முத்திரை பதித்த முன்னோடிகள்! செவாங் நார்ஃபெல்

எத்தனையோ சாதனையாளர்களையும், சமூக சேவகர்களையும் கொண்டது நம் பாரத நாடு. அவர்கள் தம் சொந்த செலவில், மக்கள் பயன் பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை
முத்திரை பதித்த முன்னோடிகள்! செவாங் நார்ஃபெல்

எத்தனையோ சாதனையாளர்களையும், சமூக சேவகர்களையும் கொண்டது நம் பாரத நாடு. அவர்கள் தம் சொந்த செலவில், மக்கள் பயன் பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மனதில் கொண்டு சேவை புரிந்துள்ளனர். அத்தகைய பலரின் சாதனைகள் சில நேரங்களில் வெளி உலகத்திற்குத் தெரியாமலே போய்விடுகின்றன.  காரணம், அவர்கள் தம்மைப் பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை!

அத்தகைய முன்னோடிகளுள் ஒருவர்தான் திரு.செவாங் நார்ஃபெல் (CHEWANG NORPHEL)ஆவார். இவர் லடாக்கில் வசித்து வருகிறார். லடாக்கின் அழகு நிறைந்த மலைகள் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகக் கருதப்படுகின்றன.

ஆனால் அங்கு வசிக்கும் உள்ளூர் மக்களுக்கோ அங்கு நிலவி வரும் தண்ணீர்த் தட்டுப்பாடு மிகப் பெரிய சவாலாக உள்ளது. 

செவாங் நார்ஃபெல் இப்பகுதியின் தண்ணீர்த் தட்டுப்பாடு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றைக் கண்டறிந்துள்ளார்.  செவாங் ஒரு கட்டுமானப் பொறியாளர் ஆவார். இவர் 1966-ஆம் ஆண்டு லடாக்கில் உள்ள "ஜன்ஸ்கார்'  என்ற இடத்தில் மண்டல அலுவலராக அரசுப் பணியில் சேர்ந்தார். அப்பகுதியில் பள்ளிகள், பாலங்கள், கால்வாய்கள் மற்றும் சாலைகளை அமைப்பது இவரது பணியாக இருந்தது. மிகச் சில பணியாளர்கள் மட்டுமே இவருடன் தங்கியிருந்தனர். 

இதனால் இவரது வேலைகள் மந்த கதியில் நடைபெற்றன. மேலும் அரசின் செலவினங்களும் அதிகரித்துக் கொண்டே போயின. இதைத் தவிர்க்க விரும்பிய அவர் உள்ளூரில் இருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்துத் தமது பணிகளை விரைவில் முடித்துக் கொள்ள விரும்பினார். 

எனவே தனது உயரதிகாரிகளிடம் தமது திட்டத்தை விளக்கிக் கூறி நிதி உதவி கோரினார். "ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே லடாக் பகுதியில் சாலைகள் அமைப்பதும், கட்டடம் கட்டுவதும் இயலாத காரியம் என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது.  ஆகவே இத்திட்டத்திற்கு இனி அரசின் நிதி உதவி கிடைக்காது என்று கூறி மறுத்து விட்டனர் அதிகாரிகள்!

திட்டத்தைப் பாதியில் நிறுத்த விரும்பாத செவாங், தனது சொந்தப் பணத்தைக் கொண்டு உள்ளூர் இளைஞர்கள் சிலருக்குக் கட்டுமானப் பணிகளில் பயற்சி அளித்தார். இதன் காரணமாக 1970ஆம் ஆண்டு தொடங்குவதற்குள் லடாக்கில் சாலை வசதி, பள்ளிக்கூடம், கால்வாய்கள், தடுப்பணைகள் போன்றவை உருவாகின. லடாக்கின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பாலங்களும், கால்வாய்களும், நீர்ப்பாசன வசதித் திட்டங்களும் இவரால் கட்டி முடிக்கப்பட்டவையே ஆகும்! 

1936-ஆம் ஆண்டு பிறந்த செவாங் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். 36 ஆண்டுகளுக்கு மேலாக அரசுப் பொறியாளராகப் பணிபுரிந்த இவர் தமது உடல் நிலை காரணமாக அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். லடாக்கின் தண்ணீர்த் தட்டுப்பாடு மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது.

லடாக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுங்குளிர் நிலவிய போதும் குடிதண்ணீர் இல்லாத குளிர்ந்த பாலைவனம் போல் அவை விளங்கின.

ஆண்டுக்கு 50 மி.மீ மழைப்பொழிவு  மட்டுமே அங்கு நிலவியது. மலைப்பகுதியில் உருவாகும் பனிக்கட்டிகள் உருகுவதால் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டே அவர்களது தண்ணீர்த் தேவைகள் நிறைவேறின. புவி வெப்பமயமாதல் காரணமாக மலைப்பகுதியில் இருந்த பெரும்பாலான பனிப்பாறைகள்  உருகிக் கடலில் கலந்து விட்டன. மீண்டும் பனிப்பாளங்கள் உருவாவதும் தாமதமாகிக் கொண்டே போனது. 

இந்நிலையில்தான் ஒருநாள் செவாங் தனது தோட்டத்தின் குழாயில் இருந்து சொட்டிக்கொண்டே இருந்த தண்ணீர் இரவில் கடுங்குளிர் காரணமாக பனிக்கட்டியாக மாறி ஒரு பலகைபோல் தரையில் கிடப்பதைக் கண்டார். அதை உடைத்து ஒரு வாளியில் போட்ட சிறிது நேரத்திற்கெல்லாம்  அது உருகி ஒரு  வாளி நிறையத் தண்ணீர் அவருக்குக் கிடைத்தது. அந்த நீரை வீணாக்காமல் பாத்திரம் கழுவப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தன் மனைவியிடம் கூறினார்.  

அவருக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது! 
கிராமத்தின் தண்ணீர் தேவையைச் சமாளிக்க இது போன்ற பனிப்பாளங்களை செயற்கையாக உருவாக்கினால் என்ன என்று சிந்தித்தார். செயற்கைப் பனிப்பாளங்கள் இயற்கையாக உருவாகும் பனிப்பாளங்களை விட  வெகு விரைவில் உருகின. மேலும் முகடுகளில் உருவாகும் பனிப்பாளங்கள் ஜூன் மாதத்தில் இருந்துதான் உருகத் தொடங்குகின்றன.  ஆனால் ஏப்ரல், மே மாதங்களில் விவசாயம் செய்யத் தண்ணீர் தேவைப்பட்டது.  இவை அனைத்தையும் மனதில் கொண்டு தமது சிந்தனையை செயல்வடிவமாக்க முயற்சித்தார். 

"புட்ஸே' கிராமத்தின் நான்கு கி.மீ தொலைவில் "இண்டஸ்' நதியின் சிறிய கிளைநதி ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. ஆற்று நீர் ஏன் பனிக்கட்டியாக மாறவில்லை?  என்ற கேள்வி அவருள் எழுந்தது. காரணம் மலைப்பகுதியாக இருந்தபடியால் ஆற்று நீர்  மிகுந்த வேகத்துடன் ஓடிக்கொண்டு இருந்தது. இதனால் பனிப்பாளங்கள் உருவாகவில்லை. ஆற்று நீரின் வேகத்தைக் குறைத்துத் தேக்கி வைப்பதன் மூலம் பனிப்பாளங்கள் உருவாகும் என்பதைக் கண்டறிந்தார். 

தமது பொறியியல் அறிவின் மூலம் ஆற்றின் ஒரு பகுதியில் இருந்து சிறிய கால்வாய் ஒன்றை வெட்டி நீரை கிராமத்தின் அருகே ஓரிடத்தில் தேக்கி வைத்தார். கால்வாய்களின் குறுக்கே சிறிய தடுப்புச் சுவர் ஒன்றைக் கட்டினார். இதனால் அச்சுவற்றை ஒட்டிய பகுதிகளில் எளிதாகவும் விரைவாகவும் தண்ணீர் பனிக்கட்டியாக மாறியது. 

இவர் முதன் முதலில் உருவாக்கிய பனிப்பாளம் "உமீலா' என்ற இடத்தில் 500அடி நீளம் இருந்தது. இது உருகியதால் கிடைத்த தண்ணீர் அப்பகுதி முழுவதற்கும் போதுமானதாக இருந்தது. இதுவரை இவர் 12 செயற்கைப் பனிப்பாளங்களை உருவாக்கியுள்ளார். 

இதன் காரணமாக விவசாயத் தொழில் புரிவோரின் எண்ணிக்கை பெருகி உணவு உற்பத்தியும் பெருகியுள்ளது. 

தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்தபோது  லடாக்கில் வாழ்ந்த பல்வேறு பழங்குடி இன மக்கள் பிழைப்பு தேடி பெரு நகரங்களுக்கு புலம் பெயர்ந்தனர்....இவரது சீரிய முயற்சியால் அவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் மீண்டும் தமது கிராமத்திற்கே வந்து தமது பரம்பரைத் தொழிலைத் தொடர ஆரம்பித்தனர். 
 
மேலும் சில அருமையான தகவல்கள்!
 1.   இவரது தொண்டினால் இவர்  "ஐஸ் மேன் ஆஃப் லடாக்'  (ICE MAN OF LADAKH) என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். 
2.   லடாக்கின் சுற்றுப்புறப் பகுதிகளாகிய "லஹோல்' ...., "ஸ்பிட்டி' போன்ற பகுதிகளிலும் தற்போது தமது முயற்சியைச் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறார். 
3.   இதுவரை யாருமே இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு வெற்றியடைந்ததில்லை. எனவே பன்னாட்டு நிறுவனங்கள் இவரது முயற்சிக்கு நிதி உதவி செய்ய முன் வந்துள்ளன. 
4.   1996-ஆம் ஆண்டு இவர் "லே சத்துணவுத் திட்டம்'  (LEH NUTRITION PROJECT)  என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்துடன் தம்மை இணைத்துக் கொண்டு சேவை புரிந்து வருகிறார். 
5.   2012-ஆம் ஆண்டிற்குள் இவரால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பனிப் பாளங்களின் (ARTIFICIAL GLACIERS) எண்ணிக்கும் 12 ஆகும். இதன் மூலம் லடாக்கின் 80%  மக்கள் குடிநீர் வசதி பெற்றுள்ளனர்.
6.   "புட்ஸே' கிராமத்தில் இவர் உருவாக்கிய பனிப்பாளம் மிகவும் பெரியதாகும். அது 1000 அடி நீளமும், 150 அடி அகலமும், 4 அடி ஆழமும் கொண்டிருந்தது. அதை உருவாக்க ஆன செலவு 90,000  ரூபாய் மட்டுமே!
7.   "ஆர்த்தி ஸ்ரீவத்ஸவா' என்ற குறும்பட இயக்குனர் இவரைப் பற்றி "ஒயிட் நைட்' என்ற பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். அது இந்தியா மட்டுமின்றிப் பல வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 
8.   இச்சாதனையாளருக்கு 2010- ஆம் ஆண்டு "ஜமன்லால் பஜாஜ்' விருது வழங்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு இந்திய அரசு "பத்மஸ்ரீட விருது வழங்கி கெளரவித்தது!
என்.லக்ஷ்மி பால சுப்ரமணியன், கடுவெளி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com