கருவூலம்: திருப்பூர் மாவட்டம்

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், அமராவதி ஆறு மற்றும் அணை, கீழ் பவானி திட்டம் முதலியவற்றால் இந்த மாவட்டம் பாசன வசதி பெறுகிறது. 
கருவூலம்: திருப்பூர் மாவட்டம்

சென்ற இதழ் தொடர்ச்சி...

விவசாயம்
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், அமராவதி ஆறு மற்றும் அணை, கீழ் பவானி திட்டம் முதலியவற்றால் இந்த மாவட்டம் பாசன வசதி பெறுகிறது. 
 நெல், கரும்பு, வாழை, தென்னை, மக்காச்சோளம், காய்கறிகள் உள்ளிட்டவை இங்கு விளையும் முக்கிய விளைபொருட்களாகும். 
 இவற்றைத் தவிர தமிழகத்தின் விதை நெல் தேவையான 85000 மெட்ரிக் டன் அளவில், சுமார் 50 சதவீதம் விதை நெல் உற்பத்தி திருப்பூர் மாவட்டத்தின் பங்களிப்பாக உள்ளது! பருத்தியும் குறிப்பிட்ட அளவில் பயிரிடப்படுகிறது. 

காங்கேயம் காளைகள்!
 தமிழ்நாட்டின் பாரம்பரியமான நாட்டு மாடுகளில் பல இனங்கள் இருந்தாலும், சட்டென்று நினைவுக்கு வரும் பெயர் காங்கேயம் காளைகள்தான்!  இக்காளைகள் தமிழகத்தின் பெருமைக்குரிய அடையாளம்!
கம்பீரமான பார்வையும், மேலெழுந்த திமிலுடன் சிலிர்த்து நிற்கும் காங்கேயம் காளைகள் சாதாரணமாக 4000-5000 கிலோ வண்டி பாரத்தை இழுக்கும் திறன் கொண்டவை! இவை கொங்கு மண்டலத்தின் கோவை, கரூர்,திண்டுக்கல், நாமக்கல்,சேலம், மாவட்டங்களிலும் அதிகம் வளர்க்கப்படுகிறது! 

ஊத்துக்குளி வெண்ணெய்!
 ஊத்துக்குளி பகுதியில் கிடைக்கும் வெண்ணெயில் கொழுப்பு மற்றும் பிற சத்துக்கள் அதிகம் என்பதால் இது திருப்பூர் மாவட்டத்தின் அடையாளமாக புகழ் பெற்றுள்ளது. இந்த வெண்ணெய் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் கேரளம் மற்றும் மஹாராஷ்டிரம் மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது!

தொழில் வளம்!
பின்னலாடை நிறுவனங்கள்!
 இந்தியாவின் பின்னலாடைத் துறையின் (பனியன் துணி உற்பத்தி, மற்றும் ஆடை தயாரித்தல்) அடையாளமாக திருப்பூர் மாநகரம் திகழ்கிறது. சர்வதேச அளவிலும் இத்துறையில் சிறப்பு பெற்று விளங்குகிறது. ஆண்டுக்கு 15000 கோடி ரூபாய் அளவிற்கு உள்நாட்டு வர்த்தகத்தையும், 25000 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி வர்த்தகத்தையும் கொண்டதாகவும், நாட்டின் பெருமைக்குரிய ஆடை வணிக மையமாகவும் மிளிர்கிறது திருப்பூர் மாவட்டம்!!
 இங்கு உள்ளாடைகள் மட்டுமே ஆண்டுக்கு 25ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தியாகின்றன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும்  பனியன் துணி ஆயத்த ஆடைகளில் 90% திருப்பூரில் உற்பத்தி செய்யப்படுபவையே! இதனால் நாட்டின் அந்நிய செலாவணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 
 திருப்பூர் மாநகரில் மட்டும் ஜாப் ஆர்டர்களை கையாளும் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை சுமார் 10,000 பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன! இதில் நேரடியாக 4லட்சம் தொழிலாளர்களும்  மறைமுகமாக 2லட்சம் தொழிலாளர்களும் பணி புரிகின்றனர்!
 மேலும் இதனைச் சார்ந்த உப தொழில்களான பொத்தான்கள், ஜிப்கள், நாடாக்கள் பேக்கிங் பொருட்கள் தயாரித்தல், பாலித்தீன் பைகள் தயாரித்தல் என பல தொழில்களும் இப்பகுதியில் வளர்ச்சியடைந்துள்ளன. 
 மேலும் இம்மாவட்டத்தில் பருத்தி பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் 35 க்கு மேல் இருக்கின்றன! பல்லடம் பகுதியில் விசைத்தறி மற்றும் பின்னலாடைத் தொழில் மையங்களும், பல வகையான ஜவுளி கூடங்கள் நிறைந்த தொழில் நுட்பப் பூங்காவும் உள்ளன. உடுமலைப்பேட்டை பகுதியிலும் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள், கைத்தறி துணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றைத் தவிர ஆயத்த ஆடைகள் (READY MADE) உற்பத்தி நிறுவனங்கள் பல உள்ளன!

காற்றாலை மின் உற்பத்தி!
 உடுமலைப்பேட்டை, பல்லடம், தாராபுரம் பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. 

மேலும் சில தொழில்கள்!
 காங்கேயம் பகுதியில் சுமார் 500 அரிசி ஆலைகளும், 500 தேங்காய்க் கொப்பரை ஆலைகளும்,  பல தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகளும், இயங்குகின்றன. மேலும் இப்பகுதியில் நகைகளில் பயன் படுத்தப்படும் "மூன் ஸ்டோன்'  என்னும் கற்கள் தயாரித்தல், நெய் தயாரித்தல் போன்ற தொழில்களும் குறிப்பிடத்  தக்கவை!
 இம்மாவட்டத்தில் உள்ள "சிப்காட்'...,"தாட்கோ' போன்ற தொழிற்பூங்காக்களும் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன. 
 இவற்றைத் தவிர உடுமலைப்பேட்டையில் காகித ஆலைகள் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலையும் இங்குள்ளன. அகில இநதிய காதி மற்றும் கிராமத் தொழில் நிறுவனம் மூலம் கைகளால் செய்யப்படும் காகிதம் மற்றும் சுத்தமான எண்ணெய்  தயாரிக்கும் தொழிலும் திருப்பூரில் நடைபெறுகிறது. 

சிற்பக்கூடம்!
 திருமுருகன்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள் உள்ளன. இங்கு கற்களைக் கொண்டு தெய்வ வடிவங்களையும், தூண்கள், மற்றும் கலைப்பொருட்களையும் செய்கின்றனர். 

பழமையான ஆலயங்கள்!
அவிநாசியப்பர் கோயில் 
 கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் முதல் ஆலயம்! தட்சிண வாரணாசி என்று புகழப்படும் இவ்வாலயம் பற்றி திருமந்திரம், திருப்புகழ், தேவாரம் போன்ற பக்தி இலக்கிய நூல்களில் தகவல் உள்ளது. 
 சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனைப் போற்றிப் பாடி முதலையின் வாயிலிருந்து  ஒரு சிறுவனை மீட்டுக் கொடுத்தது இங்குதான்!

திருமுருகநாத சுவாமி ஆலயம்! 
 புராண பெருமை மிக்க இந்த சிவன் கோயில் திருமுருகன்பூண்டியில் உள்ளது. முருகப்பெருமான் விரும்பி வந்து இறைவனை வழிபட்டதால் திருமுருகன் என்று ஊருக்கும், திருமுருகநாதர் என்று இறைவனுக்கும் பெயர் வந்தது. சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடல் பெற்ற தலம்!
 குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கு ஏற்ப திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம் பகுதிகளில் சிவன் மலை, கயிதமலை,  அழகுமலை, வட்டமலை, கொங்கணகிரி, உதயகிரி என குன்றுகளும், அவற்றின் மீது கட்டப்பட்ட மன்னர்கள் காலத்திய பழமையான முருகன் கோயில்களும் உள்ளன.

சுக்ரீஸ்வரர் ஆலயம்! 
 கொங்கு பகுதியின் நான்கு சிற்ப ஸ்தலங்களில் ஒன்றான இந்த ஆலயம் திருப்பூரின்  புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. இதனை கரூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த இரண்டாம் சடைய வர்ம சுந்தரபாண்டியன் (1276-1293) கட்டியுள்ளார்.

திருப்பூர் குமரன் நினைவு இல்லம்!
 இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய, "கொடி காத்த குமரன்' நினைவாக கட்டப்பட்ட இந்த நினைவு இல்லம் ரயில் நிலையம் அருகில் குமரன் சாலையில் உள்ளது!
 சென்னி மலையில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் குமரன் ஆங்கிலேய அரசை எதிர்த்து திருப்பூரில் நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டபோது மண்டை உடைந்து கீழே சரிந்தார். அப்பொழுதும் தன் கையில் தாங்கிய கொடியைத் தாங்கிப் பிடித்தபடியே இறந்ததால் கொடி காத்த குமரன் எனப் பெயர் பெற்றார். 

ஊத்துக்குளி கிணறு!
 ஊத்துக்கிளி அருகில் உள்ள கயிதமலை வெற்றி வேலாயுத சுவாமி கோயில் 16ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. 
 இந்தக் கோயிலைச் ஒட்டி ஊற்றுக் குழி என்ற கிணறும் இருந்துள்ளது. நீரூற்றுகள் நிறைந்த குழி எனப்பொருள் படும் ஊற்றுக்குழி என்ற பெயரே ஊரின் பெயராகவும் இருந்துள்ளது. இன்று அது ஊத்துக்குளி என்று மாறிவிட்டது. 
 இடைப்பட்ட காலத்தில் குப்பைகளால் தூர்ந்து போன இந்த இடத்தை மாணவ,மாணவிகள் ஒன்றிணைந்து தூர்வாரி, சுத்தப்படுத்திப் பொதுச்சேவை செய்தனர்! மீண்டும் நீரூற்றுகள் வெளிவந்து கிணறு புது எழிலுடன் திகழ்கிறது!
 இந்தக் கிணற்றின் பக்க சுவர்களில் மிருகங்களின் பலவிதத் தோற்றங்கள் மற்றும் விளையாட்டுகள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் கிணற்றின் மேல் விளிம்பில் இருந்து அடிப்பகுதிவரை படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இறைவனின் புனித நீராடல் கிணறாக இது  இருந்துள்ளது. நாயக்கர் காலத்திய நினைவுச் சின்னமாக இப்பொழுது உள்ளது.
 பின்னலாடைத் தொழிலால் இந்தியாவில் பெயர் பெற்ற திருப்பூர் மாவட்டம் தமிழகத்தின் பெருமைக்குரிய, தொழில் வளம் மிக்க மாவட்டங்களில் ஒன்றுதான்!
(நிறைவுற்றது)
தொகுப்பு: கே. பார்வதி, 
திருநெல்வேலி டவுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com