டர் மிகச் சிறந்த கல்வியாளர்கள் பலரை அந்நகரில் வசிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தான்! அத்தகையவர்களில் ஒருவர் அலெக்ஸாண்டருக்கு இளமையில் கல்வி கற்பித்த அரிஸ்டாட்டில் ஆவார்! பல பள்ளிகளையும், உயர் கல்வி நிறுவனங்களையும் அவர்அந்நகரில் நிறுவினார். 

அம் மாவீரனால் திட்டமிடப்பட்டு, உருவாக்கப்பட்டு, அவன் புகழைப் பரப்பிய, அவன் பெயரை உடைய அந்நகரை முழு உருவில் அவன் பார்க்கவில்லை. அதன் பிறகு அங்கு செல்லவே இல்லை. 

அடிக்கல் நாட்டப்பட்டுக் கட்டட வேலைகள் துவங்கியவுடனேயே உலகின் பிற பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்றுவிட்டான். ஆனால் அந்த மாவீரனின் பெயர்தாங்கி இன்னும் அந்நகர் உள்ளது. 

நெப்போலியன் சொன்னதுபோல, "அலெக்ஸாண்டரின் மிகச் சிறந்த வெற்றிகளைவிட, அவன் கட்டிய அலெக்ஸாண்டிரியா அவனுக்கு அதிகப் புகழைச் சேர்த்தது!''

அலெக்ஸாண்டர் தன் வாழ்நாளில் அந்நகருக்கு  செல்லவில்லை! ஆனால்...... அவன் இறந்த பிறகு அவன் உடல் அங்குதான் புதைக்கப்பட்டது! 

மிக அற்புதமாகச் செதுக்கப்பட்ட வெண்சலவைக் கல் கல்லறையில் முழு அரசு மரியாதையுடன் அவன் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் இன்று அநேகமாக மறக்கப்பட்டுவிட்ட நிலையில் நகரின் ஒரு மூலையில் உள்ள ஒரு வீட்டில் மறைந்து கிடக்கிறது.

அலெக்ஸாண்டரின் மரணத்திற்குப் பிறகு அவன் வென்ற நாடுகள் அவனுடைய தளபதிகளால் பிரித்துக் கொள்ளப்பட்டன. அதன்படி "டாலமி' என்பவர் எகிப்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 

காலம் செல்லச்செல்ல, அலெக்ஸாண்டிரியாவின் வணிகமும், வளமும் அதிகரித்தன. மத்தியதரைக்கடல் பகுதியில் அமைந்திருந்த பல துறைமுகங்களுக்கு இடையே பலவகைப்பட்ட பொருட்களை ஏற்றி இறக்கிக் கொண்டு அலெக்ஸாண்டிரியா துறைமுகத்திற்கு ஏராளமான கப்பல்கள் வந்து போயின. 

அக்காலக் கப்பல்கள் நீராவியால் இயங்கியவைகள் அல்ல. துடுப்புகளாலும், பாய்மரங்களாலும் செலுத்தப்பட்ட சிறிய கப்பல்கள் மற்றும் படகுகள் ஆகும். அலெக்ஸாண்டிரியா கடற்பகுதியில் ஏராளமான பாறைகள் இருந்தன.

கடற்பாறைகளில் இவைகள் அடிக்கடி மோதி விபத்துக்கள் ஏற்பட்டன. அதுவும் இரவில் போதுமான வெளிச்சம் இன்றி மாலுமிகளால் ஆபத்து நிறைந்த பாறைகளிலிருந்து விலக்கி கப்பல்களைச் செலுத்த முடியவில்லை. ஏராளமான கப்பல்கள் சரக்குகளுடன் பாறைகளில் மோதி கடலுக்குள் மூழ்கின.

விபத்துக்களால் ஏராளமான பொருட்சேதங்களும், உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன! 

"இத்தகைய விபத்துக்களைத் தவிர்க்க கடற்கரை அருகே ஒரு உயரமான கோபுரம் கட்டி, அதன் உச்சியில் விளக்குகள் எரிக்கப்பட்டு அந்த வெளிச்சம் கடலுக்குள் வெகுதூரம் தெரியுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்....அந்த வெளிச்சத்தின் உதவியால் கப்பல்கள் துறைமுகத்திற்குள் பாதுகாப்பாக வர முடியும்...'' என ஒரு நிபுணர் தெரிவித்தார். இதற்கு முன் இப்படி ஒரு எண்ணம் எங்கும், எப்பொழுதும் ஏற்பட்டதே இல்லை! நிபுணரை அனைவரும் பாராட்டினர். 

அரசன் டாலமியை அணுகி உடனே அப்படி ஒரு கோபுரம் கட்டப்பட வேண்டும் என்று அனைவரும் கேட்டுக் கொண்டனர். அப்பகுதியை அடிக்கடி தாக்கும் புயல், சூறாவளிக் காற்றுக்கு தாக்குப் பிடிக்கும் பலம் கொண்டதாக இருக்கு வேண்டும்...., ஒளிக்கதிர்கள் கடலுக்குள் நீண்ட தூரம் தெரியும்படி மிக உயரமாக இருக்க வேண்டும்....,மேலும் அந்தக் கோபுரம் அழகானதாக  வடிவமைக்கப்பட வேண்டும்..., எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று உத்தரவிட்டான் அரசன்.  

அடுத்து எந்த இடத்தில் கட்டுவது என்று ஆய்வு செய்யப்பட்டது. கடைசியில் "ஃபராஸ்' தீவு தேர்வு செய்யப்பட்டது. அது ஏற்கெனவே பாலத்தால் அலெக்ஸாண்டிரியா நகருடன் இணைக்கப்பட்டிருந்தது. 

செதுக்கப்பட்ட பெருங்கற்களால் கோபுரம் கட்டப்பட்டது. உருக்கப்பட்ட கற்களால்  இணைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டன. தரை மட்டத்திலிருந்து அறுநூறு அடி உயரம் கட்டப்பட்டது. இந்த அழகான கம்பீரமான கோபுரத்தின் அடிப்பகுதியை கடல் அலைகள் தழுவித் திரும்பின.

மொத்தம் எட்டு மாடங்கள்! அவற்றைச் சுற்றிச் சுற்றி சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வசதியான பால்கனிகள், உள்ளே மொத்தம் முந்நூறு விசாலமான அறைகள் என்று பிரம்மாண்டமாய் உயர்ந்து நின்றது கோபுரம்! கடலைப் பார்த்து நின்ற சுவர்களில் சதுரமான திறப்புகள் அல்லது ஜன்னல்கள் இருந்தன. 

இவற்றின் அருகே இரவில் நெருப்பு வளர்க்கப்பட்ட தீவர்த்திகள் கொளுத்தப்பட்டன. உச்சி மாடத்தைச் சுற்றி நன்கு பளபளக்கும் உலோகக் கண்ணாடிகள் நிறுத்தப்பட்டிருந்தது. வெகு தூரத்தில் வந்த பொழுதே கப்பல்கள் இதில் பிரதிபலித்தன! இரவு நேரங்களில் இதற்குள் எரியும் விளக்குகள் வைக்கப்பட்டன. கீழே எரியும் நெருப்பையும் மிகுதிப்படுத்தி, ஒளிக்கதிர்களை நெடுந்தூரம் கடலில் அனுப்பியது இந்த உலோகக் கண்ணாடி.

மிகவும் உயரமாக இருந்ததால் இதிலிருந்து கிளம்பிய ஒளி, நூறு மைல் தூரம் பரவியது. அன்றைய மாலுமிகள் கண்கண்ட கடவுளாய் இதைக் கருதினர்.

அலெக்ஸாண்டிரியா வீரர்கள், எதிரிகளின் கப்பல்களைத் தாக்கவும் இதைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. தங்களைத் தாக்கும் நோக்குடன் வரும் கப்பல்கள் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுதே கோபுரத்தில் இருந்தபடியே அக்கப்பல்களின் பாய்மரங்களின் மேல் சூரிய ஒளிக்கதிர்களைக் குவியச் செய்து எரித்து அழித்தனர் என்று பேசப்பட்டது. அக்கோபுரத்தின் மேல் வருங்கால மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அரசன் டாலமியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டது. 

உலகின் முதல் கலங்கரை விளக்கு இவ்வாறு உருவானது! இன்று உலகம் முழுவதிலும் உள்ள கலங்கரை விளக்குகளுக்கு இதுவே முன்னோடி! அது கட்டப்பட்ட ஃபராஸ் தீவின் பெயரைச் சேர்த்து "ஃபராஸ் கோபுரம்' என்று அழைக்கப்பட்டது. அதன் கீர்த்தி உலகெங்கும் பரவியது. கிரேக்க மொழியில் கலங்கரை விளக்கை "ஃபராஸ்' என்ற சொல்லாலேயே குறிப்பிடலாயினர். பிரெஞ்சு மொழியில் "ஃபோர்' என்றால் கலங்கரை விளக்கு என்றுதான் பொருள்!

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எகிப்து, அரேபியர்களால் கைப்பற்றப்பட்டது. அப்பொழுது ஓர் எதிரி நாட்டரசன் அலெக்ஸாண்டிரியாவைத் தாக்கி அழிக்க விரும்பினான். இக்கலங்கரை விளக்கு அதற்கு இடையூறாக இருந்தது. எனவே முதலில் அதை அழிக்கச் சதித் திட்டம் தீட்டினான். 

அதன்படி அப்பொழுது எகிப்தை ஆண்ட அல்-வாலிட் என்ற கலிஃபாவிடம் ஒரு ஒற்றனை அனுப்பினான். ஒற்றனும் கலிஃபாவிடம், ஃபராஸ் கோபுரத்தின் அடியில் தங்கத்தால் செய்யப்பட்ட முழு உருவச் சேவல்கள், விலை உயர்ந்த கற்கள், ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிலைகள் மற்றும் தங்கக் குவியல்கள் புதைந்து கிடப்பதாகக் கூறினான்!  

கலிஃபாவின் பேராசை கட்டுக்கடங்காமல் போனது. ஃபராஸ் கோபுரத்தை இடித்துத் தள்ள உத்தரவிட்டான்! சதித்திட்டம் பற்றி அறிந்ததாலோ அல்லது வேறு காரணத்தாலோ முழுவதும் இடிக்கப்படவில்லை. மீதம் நின்ற கோபுரம் பிற்காலத்தில் மசூதியாக மாற்றப்பட்டது. ஆனால் பதினான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட பூமி ஏழு அதிசயங்களில் ஒன்றாகப் புகழப்பட்ட அந்த மாபெரும் ஃபராஸ் கோபுரம் இன்று மறைந்து போனது. மிகமிக ஆழத்தில் கட்டப்பட்ட அதன் அடித்தளம் இன்னும் அழியாமல் இருக்கிறது! 
(உலக அதிசயங்கள் என்ற நூலிலிருந்து)

கோட்டாறு ஆ.கோலப்பன், நாகர்கோயில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com