தீர்ப்பு வந்தது!

அண்ணன் தம்பிகள் ஒரு நால்வர்ஆர்வம் உழைத்து வாழவதற்கு
தீர்ப்பு வந்தது!

அண்ணன் தம்பிகள் ஒரு நால்வர்
ஆர்வம் உழைத்து வாழவதற்கு
ஒன்றாய் ஒரு தொழில் செய்வதற்கு
உள்ளம் விரும்பி யோசித்தார்!

பஞ்சுப் பொதிகள் பல வாங்கி
பார்க்கத் தகுந்த ஓரிடத்தில்
நால்வரும் வைத்தார் விற்பனைக்கு - வணிகம் 
நன்றாய் வளர்ந்து ஓங்கியது!

ஒரு நாள் இளையவன் பார்வையிலே
ஓர் எலி அங்கே ஓடியது!
சிறிதே உருவம் என்றாலும்
சிதைத்து விடுமே பஞ்சையெல்லாம்!

செய்தியை மற்ற மூவர்க்கும்
சேர்த்தான் உடனே சிந்தித்து -அதைச் 
செயலாய் ஆக்க அவர் முனைந்தார்!
சென்றான் தம்பி.....ஒரு பூனை 

கண்டான்,...அதனைக் கொண்டு வந்தான்!
"கட்டுப் படுத்தும் எலிகளையே - நல்ல
காவல் இதுதான் பொதிகளுக்கு
கவலை இனிமேல் நமக்கில்லை!

பஞ்சுப் பொதியின் கூடத்தில் - பூனை 
பகலும் இரவும் விழித்திருக்கும்!
அஞ்சி ஓடும் எலியெல்லாம்...
அன்பாய்ப் பூனையை வளர்த்திடுவோம்!

பூனையின் ஒவ்வொரு காலுக்கும்
பொறுப்பு ஏற்றார் தனித்தனியாய்!
இளையவன் பொறுப்பு...கால் ஒன்று - அவன் 
இணைத்தான் அதிலே பூண் ஒன்று!

எலியைத் துரத்திய நேரத்தில்
எதிரே இருந்த தூண் மீது 
மோதி விழுந்தது அப்பூனை - காயம்...
பூனை அணிந்த காலினிலே!

காயம் ஆற்றிட இளையவனும்
கனிவாய் எண்ணெய் தடவியபின் 
காலில் சிறுதுணி கட்டி வைத்தான்!
பாலைத் தட்டில் பசிக்கு வைத்தான்!

இருளை விரட்ட எரிந்தது விளக்கு - ஓடிய
எலியைப் பிடிக்கத் துடித்தது பூனை!
எரியும் விளக்கின் அருகே ஓட - கால்
எண்ணெய்த் துணியில் பிடித்தது தீயும்!

அச்சம் கொண்டு பாய்ந்தது பூனை
அங்கும் இங்கும் தீயின் கொழுந்து!
மிச்சம் இன்றிப் பஞ்சுப் பொதிகள் - சாம்பல்
மேடாய் ஆயின... பெரிய இழப்பு!

மரியாதை ராமன் நீதிபதி!....மூத்தோர்
மூவரும் சென்று முறையிட்டார்! - "துணியை
இளையவன் காலில் கட்டியதால் - தீ
எரித்தது பஞ்சுப் பொதியெல்லாம்!

தவற்றுக்குக் காரணம் அவனேதான்
தம்பி என்றாலும் தயை வேண்டாம்!
அவனுக்குத் தண்டனை அளித்திடுவீர்
அவனிடம் பணத்தைப் பெற்றிடுவீர்!'

"அவனுக்குரிய கால் ஒன்று - காயத்தால் 
அதனால் ஓட முடியாது!
தவற்றுக்குக் காரணம் பிற மூன்று! - அதனால்
தம்பிக்குத் தருவீர் இழப்பீடு!'

தீர்ப்பைக் கேட்ட மூவருமே - நெஞ்சம் 
திகைத்தே போனார்....இப்படித்தான் - ராமனின் 
தீர்ப்பு இருக்கும் ...எதிர்பாரா
திருப்பத்துடனே நீதி வரும்!
- பூதலூர் முத்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com