மகிழ்ச்சியின் ரகசியம்!

காட்டில் ஒரு ஓநாய்! அது அண்ணாந்து ஒரு மரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தது! 
மகிழ்ச்சியின் ரகசியம்!

காட்டில் ஒரு ஓநாய்! அது அண்ணாந்து ஒரு மரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தது! 
ஒரு அணில் ரொம்ப சந்தோஷமா மரக்கிளைகளில் தாவி விளையாடிக் கொண்டிருந்தது! அது மரக்கிளைகளில் இருந்த கனிகளை கடித்துச் சாப்பிட்டுக் கொண்டும் இங்கும் அங்கும் விளையாடிக்கொண்டும் இருந்தது! குதூகலத்திற்கு அளவே இல்லை! முதுகில் கோடுகளுடன் அதன் துறுதுறுப்பு மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது! இதையெல்லாம் ஓநாய் பார்த்துக் கொண்டிருந்தது. இப்படியாக மகிழ்ச்சியாகத் தாவிக்கொண்டிருந்தபோது தவறி "பொத்' தென்று அந்த அணில் கீழே விழுந்துவிட்டது! நல்ல காலம்! அதற்கு அடி ஒன்றும் பலமாகப் படவில்லை! ஆனால் பாவம்! அது கீழே இருந்த ஓநாயிடம் வசமாக மாட்டிக் கொண்டது! 
அது ஓநாயிடம், "தயவு செய்து என்னை விட்டுவிடு! உனக்குப் புண்ணியமாப் போகும்'' என்று நடுங்கிக்கொண்டே கெஞ்சிக் கேட்டது அணில்! 
ஓநாய் அணிலிடம், "உன்னால் என் பசி ஒன்றும் ஆறிவிடப்போவதில்லை. ஆனால் நீ ஒரு ரகசியத்தை எனக்குச் சொல்ல வேண்டும்...''
"எனக்குத் தெரிஞ்சா நிச்சயம் சொல்றேன்,....கேளுங்க''
"அதென்ன? அணில்களெல்லாம் ரொம்ப சந்தோஷமா, குதூகலமா, உற்சாகமா, அழகா ஓடியாடி விளையாடிக்கிட்டே இருக்கீங்களே....அதெப்படி?''
"நீ என்னை விட்டுவிடு! உன்னைப் பார்த்தால் எனக்கு பயமா இருக்கு! வார்த்தையே 
வரலே. மரத்தின் மேல் ஏறிக்கொண்டு உடனே உன் கேள்விக்கு பதில் சொல்றேன்!சரியா?''
ஓநாயும் அணிலை விட்டுவிட்டது. தப்பிச்சாப் போதும்னு விறுவிறுவென்று மரத்தின்மீது ஏறிக் கொண்டது அணில்! 
அது ஓநாயைப் பார்த்து, "நீ ரொம்ப கெட்டவன்! அதனால்தான் எப்போதும் துன்பத்தில் இருக்கிறாய்! நாங்கள் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாமல் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறோம்!'' என்று கூறியது.
"அது சரி! நான் உன்னை நம்பாமல் கபளீகரம் செய்திருந்தால்?''
"அது உயிர் பிழைக்க ஒரு முயற்சிதான்! மகிழ்ச்சியாக வாழ்ந்தேன்....உன் பசியைத் தீர்க்க உதவிய மகிழ்ச்சியோடு மடிந்திருப்பேன்!'' என்று கூறிவிட்டு வேகமாக ஓடி மறைந்தது! 
ஓநாய் தனக்குள், "அதுவும் வாஸ்தவம்தான்...நம்ம பிழைப்பு துன்பம் நிறைந்ததுதான்!'' என்று நினைத்துக் கொண்டது. 

நீதி: வாழ்க்கையின் நெறியில் மகிழ்ச்சி இருக்கிறது!

-இராம. குருமூர்த்தி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com