பால் பாயசம்!

வா! அமுதா! (கழுவிய முகத்தைத் துடைத்துக் கொண்டே) உனக்கு ரொம்ப நன்றி சொல்லணும்... நேத்து நான் பேச்சுப் போட்டியிலே முதல் பரிசு வாங்கினேன்! (அம்மாவிடம்) அம்மா! அதைக் காமிம்மா!

அரங்கம்
காட்சி - 1
இடம் - அமுதா வீடு
மாந்தர் - அமுதா, நளினி.

நளினி: அமுதா, இன்னிக்கு உங்க வீட்டுச் சர்க்கரைப் பொங்கலும், தேங்காய்ச் சாதமும் ஏ ஒன்! இந்த மொட்டை மாடியிலே அதுவும் பெüர்ணமி வெளிச்சத்திலே சாப்பிடறதே தனி மகிழ்ச்சிதான்! அமுதா! அடுத்த நிலாச் சாப்பாடு எங்க வீட்டு மொட்டை மாடியிலே! சரிதானா?
அமுதா: ஓ!....நான் இப்பவே தயார்!.....நளினி, அதோ அங்கே பாரேன்! முழு நிலாவுக்குக் கீழே அந்த மேகக் கூட்டம்!....காத்து பட்டு மெதுவா அசையற அழகைப் பாரேன்!
நளினி: ( கண்களில் நீர் ததும்ப...)
அமுதா: நளினி!....என்ன இது? திடீர்னு உன் கண்ணுலே தண்ணீர் வரது? என்ன ஆச்சு?
நளினி: நான் போட்டியிலே ....போட்டியிலே தோத்துப் போயிட்டேன் அமுதா!
அமுதா: போட்டியா? 
நளினி: ஆமாம்! ஆண்டு விழாவுக்காக எங்க பள்ளியிலே நிறைய போட்டி நடத்தினாங்க..... கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஓவியப் போட்டி எல்லாம் வெச்சாங்க! இன்னிக்கு ஓவியப் போட்டியிலே ஜெயிச்ச பொண்ணுக்கு ஓரு பெரிய படத்தைப் பரிசா கொடுத்தாங்க..... இதே மாதிரிதான் நிலாவும், மேகமும், பறவைகளும் போட்ட படம்! அந்த அழகான பரிசு எனக்குக் கிடைக்காம போயிடுச்சேன்னு வருத்தமா இருக்கு! 
அமுதா: இதுக்குப் போயா இப்படி வருத்தப்படறே?
நளினி: ஒவ்வொரு வருஷமும் நானும் விடாம பல போட்டிகள்ளே கலந்துகிட்டு வரேன்! ஆனால் இது வரைக்கும் ஒரு பரிசுகூட வாங்கததை நினைக்கறப்போ எனக்கே வெட்கமாயிருக்கு.....நீ கூட உங்க பள்ளிக் கூடத்திலே எவ்வளவு பரிசு வாங்கியிருக்கே
அமுதா: தோல்வியைக் கண்டு வருந்தக் கூடாது. துவளவும் கூடாது. அப்பதான் ரொம்ப உற்சாகமா இருக்கணும். அதை எதிர் கொள்ளணும். சமாளிக்கணும். தோல்விங்கறது ஒரு சவால்! அதை ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்கிட்டு நம் திறமையை மேலும் வளர்த்துக்கணும்! பரிசு வாங்கிட்டாலோ, போட்டியிலே ஜெயிச்சுட்டாலோ அதுனால கர்வமும் பட வேண்டியதில்லே! இப்படித்தான் எங்க அப்பா அடிக்கடி சொல்லிக்குடுத்திருக்காரு!
நளினி: அடுத்த வாரம் கூட நேதாஜி நலவாழ்வு மன்றத்துலே ஒரு பேச்சுப் போட்டி இருக்கு. "நன்றி போற்றுவோம்' இதான் பேச்சுக்கான தலைப்பு! கலந்துக்கத் தயக்கமா இருக்கு! 
அமுதா: தயங்காதே நளினி! உனக்கு நல்ல குரல், பேச்சுத் திறமை இருக்கு! நம்பிக்கையோடு கலந்துக்க! வாழ்த்துகள்! 
நளினி: நன்றி அமுதா!

காட்சி-2
இடம் - நளினி வீடு
மாந்தர் - நளினி காயத்ரி.

காயத்ரி: (தொலைபேசியில்) ஆமாம்! காயத்ரிதான் பேசறேன்....அப்படியா?....சரி, சரி வந்துடறேன். (போனை வைத்துவிட்டு) நளினி அக்கா, தொலைக்காட்சி நிலையத்திலேர்ந்துதான் பேசினாங்க.....போன வாரம் நடக்காம போன பாட்டு நிகழ்ச்சியை இந்த வாரம் நடத்தப் போறாங்களாம்,....அதுக்கு இப்ப பத்தரை மணிக்கு ஒளிப்பதிவு செய்யப் போறாங்களாம்! வரேன்னு சொல்லிட்டேன்! அப்பாகூட ஊர்லே இல்லே...நீதான்க்கா என்னை அழைச்சிக்கிட்டுப் போகணும்! முடியுமா? நீ வேற இன்னிக்கு உனக்கு பேச்சுப் போட்டி இருக்கு.... "நேதாஜி நலவாழ்வு மன்றம்' போகணும்னு சொன்னியே ! 
நளினி: ஆமாம்! இன்னிக்கு எனக்கு ஒரு பேச்சுப் போட்டிக்கு பேர் குடுத்திருக்கேன்! ஆனா அதுக்கு இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு மேலே நேரம் இருக்கு....சரி, நீ மடமடன்னு டிரஸ் பண்ணிக்க...ஆட்டோவிலே போனா பத்து நிமிஷத்திலே போயிடலாம்! நான் போய் ஆட்டோவைக் கூப்பிடறேன்! ஆட்டோ!....ஆட்டோ!
காயத்ரி: அக்கா நான் தயார்! ஆட்டோ என்ன ஆச்சு?
நளினி: காலி ஆட்டோ எதுவும் கிடைக்கலே...
காயத்ரி: மணி இப்பவே பத்து ஆயிடுச்சுக்கா....ஒரு யோசனை! நம்ம அமுதாகிட்டேதான் ஒரு சைக்கிள் இருக்கே! இன்னிக்கு காலையிலே கூட அவ தம்பி அதை ஓட்டி பழகிக்கிட்டிருந்தான். நீ போய்க் கேளு, நிச்சயமாத் தருவா,... 
நளினி: சரி! 

காட்சி - 3
இடம்- சாலை
மாந்தர் - ஆட்டோ டிரைவர், நளினி, காயத்ரி. 

(நளினி ஓர் ஆட்டோவில் திரும்பி வருகிறாள்)

நளினி: ஏ காயத்ரி! சீக்கிரம் வா! ஆட்டோவிலே ஏறு! (ஆட்டோக்காரரிடம்) தொலைக்காட்சி நிலையத்திற்குப் போங்க! அப்படியே அங்கேயிருந்து "நேதாஜி நலவாழ்வு மன்றம்' போகணும். 
காயத்ரி: (ஏறி உட்கார்ந்தபடி) ஏன் சைக்கிள் கிடைக்கலையா? 
நளினி: இல்லை, அவ தம்பி எங்கேயே எடுத்துக்கிட்டுப் போயிருக்கானாம்! 

(வண்டி பாதி தூரத்தில் பஞ்சராகிவிடுகிறது....ஆட்டோக்காரர் கையைப் பிசைகிறார். ) 

நளினி: என்னங்க ஆச்சு? 
ஆட்டோக்காரர்: வண்டி பஞ்சர் ஆயிடுச்சும்மா! 
நளினி: இப்ப என்ன செய்யறது? நாங்க ஒரு போட்டியில கலந்துக்க தொலைக்காட்சி நிலையத்திற்குப் போகிறோம்! அங்கேயிருந்து "நேதாஜி நலவாழ்வு மன்றம்' வரைக்கும் வேறே போகணுமே! 
ஆட்டோக்காரர்: இருங்கம்மா!....எனக்குத் தெரிஞ்ச ஆட்டோ ஏதாவது வருதான்னு பார்க்கறேன்....நீங்க அதுல போயிடலாம்! 
நளினி: இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்குப்பா! பத்தரை மணிக்குள்ளே போயிடலாமா? 
ஆட்டோக்காரர்: எனக்கு பஞ்சர் போட அரை மணி நேரம் ஆகும்....ஆனா நீங்க அதுவரைக்கும் வெயிட் பண்ண வேண்டியதில்லே....நிச்சயம் எனக்குத் தெரிஞ்ச ஆட்டோ ஏதாவது வரும் நான் ஏத்தி விடறேன்! கவலைப்படாதீங்க.... 

(ஆட்டோ டிரைவருக்குத் தெரிந்த இன்னொரு ஆட்டோ வருகிறது. அந்த டிரைவரிடம் ஏதோ பேசி இருவரையும் ஏற்றி விடுகிறார்.)

காயத்ரி: இதோ! தொலைக்காட்சி நிலையமே வந்துட்டுது!
நளினி: நல்லகாலம்! பதினஞ்சு நிமிஷம் முன்னாடியே வந்திட்டோம்! ஆட்டோக்காரருக்கு நன்றி சொல்லணும்! நீயும் இன்னொருவாட்டி பிராக்டீஸ் பண்ணலாம்! டிரைவர், எனக்கு இன்னும் ஒரு மணி நேரத்திலே "நேதாஜி நல வாழ்வு மைய'த்துக்குப் போணும். அங்கே எனக்கு ஒரு பேச்சுப் போட்டி இருக்கு...இந்த ஆட்டோவிலேயே வந்துடலாம்னு இருக்கேன்! 
புதிய ஆட்டோக்காரர்: சொன்னாரும்மா!
நளினி: சரி நான் வரேன் காயத்ரி! இன்னும் முக்கால் மணிநேரத்துக்குள்ளே மன்றத்துக்குப் போகணும்...ஆல் தி பெஸ்ட்! (புதிய ஆட்டோவை ஏற்பாடு செய்த பழைய ஆட்டோக்காரருக்கு மனதில் நன்றி தெரிவிக்கிறாள்)
காயத்ரி: இந்தா பணம்! நீ வரும்போது ஒரு ஆட்டோவைப் பிடிச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்திடு! (ஆட்டோக்காரரிடம்) சரி, போலாங்க!

(போகும் வழியில் பழைய ஆட்டோக்காரர் பஞ்சர் போட்டுக் கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்த புது ஆட்டோக்காரர் தன் வண்டியை நிறுத்துகிறார். )

புதிய ஆட்டோக்காரர்: என்னண்ணே இன்னும் பஞ்சர் போடலையா?
பழைய ஆட்டோக்காரர்: இன்னும் பத்து நிமிஷத்திலே ஆயிடும்....ஆனா என் பொண்ணு ஒரு பேச்சுப் போட்டியிலே கலந்துக்கப் போகணும்....(நளினியைப் பார்த்து விட்டார்....) சரியான சமயத்துக்குப் போய்ச்சேர்ந்தீங்களாம்மா!....நீங்க போற இடத்துக்குத்தான் என் பொண்ணை ஆட்டோவிலே அழைச்சுக்கிட்டுப் போகணும்னு இருந்தேன்....முடியுமோ முடியாதோ!
நளினி: பதட்டப்படாதீங்க...உங்க வீடு எங்கே? 

(பழைய ஆட்டோக்காரர் தன் விலாசத்தைச் சொல்கிறார்....அங்கு சென்று அவர் பெண் கலாவை அழைத்துக் கொண்டு "நேதாஜி நலவாழ்வு மன்ற'த்திற்கு செல்கிறாள்) 

காட்சி - 4
இடம் - நேதாஜி நலவாழ்வு மன்றம்
மாந்தர் - நடுவர், நளினி, அமுதா, கலா
மற்றும் கலந்துகொண்ட மாணவியர் மற்றும் அவைக்கூட்டம். 

(போட்டி நடந்து முடிகிறது) 

நடுவர்: மாணவ மாணவிகளே! பேச்சுப் போட்டியில் பலர் பங்கேற்றனர். ஒரு சிலர் மட்டும்தான் கருத்தையொட்டி உணர்ச்சி ததும்பப் பேசினர். உங்கள் கரவொலியையும் பெற்றனர். இரண்டு மாணவிகள், "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு' என்ற குறளையும் எடுத்துக்காட்டி நம்மை வெகுவாகக் கவர்ந்தனர். இருவருமே நன்றாகப் பேசினர். இதில் நளினி என்ற மாணவியே இந்தப் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெறுகிறாள்! மற்றும் இரண்டாம் பரிசை கலாவிற்கு வழங்குகிறேன்! ( நளினியையும், கலாவையும் மேடைக்கு அழைத்து பரிசுகளை வழங்கினார்) வாழ்த்துகள்!

காட்சி - 5
இடம் - நளினி வீடு
மாந்தர் - காயத்ரி, நளினி, அவர்களது தாய் மற்றும் அமுதா. 

அமுதா: காயத்ரி, காயத்ரி!
காயத்ரி: அமுதாவா! வா! 
அமுதா: இந்த குறுந்தகட்டைக் கொடுத்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன்....நீ பாடின பாட்டை நேற்று தொலைக்காட்சியிலே பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது! அந்தப் பாட்டை இதுலே "ரிகார்டு' பண்ணி இருக்கேன். கேளு!
காயத்ரி: ரொம்ப நன்றி அமுதா!
நளினி: வா! அமுதா! (கழுவிய முகத்தைத் துடைத்துக் கொண்டே) உனக்கு ரொம்ப நன்றி சொல்லணும்... நேத்து நான் பேச்சுப் போட்டியிலே முதல் பரிசு வாங்கினேன்! (அம்மாவிடம்) அம்மா! அதைக் காமிம்மா!
அம்மா: (புன்னகைத்துக்கொண்டே) இந்தா! 
அமுதா: கங்க்ராட்ஸ்! வாழ்த்துகள்! எனக்குத் தெரியும் நீ நிச்சயம் பரிசு வாங்குவே...உனக்குதான் நான் சைக்கிள் குடுக்க முடியாம போயிடுச்சு! 
நளினி: அதனால என்ன? பரவாயில்லே....இருந்தா குடுத்திருக்கமாட்டியா? ஆனா நீ அன்னக்கு சொன்னியே தோல்வியை சவாலா எடுத்துக்கணும்னு....அதுதான் எனக்கு உத்வேகம் ஏற்படுத்திடுச்சு! ஒரு ஆட்டோக்காரர் எனக்கு உதவினார்! நானும் அவருக்கு உதவற வாய்ப்பை கடவுள் குடுத்தார்! எல்லாமே கடவுளே செய்தாமாதிரிதான் இருக்கு! (நடந்தது எல்லாவற்றையும் விவரிக்கிறாள்) இனிமே வெற்றி, தோல்வியை சமமா எடுத்துக்கணும்னு தீர்மானிச்சுட்டேன்...எல்லாப் போட்டியிலேயும் கலந்துக்குவேன்....தோத்தா என்ன....ஜெயிச்சா என்ன எல்லாமே ஒரு அனுபவம்தான்!
அமுதா: பரவாயில்லையே அன்னிக்கு அழுதுகிட்டிருந்த நளினியா இது? அது சரி! வர்ற பெüர்ணமிக்கு நிலாச் சாப்பாட்டுக்கு என்ன செய்யப்போறே? 
நளினியின் அம்மா: உனக்கு என்ன வேணுமோ கேளு செஞ்சுடலாம்! இப்போ இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட நான் பால் பாயசம் செஞ்சிருக்கேன்! 
காயத்ரி: வெரிகுட்! இப்போ நாம பாயசத்தைக் குடிச்சுக்கிட்டே இந்த கேசட்டைப் போட்டுக் கேட்போமா? 
நளினி, அமுதா: ஓ.கே!
திரை

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com