சின்னச் சின்ன யோசனைகள்!

ஒரு பெரிய பணக்காரர். அவருக்குப் பல பெரிய பிரச்னைகள் இருந்தன.  பலர் சொன்னதன் பேரில் ஒரு துறவியைச் சந்தித்தார் அவர்.
சின்னச் சின்ன யோசனைகள்!

முத்துக் கதை
ஒரு பெரிய பணக்காரர். அவருக்குப் பல பெரிய பிரச்னைகள் இருந்தன.  பலர் சொன்னதன் பேரில் ஒரு துறவியைச் சந்தித்தார் அவர்.  தன்னுடைய பிரச்ளைகளை அந்தத் துறவியிடம் விளக்கிச் சொன்னார்.  எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட துறவி
பணக்காரரைப் பார்த்து, "நீ காலையில் சீக்கிரம் எழுந்து விடு! காலையில் மனம் தெளிவாக இருக்கும்....உன் பிரச்னைகளைப் பட்டியலிடு....,ஒரேடியாக எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து விடலாம் என்று அவசரப்படாதே....தீர்க்க முடிந்த பிரச்னைகளை தீர்த்துக் கொண்டே வருவாய்....பிரச்னைகளின் பட்டியல் தானாகவே குறைய ஆரம்பிக்கும். அது உனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்''... என்று சொன்னார்.
 பணக்காரருக்கு சிரிப்பு வந்துவிட்டது.  
"ஐயா!...நீங்க தப்பா நினைச்சுக்கக்கூடாது....,என்னுடைய பிரச்னகள் ரொம்பப் பெரிசு!....அதையெல்லாம் இந்த மாதிரி சின்னச் சின்ன யோசனைகளால்  தீர்த்து விட முடியுமா?....என்னால் நம்ப முடியவில்லை''. 
 துறவி கோபப்படவில்லை.  "இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?''
 "ஏழெட்டு கிலோமீட்டர்கள் இருக்கும்....ஏன் கேட்கறீங்க?''
 "இருட்டிடுச்சே......, எப்படித் திரும்பிப் போவீங்க?''
 "அது ஒண்ணும் பிரச்னை இல்லே....,நான் கார்லதான் வந்திருக்கேன்''
 "உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டு கிலோ மீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?''
"நிச்சயமா!...அதிலென்ன சந்தேகம்?''
"எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும் சில அடி தூரத்துக்குத்தான் வெளிச்சம் காட்டும். அதை வெச்சுக்கிட்டு ஏழெட்டு கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க?''
 "என்ன சாமி காமெடி பண்றீங்க?....நாம கார் ஓட்டும்போது கொஞ்ச தூரம் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சாப் போதாதா? அதெ வெச்சுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டுக் கிலோமீட்டர் என்ன...,ஏழாயிரம் கிலோமீட்டர் கூடப் போகலாமே!''
"அதே மாதிரிதான்!...நான் சொன்ன யோசனைகளும்!....யோசனைகள் சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க....அதைப் பயன்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும். எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்!  ஒரே நாளில் நாம் பெரியவர்களாகி விடுவதில்லை...கொஞ்சம் கொஞ்சமாத்தான்!......பள்ளியில் சேர்ந்த உடன் பட்டம் கிடைத்து விடுவதில்லை....கொஞ்சம் கொஞ்சமாப் படித்துத்தான்! போயிட்டு வாங்க!''
 பணக்காரருக்கு பல விஷயங்கள் தெளிவாகிவிட்டது போல் தோன்றியது. மனம் அமைதி அடைந்தது! துறவியிடம் விடை பெற்றுக் கொண்டு,  நிம்மதிப் பெருமூச்சுடன் காரை ஸ்டார்ட் செய்தார்.

-ப.சரவணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com