எடை

ஒரு குளத்தில் பலவகையான மீன் குஞ்சுகள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக்
எடை

ஒரு குளத்தில் பலவகையான மீன் குஞ்சுகள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு மீன், மற்ற மீன்களிடம், "அதோ பார்....அது எவ்வளவு கறுப்பாக இருக்கிறது. அதன் குரல் வேறு அருவருப்பாக இருக்கிறது. பார்த்தால் பயமாக இருக்கிறது...., வாங்க!...,போய்விடலாம்!'' என்று சொன்னவுடன், எல்லா மீன்களும் குளத்துக்குள் நீந்தி மறைந்தன. 
 "ஏன் இப்படி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள்?''  என்று ஒரு பெரிய மீன் கேட்டது. 
"கரையில் ஒரு காகம் இருக்கு....அதனுடைய நிறமும் குரலும் பயமுறுத்துவதாக இருக்கிறது'' என்றது ஒரு குட்டி மீன். 
"ஓ!....காகமா?  உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரை தவறாக எண்ணக் கூடாது....காகத்தால் நமக்கு ஆபத்து எதுவுமில்லை.'' என்று பெரிய மீன் சொல்லியது,
மீன் குஞ்சுகள், "இவருக்கு எப்போதும் உபதேசம்தான்'' என்று கேலியாகச் சிரித்தன.

மறுநாள்.....
காகம் விளையாட்டாக பக்கத்து கிராமத்தில் ஒரு வீட்டிலிருந்து ஒரு தேங்காய் மூடியை கவ்விக்கொண்டு ஜாலியாகப் பறந்து கொண்டிருந்தது....
மீன்கள் வசித்த குளத்தின் கரையில் கொக்கு ஒன்று வந்து அமர்ந்தது! அதைப் பார்த்த மீன் குஞ்சுகள், "ஏய்....,அங்கே பார்!.....வெள்ளையாக!....ஆஹா!.....என்ன பறவை அது?.....வெள்ளையாக எவ்வளவு அழகாக இருக்கிறது?....அலகும் நீளமாக கச்சிதமாக இருக்கிறது....அடடா!.....அதன் நடையழகைப் பாரேன்!....'' என்று பேசியதைக் கேட்ட கொக்கு, குளத்தை நெருங்கி தண்ணீரில் கால் வைத்தது. 
உடனே மீன் குஞ்சுகள், "அண்ணா!....,நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்!....உங்கள்அலகைத் தொட்டுப் பார்க்கலாமா?''  என்று கேட்டதும் கொக்கு மனதுக்குள் ஒரே கொண்டாட்டம்!  "ஓ!....தொட்டுப் பாரேன்!'' என்றது.
ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க மீனைக் கவ்வியது கொக்கு. இதைப்  பார்த்த மீன் குஞ்சுகள், அதிர்ச்சி அடைந்து, "ஆபத்து!....ஓடுங்கள்!...., ஓடுங்கள்!'' என்று சத்தமிட்டுக் கொண்டே குளத்திற்குள் ஓடின.
கவ்விய மீனுடன் வானில் பறக்கும்போது........தேங்காய் மூடியைக் கவ்விக்கொண்டு பறந்த காகம் அதை நழுவ விட்டது! சரியாக அந்தத் தேங்காய் மூடி கொக்கின் தலையைத் தாக்க....,வாயைப் பிளந்தது கொக்கு! மீன் வாயிலிருந்து நழுவிக் குளத்திற்குள் விழுந்து பயத்தில் வேகமாக நீந்தி தன் சகாக்களை அடைந்தது!  "ஸ்ஸ்....அப்பாடா''  என்றது தப்பிய மீன்குஞ்சு!
"அந்தப் பெரிய மீன் சொன்னது சரியாகப் போச்சு!... அழகை மட்டும் பார்த்து ஒருவரை எடை போட்டுப் பழகக் கூடாது''
"ஆமாம்!....இனிமேலாவது எச்சரிக்கையாக இருப்போம்!'' என்று உறுதி எடுத்துக் கொண்ட மீன் குஞ்சுகள் ஜாலியாக நீந்தி விளையாட ஆரம்பித்தன!

-த.ஜகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com