கருவூலம்: திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்தான் தமிழகத்தின் 32ஆவது மாவட்டமாக கடைசியாக உருவானது. மாநிலத்தில் பொருளாதாரத்திலும்,
கருவூலம்: திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்தான் தமிழகத்தின் 32ஆவது மாவட்டமாக கடைசியாக உருவானது. மாநிலத்தில் பொருளாதாரத்திலும், தொழில்துறையிலும் நன்கு வளர்ச்சியடைந்த முதல் பத்து மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டமும் ஒன்று.  திருப்பூரின் வணிக ரீதியான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதற்காகவே 2008இல் கோவை மாவட்டத்தின் 4தாலுக்காக்களையும் ஈரோடு மாவட்டத்தின் 2 தாலுக்காக்களையும் ஒன்றிணைத்து புது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 

• 5,186 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாவட்டம் சீரான நிர்வாகத்திற்காக திருப்பூர், அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம் என ஏழு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 

• தமிழகத்தின் ஏழாவது பெரிய நகரமும் இந்தியாவின் முக்கியமான வணிக மையமுமான திருப்பூர் மாநகரமே இதன் தலைநகரமும், பெரிய நகரமுமாகும். மஹாபாரத காலத்தில் அர்ஜூனன், எதிரிகளால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை இவ்விடத்தில் மீட்டு, தாராபுரம் திரும்பிச் சென்றார். அதனால் "ஆநிரை திருப்புதல்' என்ற பெயர் பெற்று, பின்னர் அதுவே திருப்பூர் என மருவியதாகக் கூறப்படுகிறது. 

• இம்மாவட்டத்தைச் சுற்றிலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களும், தெற்கே கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டமும் சூழ்ந்து  உள்ளது.

வரலாற்றுச் சிறப்பு!
இன்றைய திருப்பூர் மாநகரம் சங்க கால சேரர்களின் ஆட்சியில் கொங்கு தேசத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. முற்கால பாண்டியர், இடைக்கால மற்றும் பிற்கால சோழர்கள், விஜயநகரப் பேரரசர்கள், மதுரை நாயக்கர், மைசூர் பேரரசர் என இந்திய அரச குடும்ப வம்சத்தினர் இந்நிலப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர்.  1799இல் திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப்பின் மதராஸ் மாகாணத்துடன் இணைக்கப்பட்டு, ஆங்கிலேயர்களால் நிர்வகிக்கப்பட்டது. 
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற வள்ளலான "குமண வள்ளல்' அமராவதி ஆற்றின் கரையில் உள்ள குழுவூர் (இன்றைய கொழுமம்) என்ற ஊரினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளார்.

நீர்வளம்!
 மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் உள்ள சுமார் 516 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட நிலப்பகுதி அதிக மழைப் பொழிவினைப் பெறுகிறது. பிற பகுதிகள் மழை மறைவு பிரதேசங்களாக உள்ளன. 
 அமராவதி ஆறும், நொய்யல் ஆறும் இம்மாவட்டத்தின் ஊடாகக் கடந்து செல்லும் முக்கிய நதிகள்.

அமராவதி ஆறு!
 சங்க காலத்தில் ஆண் பொருநை என்றும், பின்வந்த காலத்தில் ஆம்ரபி என்றும், தற்போது அமராவதி என்றும் அழைக்கப்படுகிறது. இது காவிரியாற்றின் துணையாறு. பழனி மலைத்தொடருக்கும், ஆனை மலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சப்பட்டி பள்ளத்தாக்கில் தோன்றுகிறது. (இவ்விடம் இந்திரா காந்தி வனவிலங்குகள் சரணாலயத்திற்கு உட்பட்டது)  உடுமலைப்பேட்டை தாலுக்காவில் இதன் குறுக்கே அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. அணையை கடந்து வடகிழக்காக செல்லும் இந்நதியுடன் கொழுமம் என்ற இடத்தில் (மடத்துக்குளம் வட்டம்) குதிரை ஆறு இணைகிறது. பின் தாராபுரம் வழியாக கரூர் மாவட்டத்தில் காவிரியுடன் சேர்கிறது. 
 மேலும் நன்காஞ்சி, கல்லாபுரம் ஆறு, கூடவனாறு, சண்முகா நதி, உப்பாறு, குடுமியாறு, நல்லதங்காள் ஓடை என பல நீரோடைகள் அமராவதி ஆற்றுடன் கலக்கிறது. 

அமராவதி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள்!
 கேரளத்தில் உதயமாகும் பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய மூன்று ஆறுகள் அமராவதி ஆற்றின் பிரதான நீர்பிடிப்புப் பகுதிகளாகும்.  இதில் 18 கி.மீ. நீளம் கொண்ட சின்னாறு ஆனைமலைத் தொடரில் (இடுக்கி மாவட்டம்) தோன்றி மாநில எல்லையை ஒட்டி சிறிது தூரம் சென்று கேரள பகுதியிலேயே கூட்டாறு என்ற இடத்தில் பாம்பாற்றுடன் இணைந்து பின் தமிழகத்திற்குள் வருகிறது. 
 அதே போல் முதன்மையான நீர் பிடிப்புப் பகுதியாக இருக்கும் பாம்பாறும் கேரள மாநிலத்திற்குள் ஆனை மலைத்தொடரில் உற்பத்தியாகிறது. இந்த பாம்பாற்றின் துணையாறுகள் செங்கலாறு, தலையாறு மற்றும் வட்டவடா என்ற மூன்று சிறிய ஆறுகள்.  இவை கேரள பகுதியிலேயே பாம்பாற்றுடன் சேர்கிறது. 

அமராவதி அணை!
 நீர்த்தேக்கத்துடன் கூடிய இந்த அணை மாவட்டத்தின் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலாத்தலம்! சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஆண்டு முழுவதும் இதமான காலநிலை கொண்ட உடுமலைப்பேட்டை பகுதியில் இந்திரா காந்தி வனவிலங்குகள் சரணாலயத்தில் இவ்வணை உள்ளது. 1957இல் அமராவதி ஆற்றின் குறுக்கே வெள்ள நீரை தடுக்கவும், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் கட்டப்பட்டது. இப்பொழுது 4மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நீர்த்தேக்கப் பகுதி 9.31 ச.கி.மீ. பரப்பும், 33 மீ ஆழமும் கொண்டது. இங்கு தென்னிந்தியாவின் மிகப் பெரிய முதலைப்பண்ணை உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட சேற்று முதலைகள் எனப்படும் மக்கர் முதலைகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.
 மேலும் பல வகையான மீன் வகைகளும் வளர்க்கப்படுகின்றன. மாநிலத்தின் மிக அதிக அளவில் ஆண்டுக்கு சராசரியாக 110டன் மீன்கள் இங்கு மீனவர்களால் பிடிக்கப்படுகிறது. 
 அணையை ஒட்டி மிக அழகாக உருவாக்கப்பட்ட பூங்காவும், சுற்றுலாப் பயணிகள் சற்று தொலைவில் கம்பீரமாகத் தெரியும் பசுமையான ஆனைமலையையும், மற்றும் பழனி மலையின் இயற்கை எழிலையும் பார்த்து ரசிக்கும் வகையில் அணையின் மீது ஏறுவதற்கு படிக்கட்டுகளும் உள்ளன. 

நொய்யல் ஆறு!
 பழம் பெருமை மிக்க இந்த நதி மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்த வெள்ளியங்கிரி மலையில் தோன்றி 173கி.மீ. தூரம் பயணித்து நொய்யல் என்ற ஊரில் காவிரியில் கலக்கிறது. 
 முன் காலத்தில் காஞ்சி மாநதி என்று அழைக்கப்பட்ட இந்நதியுடன் செய்யாறும், பெரியாறும் கூடுத்துறையில் இணைகிறது. இவற்றைத் தவிர 34 நீரோடைகள் இதனுடன் கலக்கிறது. 

அன்றைய நொய்யல் ஆறு!
 சங்க காலத்தில் இந்நதிக் கரையில் நல்ல பொருளாதார முன்னேற்றமும், சமுதாய வளர்ச்சியும், கலாச்சார மேம்பாடும் கொண்ட மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாக இன்று கொடுமணல் தொல்லியல் களம் உள்ளது. 
 சோழர்கால கல்வெட்டுகள் சில இந்நதியின் சிறப்புகளையும், நீர்வளத்தையும், கரையில் இருந்த திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஊர்களின் அன்றைய செழிப்பினையும் எடுத்துச் சொல்கின்றன. 
 மேலும் கடந்த முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை நதிப் பாதையில் இருந்த ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகள் பசுமையான வயல்வெளிகளுடன் விவசாயம் சார்ந்த பலவகையான தொழில்களுடன் சீரும் சிறப்புமாக செழிப்புடன் இருந்துள்ளது. 
 நொய்யல் நதியினை ஒட்டி முன்காலத்தில் ஏற்பட்ட மக்கள் குடியிருப்பின் அசுர வளர்ச்சியே இன்றைய கோவை மாநகரம்!

இன்றைய நொய்யல்!
 கோவை மாநகரின் பலவகையான கழிவு நீர்க்கலப்பு, திருப்பூர் மாநகரின் பின்னலாடை நிறுவனங்களின், மற்றும் சாயப்பட்டறைகளின் பெரிய அளவினாலான ரசயான கழிவு நீர் போன்றவைகளால் எதற்குமே பயன்படுத்த முடியாத அதிக மாசு கொண்ட நீராக நொய்யல் மாறிவிட்டது!
 இதனை சீர் செய்ய திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் 300க்கும் மேற்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தற்போது செயல்படுகிறது.  

ஒரத்துப் பாளையம் அணை!
 நொய்யல் ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கத்துடன் கூடிய இந்த அணை சென்னிமலைக்கும் காங்கேயத்திற்கும் இடையில் 1992இல் கட்டப்பட்டது. 

வனவளம்!
 மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அங்கமான ஆனைமலை மலைத்தொடர் தமிழக, கேரள எல்லைப் பகுதியில் கேரளத்தின் இடுக்கி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பரவியுள்ள இம்மலையின் சிகரங்கள், சரிவுகள் இடையிலுள்ள பள்ளத்தாக்குப் பகுதிகள் எல்லாம் வனமாகவே உள்ளன. 
 இதில் தமிழக பகுதியில் உள்ள 958ச.கி.மீ பரப்பளவு கொண்ட வனப்பகுதிகள் இந்திரா காந்தி வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 
 இந்த சரணாலயத்தின் 387 ச.கி.மீ. பரப்பு திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை தாலுக்காவில் அமைந்துள்ளது. 
 2400மீ. உயரத்தில் அமைந்துள்ள பசுமையான புல்வெளிகள், அடர்ந்த பசுமை மாறாத சோலைக்காடுகள், சலசலக்கும் நீரோடைகள், உயர்ந்த மரங்கள் என பசுமையாகக் காட்சியளிக்கும்.  இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, மான், கரடி, காட்டுநாய், பறக்கும் அணில், நரி உள்ளிட்ட பலவகையான மிருகங்களும், எண்ணற்ற பறவை இனங்களும், ஏராளமான பூச்சி வகைகளும், ஊர்வன வகைகளும் வாழ்கின்றன.

திருமூர்த்தி மலை, கோயில், அருவி, மற்றும் நீர்த்தேக்கம்.
 மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், அதன் ஒரு பகுதியாக திருமூர்த்தி மலை அமைந்துள்ளது.
 புராண காலத்தில் அத்திரி மகரிஷி தன் மனைவி அனுசூயா தேவியுடன் இங்கு வாழ்ந்து வந்தார்.  அனுசூயா தேவி தன் கணவன் மீது கொண்ட பக்தியை சோதிக்கும் பொருட்டு சிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று மூர்த்திகளும் தோன்றியதாக தலவரலாறு கூறுகிறது. அதனால் திருமூர்த்திமலை எனப் பெயர் பெற்றது.
 மலையின் அடிவாரத்தில் திருமூர்த்தி ஆலயம் எனப்படும் அமணலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. பழமையான இவ்வாலயம் சுற்றிலும் ரம்மியமான இயற்கைக் காட்சிகளுடன் விஸ்தாரமான முன் மண்டபம்,  அழகான சிற்பங்கள், என எழிலுடன் அமைந்துள்ளது.
 ஆலயத்திலிருந்து, வளமான மலைச்சரிவுகளில்  இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் பஞ்ச லிங்க அருவி எனப்படும் திருமூர்த்தி அருவியில் மனமும், உடலும் குளிர நீராடி மகிழலாம்.
 கீழிறங்கி வரும் இந்த அருவியின் நீரே திருமூர்த்தி அணையினால் தடுக்கப்பட்டு, நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த நீர்த்தேக்கப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதற்கான படகுத் துறையும், அருகில் நீச்சல்குளம், மீன் காட்சியகம், மற்றும் தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளன. இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம். 
  இவற்றைத் தவிர மலை மீது பரஞ்சோதியார் ஆசிரமும், ஆதிரை, அனுசூயா கோயில்களும் இருக்கின்றன. மேலும் "யுனிவர்செல் பீஸ் பவுண்டேஷன்' என்கிற குண்டலினி யோகா பயிற்சி செய்யும் அமைப்பும் இங்கு செயல் படுகிறது. 
தளி! - யானை கட்டும் பாறை-
 உடுமலைப் பேட்டையிலிருந்து திருமூர்த்தி ஆலயம் செல்லும் பாதையில் 20 கி.மீ. தூரத்தில் "தளி' என்ற ஊர் உள்ளது.
அக்காலத்தில் இப்பகுதியில் பாளையக்காரர்கள் செல்வாக்குடன் ஆட்சி செய்துள்ளனர். 
 இவர்கள் யானைகளை மலைமேல் ஏறுவதற்கும், வேட்டையாடுவதற்கும்,  பொருட்களை எடுத்துச் செல்லவும், அறுவடை செய்த கதிர்களை போரடிக்கவும் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு ஆதாரமாக பல்வேறு இடங்களும், பொருட்களும் இப்பகுதியில் உள்ளன.
 இங்கு தட்டையான பாறைகளை குடைந்து இரண்டு பக்கமும் துவாரம் போட்டு அதில் சங்கிலி கொண்டு யானைகளின் கால்களைக் கட்டியுள்ளனர்.  இவை யானை கட்டும் பாறை என்றே அழைக்கப்படுகிறது. 
தொடரும்....

தொகுப்பு: கே.பார்வதி, 
திருநெல்வேலி டவுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com