நல்ல உள்ளம்!

பாலூர் கிராமத்தில் செல்வம் என்ற நேர்மையான பணக்காரருக்கு ராமு சோமு என்ற இரண்டு மகன்கள் இருந்தார்கள்.
நல்ல உள்ளம்!

அரங்கம்

காட்சி - 1
இடம் - பாலூர் கிராமத்தில் செல்வத்தின் வீடு
மாந்தர் - தந்தை செல்வம். 
மகன்கள் ராமு, சோமு

(பாலூர் கிராமத்தில் செல்வம் என்ற நேர்மையான பணக்காரருக்கு ராமு சோமு என்ற இரண்டு மகன்கள் இருந்தார்கள். இதில் ராமு பேராசைக்காரன் சோம்பேறி. சோமு தந்தையைப் போன்றே நேர்மையான நல்லவன். வயதான காரணத்தினால் செல்வம் தன் இரண்டு மகன்களையும் அழைத்துப் பேசினார்)

செல்வம்: ராமு. எனக்கு வயசாகிகிட்டே போகுது. உடல்நலமும் சரியில்லை. எனக்கொரு ஆசை இருக்கு. அதை நீதான் நிறைவேத்தி வைக்கணும்.
ராமு : சொல்லுங்கப்பா. உங்க ஆசையை நான் நிறைவேத்தி வைக்கிறேன்.
செல்வம் : உன்னுடைய தம்பி சோமு ரொம்ப நல்லவன். சூதுவாது தெரியாதவன். அதனாலே நான் உங்களுக்காக சேர்த்து வெச்சிருக்கிற சொத்தில் தம்பிக்கு கொஞ்சம் அதிகமான சொத்துக்களைச் கொடு.
ராமு : அதுக்கென்னப்பா. நீங்க சொல்ற 
மாதிரியே தம்பி சோமுவுக்கு நிறைய 
சொத்துக்களைத் தர்றேன்.

(இதைக் கேட்ட செல்வம் மகிழ்ச்சி அடைந்தார். சிறிது காலத்திலேயே உடல்நலம் குன்றி இறந்து போனார்)

காட்சி - 2
இடம் - செல்வத்தின் வீடு
மாந்தர் - ராமு மற்றும் சோமு

(ஒருநாள் பேராசைக்கார ராமு யோசித்தான். பின்னர் தன் தம்பியை அழைத்தான்.)

ராமு : டேய். சோமு. அப்பா கொஞ்ச நாளைக்கு முன்னாலே என்னைக் கூப்பிட்டு உன் தம்பி சோமு ரொம்ப நல்லவன். சூதுவாது தெரியாதவன் அதனாலே இருக்கிற சொத்துலே உனக்கு அதிகமாக குடுக்கச் சொன்னாரு.
சோமு : இல்லேண்ணா. அப்படியெல்லாம் எனக்கு எதுவும் வேணாம். உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கிட்டு மீதியை எனக்குக் குடுங்க. பரவாயில்லை. எனக்கு வாழத் தேவையான அளவுக்கு சொத்து இருந்தாப் போதும்.
ராமு : அதெல்லாம் முடியாது சோமு. அப்பா சொல்லிட்டாரு. நான் அவர் சொல்படிதான் நடப்பேன். அப்பாவுக்கு பத்து ஏக்கர் நிலம் ஒரு இடத்திலேயும் இரண்டு ஏக்கர் நிலம் வேறொரு இடத்திலேயும் இருக்கு. அந்த பத்து ஏக்கர் நிலத்தை நீ எடுத்துக்கோ. ரெண்டே ரெண்டு ஏக்கர் நிலம் எனக்குப் போதும். நீ என்ன சொல்றே ?
சோமு : நீங்க என்னோட அண்ணன். எனக்கு நல்லதுதானே நினைப்பீங்க. 

(இதைக் கேட்ட ராமு மனதுள் சிரித்துக் கொண்டான். அப்பா சொன்னது சரிதான். இவன் முட்டாள் தம்பி அப்படின்றதை நிரூபிச்சிட்டான். செழிப்பான இரண்டு ஏக்கர் நிலத்தை நான் எடுத்துகிட்டு வீணாக இருக்கும் பத்து ஏக்கர் கரம்பு நிலத்தைக் குடுத்தா சந்தோஷமா சரின்னு சொல்றான். சரியான முட்டாள் தம்பி)

ராமு : அப்புறம் நம்மகிட்டே ஆறு பசுமாடுகளும் பத்து காளை மாடுகளும் இருக்கு. பசுமாடுகளை நான் எடுத்துக்கிறேன். அப்பா சொன்னபடி ஆறே ஆறு பசுமாடுகளை நான் எடுத்துகிட்டு உனக்கு பத்து காளைமாடுகளைத் தர்றேன். சரியா
சோமு : சரியண்ணே.
ராமு : நம்ம ஊருக்குள்ளே ஒரு பெரிய ஓட்டு வீடு இருக்கில்லையா ? அந்த பெரிய ஓட்டு வீட்டை உனக்கு எழுதித் தர்றேன். மெயின் ரோட்டிலே இருக்கிற சின்ன மாடி வீட்டை நான் எடுத்துக்கறேன்.
சோமு : நீங்க எது செய்தாலும் என் நல்லதுக்காகத்தான் இருக்கும் அண்ணே. எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

(...ஒன்றுக்கும் உதவாத நிலம் காளை மாடு மற்றும் பழைய ஓட்டு வீடுகளை தம்பிக்கு கொடுத்தாயிற்று. நல்ல சொத்துக்கள் தனக்கு வந்து விட்டது என்று நினைத்து ராமு மகிழ்ச்சி அடைந்தான். ராமுவின் மனைவி ராசாத்தியும் இதற்கு உடந்தை)

காட்சி - 3
இடம் - ராமு, சோமுவின் வீடுகள் மற்றும் 
வயல்வெளி
மாந்தர் - ராமு மற்றும் குத்தகைக்காரர், 
சோமு அவன் மனைவி விஜயா

ராமு : என்னுடைய ரெண்டு ஏக்கர் விளைச்சல் நிலத்தை உனக்கு குத்தகைக்குத் தர்றேன். அதுலே விவசாயம் செய்து எனக்கு ஒவ்வொரு போகத்துக்கும் தொகையைக் குடுத்துடணும்.
குத்தகைக்காரர்: சரிங்க. அப்படியே செய்துடறேன்.

(ராமு நிலத்தை குத்தகைக்கு விட்டான். பசுமாட்டிலிருந்து பாலைக்கறந்து தினமும் விற்று கிடைத்த பணத்தை சேமித்து வைக்காமல் ஆடம்பரமாய் செலவழித்தான். மேலும் குடிப்பழக்கமும் சேர்ந்து கொண்டது.)

சோமு: விஜயா. இந்த பழைய ஓட்டு வீட்டை நாம ரெண்டு பேரும் சேர்ந்து சரிசெய்துடலாம். நிலத்தையும் சரி செய்தா நல்லா விவசாயம் பண்ணலாம்.
விஜயா: சரிங்க அப்படியே செய்துடலாம்.

(சோமுவும் விஜயாவும் சேர்ந்து வீட்டை சரி செய்தார்கள். தங்களிடமிருந்து காளை மாடுகளைக் கொண்டு நிலத்தை நன்றாக உழுது பண்படுத்தினார்கள். அவர்களின் உழைப்பைக் கண்டு மகிழ்ந்த வானமும் நன்றாக மழையைப் பொழிந்து அவர்களுக்கு உதவியது. சோமுவும் அவன் மனைவி விஜயாவும் கடுமையாக உழைத்தார்கள். அதற்க தகுந்த பலன் கிடைத்தது. விவசாயம் செய்து சிக்கனமாக வாழ்ந்து மீதமிருந்த பணத்தை அந்த ஊர் கூட்டுறவு வங்கியில் சேமித்து வைத்தார்கள்)

காட்சி - 4
இடம் - ஊர் பொது இடம்
மாந்தர் - ராமு, சோமு மற்றும் விஜயா, ராசாத்தி


(ராமு எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆடம்பரமாக வாழ்ந்தான். ஒருநாள் அந்த ஊர் பிரதான பாதையை விரிவு படுத்த வேண்டி ராமுவின் வீட்டை அரசு எடுத்துக் கொண்டு அதற்கான இழப்பீட்டுப் பணத்தை காசோலையாக ராமுவிற்கு வழங்கியது. ராமு பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக் கொண்டு வந்தபோது அதை சிலர் சாதுர்யமாக திருடிவிட்டார்கள். மேலும் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக வெள்ளம் வந்தது. அவ்வூரிலிருந்த நிலமெல்லாம் வெள்ளத்தில் மூழ்கியது. ராமுவின் பசுமாடுகளும் வெள்ளத்தில் அடித்துச் சென்றன. ராமுவும் அவன் மனைவியும் இப்போது வீட்டை இழந்து பணத்தையும் இழந்து ஒருவேளை சாப்பாட்டிற்கே தவித்தான். சோமு தன் மனைவியோடு அண்ணனைச் சந்தித்தான்.)

சோமு : அண்ணே. நீங்க எல்லாத்தையும் இழந்துட்டீங்கன்னு கேள்விப்பட்டேன். நீங்களும் அண்ணியும் கவலைப்படாதீங்க. உங்களுக்கு நாங்க இருக்கோம். நீங்க எந்த கஷ்டமும் இல்லாம வாழலாம். நம்ம வீட்டிலே நிறைய இடம் இருக்கு. நீங்க அங்கே வந்து இருங்க. நாங்க கஷ்டப்பட்டு உழைச்சி கொஞ்சம் பணத்தை சேமிச்சி வெச்சிருக்கோம். அதை வெச்சி சாப்பிடலாம். வெள்ளமெல்லாம் சரியான பின்னாலே நாம மறுபடியும் உழைச்சி விவசாயம் செய்து பணத்தை சம்பாதிச்சிக்கலாம்.

(தம்பி சோமுவின் நல்ல உள்ளம் ராமுவிற்கு இப்போதுதான் புரிந்தது. தன் அப்பா சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்று உணர்ந்தான். ஏமாற்றிய தன்னை மன்னித்து ஏற்றுக் கொண்டு தனக்கு உதவவும் தயாராக உள்ளான். சோமு உண்மையிலேயே நல்லவன்தான்.

ராமு : தம்பி. என்னை நீ மன்னிச்சிடு. நான் உன்னை திட்டம் போட்டு ஏமாற்றினேன். ஆனால் அதைப் பற்றி நீ கவலைப்படாம உழைச்சி நல்ல நிலைமைக்கு வந்திருக்கே. உன்னை ஏமாற்றிய நானோ மோசமான நிலைக்குப் போயிட்னேடன். என்னை மன்னிச்சிடுப்பா!...
சோமு: அண்ணே. அப்படியெல்லாம் பேசாதீங்க. உண்மையான செல்வம் எது தெரியுமா ? நேர்மையும் உழைப்பும் தான். இது இரண்டும் உள்ளவங்களுக்கு வாழ்க்கையிலே ஒரு குறைவும் வராது. நான் இருக்கிற வரை உங்களுக்கு ஒரு குறையும் இல்லே. கவலைப்படாதீங்க.

(தம்பியின் ஆறுதலான வார்த்தைகள் மனதிற்கு இதமாக இருந்தது. இனி எந்த சூழ்நிலையிலேயும் யாரையும் ஏமாற்றக் கூடாது என்று முடிவு செய்தான் ராமு)

(திரை)
ஆர்.வி. பதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com