இளமையில் வெல்! கேப்டன். நீக்கேசாகுவோ கெங்குரூஸ்

இவரது பெயரை உச்சரிக்க சிரமமாய் இருப்பதால் குடும்பத்தார் "நெய்பூ' என்றும், இவரது தலைமையின் கீழ் பணிபுரிந்தவர்கள் "நிம்பூ சாப்' என்றும் அன்போடு அழைத்தனர்.

இவரது பெயரை உச்சரிக்க சிரமமாய் இருப்பதால் குடும்பத்தார் "நெய்பூ' என்றும், இவரது தலைமையின் கீழ் பணிபுரிந்தவர்கள் "நிம்பூ சாப்' என்றும் அன்போடு அழைத்தனர்.
 நாகாலாந்தின் தலைநகர் "கோஹிமா'வில் பிறந்த இவர் ஓர் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்பதே இவரது லட்சியமாக இருந்தது. காரணம் இவரது முப்பாட்டனார் "நாகா பாதுகாப்புக் குழு'வின் தலைமைத் தளபதி ஆவார்.
 இவர் 12.12.1998 அன்று ராணுவத்தில் சேர்ந்தார். இவர் ராஜபுதானா ரைஃபில்ஸ் படைப்பிரிவில் "ஜுனியர் கமான்டர்' ஆகப் பணியில் சேர்ந்தார். இதற்கிடையே "காடக் பிளாட்டூன்' பிரிவில் சேர்வதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர். நல்ல உடல் வலுவும், செயல்திறனும், கடும்பனியைச் சமாளிக்கும் மனோதிடமும் உடையவர்கள் மட்டுமே இப்பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுவர். கேப்டன். கெங்குரூஸ் அப்பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
 1999-ஆம் ஆண்டு கார்கில் யுத்தம் ஆரம்பமானது. கார்கில் மலைப்பகுதியின் ஒரு குறிப்பிட்ட பாதை வழியாக இந்திய ராணுவ வீரர்களுக்குத் தேவையான உணவு, மருந்து, வெடிபொருட்கள் மற்றும் தளவாடக் கருவிகள் போன்றவை கொண்டு செல்லப்பட்டன. கார்கில் மலைப்பகுதியில் பதுங்கி இருந்த பாகிஸ்தானிய வீரர்கள் இவ்வாறு பொருட்கள் கொண்டு செல்லப்படும் வாகனங்களை குண்டு வீசி அழித்தனர். இதில் ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் பலி ஆயினர். இம் முயற்சியை முறியடிக்காவிடில் கார்கில் மலைப் பகுதி முழுவதும் பாகிஸ்தானியர் வசம் வந்துவிடும் அபாய நிலை ஏற்பட்டது.
 கேப்டன். கெங்குரூஸ் ஒரு திட்டம் வகுத்தார். வாகனங்களில் சென்றால் அழிவு நிச்சயம். எனவே மறைந்திருந்து தாக்கும் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வண்ணம் மறைந்திருந்து மலை ஏறுவது என முடிவு செய்தார். ஒரு குறிப்பிட்ட உயரம் ஏறிய பின்னால் அவர்களைத் தாக்குவது மிகவும் எளிது. மலை ஏறும் கயிற்றால் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை இணைத்துக்கொண்டு மலை ஏறத் தொடங்கினர். கேப்டன். கெங்குரூஸ் முதல் ஆளாகப் பயணித்தார். இந்திய ராணுவ வாகனங்கள் எதுவும் அப்பகுதியில் செல்லாதது பாகிஸ்தானிய வீரர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
 கடல் மட்டத்தில் இருந்து 16,000 அடி உயரத்தில், உயிரை உருக்கும் மைனஸ் பத்து டிகிரி செல்சியஸ் குளிரில் கேப்டன். கெங்குரூஸ் தலைமையிலான ராணுவ வீரர்களின் குழு அடி அடியாக மலைப்பகுதியில் முன்னேறியது.
 வெகு நேரமாக எந்த அசைவையும் உணராத பாகிஸ்தானிய ராணுவம் இவர்கள் திட்டத்தை உணர்ந்துகொண்டது. எனவே அவர்கள் பதுங்கு குழிகளுக்குள் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்தனர். இதில் கேப்டன். கெங்குரூஸின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய ஆரம்பித்தது.
 அவரது தோளில் அதிக எடை கொண்ட RPG  ராக்கெட் லாஞ்ச்சரையும் சுமந்துகொண்டே மேலும் முன்னேறினார். அவரது கால் பூட்ஸ்கள் வழுக்கிக்கொண்டே இருந்தன. இதனால் விரைந்து முன்னேற முடியவில்லை. அவர் தனது உயிரைப் பணயம் வைக்கத் துணிந்தார். உலகில் இதுவரை எந்த ராணுவ வீரரும் செய்ய முடியாத, செய்யத் துணியாத அருஞ்செயல் ஒன்றைப் புரிந்தார்.
 ஆம்! கடுங்குளிரில் தமது கால் பூட்ஸ்களைக் கழற்றி எறிந்து மேலும் முன்னேறினார். அவர் அப்படிச் செய்தால் மட்டுமே பிற வீரர்கள் அவரைத் தொடர முடியும்.
 அளவு கடந்த வலி இருந்தபோதும் மலையின் உயரமான பகுதியை எட்டினார் இவ்வீரத் திருமகன்! தனது படை வீரர்களைப் பிரிந்து சென்று பதுங்கிக் கொள்ளுமாறு சைகை செய்தார். இவர்கள் இருந்த இடத்திலிருந்து பாகிஸ்தானிய வீரர்களின் பதுங்கு குழிகள் தெளிவாகத் தெரிந்தன. தனது கையில் இருந்த ராக்கெட் லாஞ்ச்சரின் உதவியால் எதிரிகளின் ஏழு மறைவிடங்களை அழித்தார்.
 அப்படி இருந்தும் இரு பாகிஸ்தானிய வீரர்கள் கேப்டன்.கெங்குரூஸ் அருகே வந்து தாக்கத் தொடங்கினர். தனது ஆயுதங்களின் உதவியால் அவர்களை அழித்தார். மறைவிடங்களில் பதுங்கி இருந்த பிற எதிரிகள் அவரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் உயிரிழந்தார்.
 இவரைப் பின் தொடர்ந்து வந்த பிற ராணுவ வீரர்கள் தொடர்ந்து தாக்கியதில் பாகிஸ்தானிய வீரர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர்.
 இவரது துணிகர முயற்சி இல்லாமல் கார்கில் போர் வெற்றி கிட்டியிருக்காது.
 "இது எங்கள் வெற்றி அல்ல நிம்பூ சாப்!  உங்கள் வெற்றி மட்டுமே! உங்களால் மட்டுமே இது சாத்தியமானது!  ஜெய் ஹிந்த்!' என்று உரக்க முழங்கியபடியே இந்திய ராணுவ வீரர்கள் அவரது பூதஉடலைச் சுமந்து வந்தனர்.
 இவரது ஈடு இணையில்லாத வீரத்திற்காகவும், உயிர்த்தியாகத்திற்காகவும் "மஹா வீர் சக்ரா' விருது இவருக்கு மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்டது.
 ASC எனப்படும் ARMY SERVICES CORPS பிரிவில் இவ்விருதைப் பெற்ற ஒரே வீரர் இவர் மட்டுமே ஆவார்.
 கார்கிலின் பனிமலைகள் ஸ்பரிசித்த முதல் மற்றும் கடைசி மனிதக் கால்கள் இவருடையது மட்டுமே!
 கார்கில் வெற்றியைச் சாத்தியமாக்கிய பொழுது இவருக்கு 25 வயது மட்டுமே!
மலைகளை மிகவும் நேசித்தார் இந்த நாகாலாந்து புனித மண்ணின் புதல்வர். இவர் விருப்பப்படியே தன் இறுதி மூச்சை இந்திய ராணுவத்திற்காக அளித்தார்.
 "காற்றடிப்பதால் மட்டுமா நமது தேசியக் கொடி பறக்கிறது?'
 இல்லை! இல்லை!
 நமது தேசத்தைக் காக்கும் பணியில் உயிர் நீத்த ஒவ்வொரு வீரரின் இறுதி மூச்சும் அதைப் பறக்கச் செய்கிறது!
 ஆம்! உண்மைதான்! அவர்களால் மட்டுமே நமக்கு நிம்மதிப் பெருமூச்சு சாத்தியமாகிறது!
 ஈடு இணையில்லா இந்திய ராணுவத்திற்குத் தலை வணங்குவோம்! ஜெய் ஹிந்த்!'

-என். லக்ஷ்மி பாலசுப்ரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com