காஷ்மீரத்துச் சால்வை!

தாயுமானவர் திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர்.  தேனினும் இனிய தெய்வீகப் பாடல்களை இயற்றியவர். சிறு  வயதிலேயே திருச்சி மலைக்கோட்டையில் அமர்ந்துள்ள தாயுமானவ சுவாமி மீது அதிகப் பற்று கொண்டிருந்தார். 
காஷ்மீரத்துச் சால்வை!

தாயுமானவர் திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர்.  தேனினும் இனிய தெய்வீகப் பாடல்களை இயற்றியவர். சிறு  வயதிலேயே திருச்சி மலைக்கோட்டையில் அமர்ந்துள்ள தாயுமானவ சுவாமி மீது அதிகப் பற்று கொண்டிருந்தார். 

திருச்சி மன்னரிடம் கணக்காயராகப் பணி புரிந்து கொண்டிருந்தார் தாயுமானவர். சாரமா முனிவர் மடத்தில் மெளன குருவைச் சந்திக்கும் வாய்ப்பு தாயுமானவருக்குக் கிடைத்தது. அது முதல் மெளன குரு மீது ஈடுபாடு அதிகமாகி  ஞான முறைகளைக் கற்றதோடு நிஷ்டைப் பயிற்சியும் பெற்றார். 

தமிழ், வடமொழி இரண்டிலும் புலமை பெற்றார். தாய், தந்தையர் விருப்பத்தை நிறைவேற்றத் திருமணம் செய்து கொண்டார். பிறகு ஞான மார்க்கதில் மனம் ஈடுபட இல்லறத்தைத் துறந்து துறவியானார். தாயுமானவ சுவாமியை வணங்கி சாரமா முனிவர் மடத்திற்குத் திரும்பும் போது இறைவன் அருளால் பாடும் திறனைப் பெற்றார். 

சாரமா முனிவரே பல நூல்களைக் கற்றுத் தெளிந்தவர். ஆயினும் தாயுமானவர் பாடல்கள் அவரைப் பெரிதும் வசீகரித்தன. அமரம் , செடி, கொடி, மலர், உட்பட அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு கொண்ட காரணத்தாலும், அவைகளில் இறைவனையே கண்ட காரணத்தாலும்,  எங்கும் நீக்கமற நிறைந்த பரிபூரணானந்தமே கடவுள்  எனும்  பொருள்படப் பாடினார்.

அனைத்தையும் இறைவனாகவே கருதினார். திருச்சி மலைக்கோட்டை வாசலில் ஒரு முழத்துண்டு மட்டுமே அணிந்து, வருவோர் போவோர் தரும் பிரசாதத்தை உண்டு அங்கேயே தங்கியிருந்தார். 

ஒரு மார்கழி மாதம், திருச்சியை ஆண்ட மன்னன், அமைச்சருடன் மலைக்கோட்டைப் பெருமானை வணங்கிக் கீழே வந்தபோது, தமது கைகளையே போர்வையாக்கிக்  கொண்டு குளிரில் படுத்திருந்தார் தாயுமானவ சுவாமிகள். அவரது கோலத்தைக் கண்டு மனமிரங்கி தம்மிடமிருந்த காஷ்மீரத்துச் சால்வையை அவர் மீது போர்த்திவிட்டு அமைச்சருடன் சென்று விட்டார்.

சற்று நேரம் கழித்து கண்விழித்த தாயுமான சுவாமிகள் தம்மீது இருந்த சால்வையைக் கண்டார். அருகே இருந்தவர்கள் மன்னர் அதைப் போர்த்திச் சென்றதாகக் கூறினார்கள். சிறிது நேரத்தில் ஒரு ஏழைச் சிறுமி இடையில் ஒரு ஒட்டுத் துணியுடன் மேலாடையின்றி தம் கைகளால் உடலைப் போர்த்திக் கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.  அந்தச் சிறுமியைக் கண்ட தாயுமானவ சுவாமிகள் மனம் நெகிழ்ந்தார். தமக்கு மன்னர் அளித்த விலையுயர்ந்த காஷ்மீரத்துச் சால்வையை அந்தச் சிறுமிக்குப் போர்த்தினார்!

அவளும் மகிழ்ச்சியைத் தன் கண்களில் தெரிவித்து மறைந்தாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிலர், "இந்த சாமிக்கு என்ன திமிர்!....மன்னர் அளித்த சால்வையை கேவலம் ஒரு தாழ்த்தப்பட்ட சிறுமிக்குக் கொடுத்து விட்டாரே...'' என்று அங்கலாய்த்தனர்.  செய்தி மன்னர் அவைக்கு எட்டியது. அமைச்சர் கடுங்கோபம் அடைந்தார். 

சாமியார், மன்னரை அவமதித்து விட்டதாகக் கருதினார். மன்னரும் அமைச்சர் கூறுவதை ஆமோதித்தார். காவலர்கள் தாயுமானவ சுவாமிகளை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.  சுவாமிகள்  குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். மன்னர் அவருக்குச் சிறைத் தண்டனை விதித்தார். 

அப்போது சிறுமியாக வந்தது யார் என்று ஞானத்தால் உணர்ந்த தாயுமானவர் சிரித்தபடி, " மன்னரே, உமக்கும், எமக்கும் கிடைக்காத பெருமை அந்தக் காஷ்மீரத்துச் சால்வைக்குக் கிடைத்திருக்கிறது. வந்த சிறுமி யார் என்று கருதுகிறீர்கள்?  சாட்சாத் அகிலாண்டேஸ்வரியே சிறுமியாக வந்திருக்கிறாள்....,வேண்டுமானால் அவளது ஆலயத்துக்குச் சென்று சோதித்துப் பாரும்...!'' எனறார்.
 மன்னர் அவர் கூறியபடியே அமைச்சரை அனுப்பிப் பார்த்து வரும்படி கூறினார். 

தாயுமானவர் சொன்னது போலவே அகிலாண்டேஸ்வரியின் மீது சால்வை இருந்தது. அது கண்ட அமைச்சர் அதிர்ந்து போனார். மன்னரிடம் தெரிவித்தார். 

"மன்னா!....எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருக்கிறார். எல்லாப் பொருளிலும் அவர் நிறைந்திருக்கிறார். எல்லோரிடமும் அன்பு பாராட்டுவது நமது  கடமை'' என்றார் தாயுமானவர். 

மன்னர், தாயுமானவரை வணங்கி, "தவறு நிகழ்ந்து விட்டது...,மன்னியுங்கள்'' என்றார். 

எவரிடத்தும் அன்பு செலுத்துவது அறிவார்ந்தவர்களின் கடமை. இந்த நிகழ்ச்சி இரக்க குணமும் அன்பும் நிறைந்த தாயுமானவர் வாழ்க்கையில் நடந்தது.  இந்நிகழ்ச்சி கீழ்க்கண்ட குறளுக்கு ஒத்து இருக்கிறது.

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு 
என்போடு இயைந்த தொடர்பு.

பொருள்: கிடைத்தற்கரிய இந்த உடம்பும், உடம்போடு கூடிய உயிரும், அன்பு செலுத்துவதற்கென்றே அமைந்தது என்று அறிவுடையோர் கூறுகிறார்கள்.
கதை, படங்கள் : ஓவியர் "தாமரை'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com