தகவல்கள் 3

"ஹென்றி வாட் பீச்சர் என்ற பாதிரியார் ஒரு முறை தன் நண்பர் வீட்டிற்குச் சென்றார். அப்போது நண்பரின் குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
தகவல்கள் 3

சகோதரன் ஆயிற்றே!
"ஹென்றி வாட் பீச்சர் என்ற பாதிரியார் ஒரு முறை தன் நண்பர் வீட்டிற்குச் சென்றார். அப்போது நண்பரின் குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பாதிரியார் குழந்தைகளிடம், "எதிரியை மன்னிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?'' என்றார். 
அதற்கு மூத்தவன், "சரிதான்!, எதிரி என்றால் மன்னிக்க வேண்டும்! ஆனால் அவன் என் சகோதரன் ஆயிற்றே!'' எனறானே பார்க்கலாம்!
லினா, சென்னை-600032.
மகிழ்ச்சி! 
பிரபல கல்விமான் மேத்யூ ஹென்றியின் வீட்டில் ஒரு திருடன் புகுந்து அவர் வைத்திருந்த கைப்பையைத் திருடிச் சென்று விட்டான். இதையறிந்த ஹென்றி சற்று நேரம் சிந்தித்துவிட்டு நாட்குறிப்பு புத்தகத்தை எடுத்து கீழ்க்கண்டவாறு எழுதினார். 
"பணம் களவு போய்விட்டது. ஆயினும் பல விஷயங்களை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன் எவரும் என்னிடம் திருடவில்லை என்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இரண்டாவதாக, வந்த திருடன் பணத்தைத்தான் எடுத்துச் சென்றானே தவிர, என்னுடைய உயிரை எடுத்துச் செல்லவில்லை என்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். மூன்றாவதாக பணம் பூராவையும் அவன் எடுத்துச் சென்று விட்டாலும், வீட்டிலுள்ள ஏனைய பொருட்கள் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக அவன்தான் என்னிடமிருந்து திருடிக் கொண்டு போனானே தவிர நான் யாரிடமும் திருடவில்லை என்பதற்காக பெருமகிழ்ச்சியடைகிறேன்.''
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி. 
கண்டிப்பானவர்!
உலகப் புகழ் பெற்ற "போர்டு' கார் தயாரிப்பாளரான ஹென்றி போர்ட் இங்கிலாந்து சென்றிருந்தார். அங்கே அவர் "ரோல்ஸ் ராய்ஸ்' காரைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அதைக் கண்டு பிரிட்டிஷ்காரர்கள் வியந்தார்கள். பிரிட்டிஷ் அரசர் போர்டிடம், "நீங்கள் உங்கள் தயாரிப்பான "போர்டு' காரில் செல்லாமல் ரோல்ஸ் ராய்ஸ் காரில் செல்கிறீர்களே,...காரணம் என்ன?'' என்று கேட்டார். 
அதற்கு போர்டு, "என் சொந்த உபயோகத்திற்காக எனக்கு ஒரு கார் வேண்டுமென்று மேனேஜரிடம் சொல்லியிருந்தேன். ஆனால் ஒவ்வொரு கார் தயாராகி வெளியே வருவதற்கு முன்னாலேயே விற்பனையாகிவிடுகிறது. என் மேனேஜர் மிகவும் கண்டிப்பானவர்! வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய பிறகுதான் மற்றவர்களுக்குத் தருவார்!'' என்றார். 
கண்ணகி செயவேலன், அரக்கோணம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com