முத்துக் கதை: உபதேசம்!

தலை சிறந்த ஞான குரு ஒருவர் இருந்தார். ஒரு கிராமத்தில் அவருடைய சொற்பொழிவிற்கு ஏற்பாடாகி இருந்தது.
முத்துக் கதை: உபதேசம்!

தலை சிறந்த ஞான குரு ஒருவர் இருந்தார். ஒரு கிராமத்தில் அவருடைய சொற்பொழிவிற்கு ஏற்பாடாகி இருந்தது. பெருங்கூட்டம் வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஞானி சொற்பொழிவு தினத்தன்று ஊர் வந்து சேர்ந்தார். அவரை சொற்பொழிவு நடக்கும் இடத்திற்கு அழைத்து வர ஒரு குதிரை வண்டிக்காரர் போயிருந்தார்.  

திடீரென்று மேகங்கள் திரண்டு பெரிய மழை வர ஆரம்பித்து விட்டது. கூட்டம் கலைந்துவிட்டது. வந்து பார்த்த ஞானிக்கு பெருத்த ஏமாற்றம்! அதிகம் பேருக்கு சொற்பொழிவு ஆற்ற வந்த அவருக்கு எஞ்சி நின்றது குதிரை வண்டிக்காரன் மட்டுமே! அவர் குதிரை வண்டிக்காரனைப் பார்த்து, "என்னப்பா என்ன செய்யலாம்?'' என்று கேட்டார். 

அதற்குக் குதிரை வண்டிக்காரர், "எனக்கு ஒண்ணும் தெரியலையே சாமி!....,ஆனா நான் முப்பது குதிரைகளை வளர்க்கிறேன்!.....அதுகளுக்கு புல்லு வைக்கப் போவேன்!..... சில சமயம் குதிரைகள் வெளியே போயிடும். ஒரு குதிரை மட்டும் இருக்கும்...., அதுக்காக?.... ஒண்ணே ஒண்ணுதான் இருக்குன்னு நான் புல்லு வைக்காம இருக்க முடியுமா?....., திரும்பி வரும் குதிரைகளுக்குப் பசிக்காதா?....

அதுகளைக் காப்பாத்தறது நம்ம கடமையாச்சே! அதனால எல்லாக் கூடைகளிலேயும் புல்லை வெச்சுடுவேன்'' என்றான்!

முனிவருக்குப் புத்தியில் ஏதோ உறைத்தது போல் இருந்தது!  மேடை மீது ஏறினார். தொண்டையைச் செறுமிக் கொண்டு குதிரைக்காரனுக்கு மட்டும் உபதேசம் செய்யலானார்.  

மழைக்காக வீடுகளில் தங்கியவர்கள் ஒருவர் பின் ஒருவராக வரலாயினர்! சொற்பொழிவு சிறப்பாக அமைந்துவிட்டது.  பலத்த கரகோஷம்!  வெற்றிகரமாக முடிந்தது அந்தக் கூட்டம்! ஞானி குதிரை வண்டிக்காரனை மேடைக்கு அழைத்து , "இந்தச் சொற்பொழிவின் வெற்றி இந்தக் குதிரை வண்டிக்காரரால்தான்  நிகழ்ந்தது!'' என்று கூறி நடந்ததை விவரித்தார். மறுபடியும் கூட்டத்தில் பலத்த கரகோஷம்!

"மழையாவது ஒண்ணாவது!.....இத்தகைய அருமையான ஞான உபதேசத்தை யாராவது தவறவிடுவார்களா!''....."நம் நல்ல காலம் இங்கு இருக்க நேர்ந்தது!அருமையான உபதேசம்!''  என்று ஒருவர்க்கு ஒருவர் பேசிக்கொள்ளும் சப்தம் அங்கு கேட்டுக் கொண்டிருந்தது!

ஞானியின் பெருந்தன்மை குதிரை வண்டிக்காரரை நெகிழச் செய்தது!  ஒன்றுமே செய்யாதது போல் தன் கடமையைச் செவ்வனே செய்யும் குதிரை வண்டிக்காரர் ஞானியின் மனதை நெகிழச் செய்தார்!
-மயிலை மாதவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com