முத்திரை பதித்த முன்னோடிகள்! ஆர்.கே.நாராயண்

இந்தியர்களால் ஆங்கிலத்தில் எழுத முடியாது என்ற வெளிநாட்டினரின் எண்ணத்தை முறியடித்தவர்! அப்படி எழுதினாலும்
முத்திரை பதித்த முன்னோடிகள்! ஆர்.கே.நாராயண்

இந்தியர்களால் ஆங்கிலத்தில் எழுத முடியாது என்ற வெளிநாட்டினரின் எண்ணத்தை முறியடித்தவர்! அப்படி எழுதினாலும் புராண இதிகாசங்களை மட்டுமே எழுத முடியும் என்றும் ஆங்கில எழுத்தாளர்களைப் போல் கற்பனைத் திறனும், படைப்பாற்றலும் ஒருங்கே இணைந்த இலக்கியத்தை ஆங்கிலத்தில் படைக்க இயலாது என்றும் இருந்த நிலையை மாற்றியவர்! 
படைப்பாற்றலும், கற்பனைத்திறனும் ஒருங்கே இணைந்த தலை சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் ஆர்.கே.நாராயண்! இவர் கற்பனையில் உருவாக்கிய ஊரின் பெயர் இந்திய வரைபடத்தில் இடம் பெற்றிருக்கிறதா? எனத் தேடினர் வெளிநாட்டினர்!!
"ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி அய்யர் நாராயண்' என்ற ஆர்,கே.நாராயண் 10-10-1906 அன்று சென்னையில் பிறந்தார். தந்தை கிருஷ்ணாசாமி அய்யரின் மூன்று புதல்வர்களில் மூத்தவர் ஆவார். 
இன்னொரு விசேஷமான செய்தி என்னவென்றால் இவரது இளைய சகோதரரும் உலகப் புகழ் பெற்ற கார்ட்டூனிஸ்ட் "ஆர்,கே.லக்ஷ்மண்' ஆவார். (இவரைப் பற்றி பிறகு பார்ப்போம்)
ஆர்,கே.நாராயணின் தந்தை தலைமை ஆசிரியர். தந்தை பணிபுரிந்த அதே பள்ளியில் கல்வி பயின்றார். தந்தைக்கு அடிக்கடி பணியிட மாற்றம் நிகழ்ந்தது. எனவே தன் தாய்வழிப் பாட்டியிடம் வளர்ந்தார். பாட்டி அவருக்கு புராணங்கள், கர்நாடக சங்கீதம், சமஸ்கிருதம் போன்றவற்றைக் கற்பித்தார்! 
தனது சிறுவயதிலேயே இவர் சார்லஸ் டிக்கன்ஸ், வுட் ஹவுஸ், ஆர்தர் கோனன் டாயில் மற்றும் தாமஸ் ஹார்டி போன்ற புகழ் வாய்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தீவிரமாக வாசித்தார். தந்தை மைசூருக்குப் பணி மாற்றம் செய்யப்படவே இவரும் அங்கு சென்றார். பள்ளி நூலகத்தில் பெரும்பாலான புத்தகங்களை வாசித்தபடியே இருந்ததால் பாடநூல்களை இவர் வாசிக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் பள்ளி இறுதித் தேர்வில் இவர் தோல்வி அடைந்தார். அந்த ஓர் ஆண்டு முழுவதும் மேலும் அதிகக் கதை புத்தகங்களைப் படிப்பதிலும் தமக்குத் தோன்றிய எண்ணங்களை எழுதுவதிலும் நேரத்தைச் செலவிட்டார். பிறகு பள்ளிப் படிப்பை முடித்து இளங்கலை ஆங்கிலம் மற்றும் முதுகலை ஆங்கிலத்தையும் முடித்தார். தந்தை பணிபுரிந்த பள்ளியிலேயே இவருக்கு ஆசிரியப்பணி கிட்டியது. அப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாததால் அந்தப் பணியையும் சேர்ந்து பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை விரும்பாத நாராயண் தமது வேலையை ராஜினாமா செய்தார். எழுத்தையே தன் முழு நேரத் தொழிலாக மேற்கொள்ள முடிவு செய்தார். 
இங்கிலாந்தில் 17 ஆம் நூற்றாண்டில் "கடல் வாணிபச் சட்டம்' என்ற நூலை வெளியிட்டது. அதைப் படித்த நாராயண் அந்த புத்தகதைதப் பற்றிய விமர்சன பகுப்பாய்வு நூலை எழுதினார். இதுதான் நாராயண் எழுதிய முதல் நூல்! 
1930 ஆம் ஆண்டு இவரது முதல் நாவல் "ஸ்வாமியும் அவனது நண்பர்களும்' (SWAMY AND FRIENDS) வெளிவந்தது. "மால்குடி' என்ற கற்பனை கிராமத்தை அதில் உருவாக்கியிருந்தார்.
தான் எழுதிய நாவலின் பிரதியை ஆக்ஸ்ஃபோர்டில் வசித்த நண்பருக்கு அனுப்பினார். அதைப் படித்து கவரப்பட்ட அவர் "கிரஹாம் கிரீன்' என்ற தன் நண்பருக்கு அனுப்பினார். அவர் தனது பதிப்பாளரிடம் அதை நூலாகப் பதிக்குமாறு வேண்டினார். 1935 ஆம் ஆண்டு அந்நூல் வெளியானது. 1937 இல் "இளங்கலைப் பட்டதாரி' (THE BACHILOR OF ARTS) என்ற நூலையும் 1938 ஆம் ஆண்டு "இருண்ட அறை' (THE DARK ROOM) என்ற நூலையும் எழுதினார். 
1942 ஆம் ஆண்டில் "மால்குடி நாட்கள்' (MALGUDI DAYS) சிறுகதைத் தொகுப்பும் 1945 ஆம் ஆண்டு "ஆங்கில ஆசிரியர்' (THE ENGLISH 
TEACHER) என்ற நூலும் வெளியாயின. 
இவர் சொந்தமாக "இந்தியன் தாட் பப்ளிகேஷன்ஸ்' (INDIAN THOUGHT PUBLICATIONS) என்ற பதிப்பகத்தைதை தொடங்கினார். தற்போது வெற்றிகரமாக நிர்வகிக்கப்படுகிறது. 
1951 ஆம் ஆண்டு வெளிவந்த "பொருளாதார மேதை' (THE FINANCIAL EXPERT) என்ற இவரது நாவல் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்காவில் உள்ள "மிக்சிகன் ஸ்டேட் யுனிவர்சிடி பிரஸ்' இவரது படைப்புகளை 1953 ஆம் ஆண்டு பதிப்பித்தது. 1956 ஆம் ஆண்டு இவர் அமெரிக்கா சென்றபோது "வழிகாட்டி' (THE GUIDE) என்ற நூலை எழுதினார். 
அமெரிக்காவில் தான் இருந்த ஒவ்வொரு நாளைப் பற்றியும் எழுதி வைத்தார். அதுவே பின்னாளில், "எனது தேதியில்லா நாட்குறிப்பு' (MY
DATELESS DIARY) என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்குச் சென்றார். தனது நூல்களை வெளியிட உதவிகரமாக இருந்த திரு "கிரஹாம் கிரீன்' அவர்களை அப்பொழுதுதான் முதன்முதலாக சந்தித்தார். 
இந்தியா திரும்பிய பிறகு இவரது "வழிகாட்டி' நாவல் வெளியானது. இவரது மிகச் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. இதற்காக 1958 ஆம் ஆண்டின் "சாகித்ய அகாடமி விருது' இவருக்கு வழங்கப்பட்டது. இவர் நிறைய கட்டுரைகளையும் எழுதி உள்ளார். இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு "அடுத்த ஞாயிறு' (NEXT SUNDAY) என்ற தலைப்பில் 1960 ஆம் ஆண்டு "தி ஹிந்து' ..., "தி அட்லாண்டிக்' போன்ற நாளிதழ்களில் இவர் தொடர்ந்து எழுதி வந்தார். 
1964 ஆம் ஆண்டு இவர் முதல் முறையாக புராண இதிகாச நாவல் ஒன்றை "கடவுளர்கள், அரக்கர்கள் மற்றும் பலர்' (GODS, DEMONS AND OTHERS) என்ற பெயரில் எழுதினார். ஓவிய உலகில் புகழ் பெற்ற இவரது சகோதரர் திரு ஆர்.கே.லக்ஷ்மண் இவரது பல படைப்புகளுக்குப் படம் வரைந்துள்ளார்.
1967 ஆம் ஆண்டு இவருக்கு இங்கிலாந்தில் உள்ள "லீட்ஸ் பல்கலைக் கழகம்' (UNIVERSITY OF LEADS) கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 
1938 ஆம் ஆண்டு இவரது உறவினர் ஒருவர் இராமாயணத்தை ஆங்கிலத்தை மொழி பெயர்க்குமாறு வேண்டினார். 1973ஆம் ஆண்டு அதை எழுதி வெளியிட்டார். 1978 ஆம் ஆண்டு மஹாபாரதத்தை சுருக்கமான வடிவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 
1980 ஆம் ஆண்டு "தி ராயல் சொசைடி ஆஃப் லிட்ரேச்சர்' (THE ROYAL SOCIETY OF 
LITERATURE) என்ற அமைப்பு "ஏசி பென்சன் மெடல்' (AC BENSON MEDAL) என்ற பெருமை மிகு விருதை வழங்கியது. கர்நாடக அரசு மாநில சுற்றுலாத் துறையை வளர்க்கவும், அதன் பெருமைகளை உலகுக்கு உணர்த்தவும் கர்நாடக மாநில சுற்றுலா இடங்கள் பற்றிய நூலை எழுதித் தருமாறு இவரிடம் வேண்டியது. அதன்படி, "(THE EMERALD
ROUTE) என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதித் தந்தார். 
1964 ஆம் ஆண்டு இவருக்கு "பத்ம பூஷண்' விருதும் வழங்கப்பட்டது! 
1980 ஆம் ஆண்டு கர்நாடக மாநில ராஜ்யசபா உறுப்பினர் ஆனார். 
இச்சாதனையாளர் 2001 ஆம் ஆண்டு தமது 94 ஆவது வயதில் காலமானார்.

-என். லக்ஷ்மி பாலசுப்பிரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com