பகிர்ந்தால் வெற்றி

நித்யா பாவம் விமல்!....பெருக்கற, கோலம் போடறது, பூ பறிக்கறது. இப்ப கூட பாரு....,செடிகளுக்குத் தண்ணி  விட்டுக்கிட்டு இருக்கா
பகிர்ந்தால் வெற்றி

அரங்கம்
காட்சி-1
இடம்-வீடு
மாந்தர்-விமல், அம்மா, அப்பா.

(விமல் பள்ளியிலிருந்து வீடு திரும்புகிறான்....கோபத்துடன் காணப்படுகிறான்)

அம்மா: என்ன விமல் பசியா?... என்ன சாப்பிடறே?... 
விமல்: எதுவும் வேண்டாம் போ...
அம்மா: என்ன கோபம்?
விமல்: ஏன் எனக்குத் தயிர் சாதம் வெக்கலே? வெறும் மோர் சாதம்...., பிடிக்கவேயில்லே....
அம்மா: ம்....கேட்பேன்னு தெரியும்.... "பால் கெட்டுப் போச்சு...., கடைக்குப் போய் தயிர் வாங்கிண்டு வா' ன்னு ன்னு எத்தனை தடவை காலையிலே சொன்னேன்...., "இதோ வரேன்'ன்னு "வாட்ஸ் அப்' லே மூழ்கிட்டே...., பள்ளிக்கூடத்துக்கும் நேரமாச்சு....அதான் மோர் சாதம் கொடுத்தேன்...
விமல்: ஏன் அக்கா நித்யாவை வாங்கி வரச் சொல்லியிருக்கலாமில்லே?
அம்மா: நித்யா பாவம் விமல்!....பெருக்கற, கோலம் போடறது, பூ பறிக்கறது. இப்ப கூட பாரு....,செடிகளுக்குத் தண்ணி  விட்டுக்கிட்டு இருக்கா........பெட்டி தேய்க்கிறதுக்கு  போடறதுக்குத் மூட்டை நிறையத் துணி இருக்கு!  போய்க் கொடுன்னு  ரெண்டு நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்.....நீ கேட்ட பாடில்லே....போ! இப்பவாவது கொடுத்துட்டு வா!
விமல்: இரும்மா....,போறேன்!

(என்றபடி லேப் டாப்பில் விளையாட உட்கார்ந்து விடுகிறான்.)

அப்பா: விமல், இப்படியே நீ "வாட்ஸ்  அப்'பிலேயும், "லேப் டாப்' பிலேயும் மூழ்கிட்டா ஒரு வேலை செய்ய முடியாது.... வீடுன்னா எவ்வளவோ வேலை இருக்கும்..... அடுத்த தெருவுக்குப் போய் காய்கறி வாங்கிண்டு வரக்கூட சோம்பல் படறே...."கிரில் கேட்' கிரீச்சுன்னு சத்தம் போடறது...., கொஞ்சம் எண்ணை போடச் சொன்னேன்..... இன்னும் செய்யலே....நீயே யோசிச்சுப் பாரு....

காட்சி-2
இடம்: கோகலே நகர் மாணவர் 
முன்னேற்றச் சங்கம் 
மாந்தர்- விமல், சங்கர், பூபதி, ரவி, கணேஷ்.

(கோகலே நகர் மாணவர் முன்னேற்றச் சங்கத்தில் வருகிற சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவது பற்றி உரையாடல் நிகழ்கிறது.)
 
சங்கர்(சங்கத் தலைவன்): ஒவ்வோர் ஆண்டும் நம்மில் ஒருவர் பொறுப்பேற்று, சிறப்பாக நடத்தி வருகிறோம்.... இந்த ஆண்டு நம் சங்கத்தின் துணைச் செயலர் விமலே பொறுப்பேற்று நடத்தக் கேட்டுக் கொள்கிறோம். (கரவொலி) இதோ பட்டியல் தயாராக உள்ளது. இந்தா விமல்! யார் யார் என்ன பணிகள் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியதும் நீதான் விமல்!
விமல்: நன்றி!..... அதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்..... குறித்துக் கொள்ளுங்கள்.... 200 அடிகொடித் தோரணத்தை  ஆளுக்கு நாற்பது அடியாக நாமே தயார் செய்ய வேண்டும்.  கொடிக்கம்பத்தைச் சுற்றி கோல அலங்காரம், சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்வது, இவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.... கம்பத்தில் ஏற்ற துணிக்கொடியைக் கொண்டு வருதல், அதில் பூ வைத்துக் கட்டல், இந்த வேலைகளைச் சங்கர், நீ பார்த்துக் கொள். இனிப்புகள்...,வரவேற்பு நாற்காலிகள்..... இவற்றை பூபதி நீ கவனித்துக்கொள். விருந்தினருக்குச் சிறப்புப் பரிசு தயார் செய்தல், சிறு ஆடல் பாடல் நிகழ்ச்சி, கொடி வணக்கப் பாடல், இவற்றை ரவி, கணேஷ் நீங்க எடுத்துக்குங்க!...., மற்றவை அலைபேசியில் பேசுவோம்!
நால்வரும்: சரி விமல்!....வாழ்த்துகள்!..... நன்றி!

காட்சி-3
இடம்- விமல் வீடு
மாந்தர்- விமல், மாமா, அப்பா.

(விமல் கொடித் தோரணம் தயாரிப்பில்....,மாமா வருகிறார்)

மாமா: என்ன விமல்!....சுதந்திர தின விழாவுக்குத் தயார் செய்யறியா?
விமல்: ஆமாம் மாமா!......இந்த முறை விழா நடத்த வேண்டியது என் பொறுப்பு!
மாமா: ஏன் பெரியவங்க நடத்தறதில்லையா?
அப்பா: இளைஞர்களுக்கு இந்த வயசிலிருந்தே பொறுப்பும், தேசபக்தியும் வளரணும்.....அதனால் வருடாவருடம் இவங்களையே கொண்டாடச் சொல்லிவிட்டோம்.....
விமல்: மாமா!.....இந்த விழாவுக்கு நீங்கதான் ஒரு நல்ல பேச்சாளரை ஏற்பாடு செய்து தரணும்....
மாமா: ஓ! அதுக்கென்ன....,ஏற்பாடு பண்ணிட்டு உனக்குத் தெரிவிக்கிறேன்.

காட்சி-4
இடம்- வீடு
மாந்தர்-  விமல், சங்கர், அப்பா, நித்யா,

(விழாவிற்கு முதல் நாள் மாலை. விமல் நண்பர்களுடன் கைபேசியில் பேசுகிறான்.)

விமல்: சங்கர்!..... விமல் பேசறேன்!.... கம்பத்துக் கொடி...., உதிரிப்பூக்கள்...., தோரணக்கொடி...., எல்லாம் தயார் பண்ணிட்டியா?
சங்கர்:  விமல்!....எங்க பெரியப்பா டெல்லியிலேந்து திடீர்னு வந்துட்டார். எல்லாரும் ஊட்டிக்குப் போகலாம் வாங்கன்னு கட்டாயப்படுத்தினார்....அப்பாவும், அம்மாவும் கிளம்பிட்டாங்க....நான் மட்டும் எப்படிடா தனியா?.... இப்ப  எல்லாரும் விமானத்துலே இருக்கோம்!..... ஆனா நீ கவலைப்படாதே!......கம்பத்துல கட்ட வேண்டிய கொடி நாளைக்குக் காலையிலே நாலு மணிக்கே உன் கைக்கு வந்து சேர்ந்துடும்....தப்பா நினைக்காதே விமல்! 
விமல்: சங்கர்!....,கொடி கிடைச்சுடும் இல்லே....சரி...., (என்றபடி மற்ற மூன்று நண்பர்களிடமும் பேசுகிறான். இவ்வாறே மற்ற மூன்று நண்பர்களும் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையைக் காட்டி தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.)
விமல்: (வருத்தத்துடன்) ச்சே! நான் மட்டும் எப்படி விழாவைக் கொண்டாட முடியும்? 
அப்பா: என்ன விமல்!...என்ன ஆச்சு? 
விமல்: பாருங்கப்பா, சுதந்திர தின விழாவை எல்லாரும் சேர்ந்து சிறப்பா கொண்டாடலாம்னு சொன்னாங்க....இப்ப ஆளுக்கு ஒரு ஊரா பறந்து போயிட்டாங்க.....
நித்யா: கவலைப்படாதே  விமல்!  நான் கூட இருந்து உதவி செய்யறேன்!.....கம்பத்துலே கட்ட மூவண்ணக்கொடி மட்டும் இருந்தா போதும்! 
விமல்: அது கூட நாளைக் காலையிலே நாலு மணிக்குத்தான் கிடைக்கும்! ... நித்யா!... கொடிக்கம்பத்தைச் சுற்றி நீதான் கோலம் போடணும்!
நித்யா: அதைப்பத்தி கவலைப்படாதே...., அதுக்காக நாளைக்குக் காலையிலே ஐந்து மணிக்கே எழுந்துடுவேன்...."பளிச்'சுன்னு பெரிய ரங்கோலி கோலமே போடறேன்.

காட்சி-5
இடம்- வீடு
மாந்தர்-அப்பா, அம்மா, விமல், 
நித்யா, சங்கர்.

(விமல் சுதந்திர தின விழா காலை 4மணி முதல் கொடியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்!  ஏழு மணி முதல் வரவில்லை! சங்கரிடம் பேச தொலைபேசித் தொடர்பு கிடைக்கவில்லை.)

அம்மா:  விமல், கொடி வராமல் போகாது....நீ விழாவுக்குப் போகத் தயாராகு!
விமல்: அம்மா, என் வெள்ளைப் பைஜாமா ஜிப்பா எங்கே காணோம்?....அதைத்தான் இன்னிக்குப் போட்டுக்கப் போறேன்.... எங்கே இருக்கு!
அம்மா: ம்..., இப்பதான் நினைவுக்கு வரதா? .... உன் பைஜாமா, ஜிப்பா எல்லாம் பெட்டிபோட வேண்டிய அந்தத் துணிமூட்டையிலே பத்திரமா இருக்கு. பொட்டி போட நீ கொண்டு போவேன்னு தவமா கிடக்கு பார்!
விமல்: ச்சே! இதுலேயும் ஏமாத்தமா?  சரி, வேறே தேடிக்கறேன்...
நித்யா: விமல், நானும் பக்கத்து வீட்டு சியாமளாவும் பிரமாதமா கோலம் போட்டிருக்கோம்!....ஆனா மைதானத்துலே விழா நடக்கப்போற அறிகுறியே தெரியலே....
விமல்: மணி ஏழேகால் ஆயிடுத்து.....இன்னும் கொடி வந்து சேரல்லே..... சங்கரும் தொலைபேசியிலே கிடைக்கல்லே.... இந்த  விழா இனிமே எப்படி நடக்கும்? கொடியில்லை....தோரணமில்லை....ஒலி பெருக்கி...., புகைப்படம், கொடிப்பாட்டு...., இனிப்பு எதுவுமில்லை.... நித்யா மைதானத்துலே பொதுமக்கள் யாராவது வந்திருப்பாங்க....நீ அவங்ககிட்டே நடந்ததைச் சொல்லி விழா இல்லைன்னு சொல்லிடு! வேலைகளைப் பகிர்ந்துக்கலாம்னு பேசினவங்க பொறுப்பில்லாம போயிட்டாங்க...!
அம்மா: இப்போ புரிஞ்சுக்கோ விமல்! விழா வேலைகளை உன் நண்பர்கள் பகிர்ந்துக்கலே....அதனால விழா நடக்காத நிலைக்கு வந்திருக்கு....இதே போலத்தான் வீட்டு வேலைகளும்!....பகிர்ந்து செய்தா எல்லாருக்கும் மகிழ்ச்சி.
அப்பா: ஆமாம் விமல்!  விழாங்கறது ஒருநாள் நிகழ்ச்சிதான். ஆனால் வீடுங்கறது தினம் தினம் பல நிகழ்ச்சிகள் நடக்கிற இடம். அதனால பல வேலைகள் இருந்துக்கிட்டே இருக்கும். அதில் பங்கேற்றுச் செய்யப் பழகணும். எந்த வேலையையும் ஒரு பொருட்டா நினைச்சு பொறுமையா செய்தால்தான் பேரும், புகழும், வெற்றியும் கிடைக்கும். 
விமல்: அப்பா, இப்போ புரியறது...,வேலைகளைப் பகிர்ந்து செய்யறதோட அவசியம்! வேலைகளை பகிர்ந்துக்கிட்டா வெற்றி நிச்சயம்!
வெளியிலிருந்து ஒரு குரல்: நூற்றுக்கு நூறு அதான் உண்மை விமல்!
விமல்: (வெளியே எட்டிப் பார்த்தபடி) ஏய் சங்கர்! நீயா? எப்படிடா? ஊட்டிக்குப் போறதாச் சொன்னே?
சங்கர்: அப்படியெல்லாம் போயிடுவோமாடா?.....நாங்க யாரும் எங்கேயும் போகலே....புறப்படுடா....,எல்லாம் மைதானத்துலே தயாரா இருக்காங்க....உங்க மாமா கூட  சிறப்பு விருந்தினரோட வந்தாச்சு!
விமல்: ஏ, நித்யா, மைதானத்துலே எதுவுமே நடக்கலேன்னு சொன்னியே....
சங்கர்: நாங்கதான் அப்படிச் சொல்லச் சொல்லியிருந்தோம்! டேய், நினைச்சுப் பாருடா....,போன மூணு வருஷ விழாவிலேயும் உன் பங்கு வேலையை நீ செய்யலே,...,கிரிக்கெட் பந்தயங்கள் ஏற்பாடு செய்தபோதும்...உன் பங்கு வேலையை செய்யாம நழுவிட்டே!  அந்த சமயத்துலே எல்லாம் வேலைச் சுமையால் நாங்களெல்லாம் எப்படி தவிச்சோம் தெரியுமா?...அந்தத் தவிப்பை நீயும் புரிஞ்சுண்டா நல்லாயிருக்கும்னு இந்த நாடகத்தை நாங்க ஒத்துமையா நடத்தினோம்!...பகிர்தலோட பெருமையை நீயும் தெளிவா புரிஞ்சுக்கிட்டே!....கவலைப்படாதே!....விழா  விமரிசையாவே நடக்கும்!....சீக்கிரம் புறப்படுடா....ஆனா இந்த நாடகத்துக்காக பொய் சொல்லும்படி ஆயிடுத்து....அதுதான் மனசை உறுத்தறது....
அப்பா: அதனால பரவாயில்லை  சங்கர்...நல்லது நடக்கத்தானே பொய் சொன்னீங்க..., விமலுக்கு ஒரு நல்ல உண்மையை புரிய வெச்சுட்டீங்க....வாழ்த்துகள்!....புறப்படுங்க....நாங்க பின்னால வரோம்!
திரை
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com