புதிதாக வந்தவன்!

ரமேஷை ஒண்ணும் செய்ய வேண்டாம் சார். எல்லாரும் அவனைப் பத்தி புகார் செஞ்சாலும்..
புதிதாக வந்தவன்!

அரங்கம்
காட்சி-1
இடம் - ஆசிரியர் குமரன் அறை
மாந்தர் - குமரன், ஒன்பதாம் வகுப்பு
மாணவர்கள், மருது.

(மாணவர்கள்.. மாணவிகள் பரபரப்போடும் கோபத்தோடும் இருக்கிறார்கள். சிலர் கண்களில் கண்ணீர்)

குமரன்: (அக்கறையோடு) ஏன்.. உங்களுக்கு என்ன ஆச்சு?
ராமன்: ஒன்பதாம் வகுப்பு "ஏ'யிலே.. புதுசா சேர்ந்திருக்கிறானே ரமேஷ்.. அவன் எங்களைப் பாடாய்ப் படுத்தறான்!
விமலா: ஒரு தேளைக் கொண்டாந்து என் தலையிலே போட்டான்..
குமரன்: என்னது தேளா..
பாலன்: பொம்மைத் தேள் சார்!
விமலா: இருந்தாலும்.. பயந்து நடுங்கிட்டோம்.
வினோத்: முதுகுப்பக்கமா வந்து என் சட்டைக்குள்ளே ஒரு தவளையைப் போட்டான்!
சுப்பு: என் "டிரவுசர் பையில பூரானைப் போட்டான்.
பீட்டர்: என் புத்தகப் பையிலே பாம்பு!
ரமணி: என் சடையிலே கரப்பான் பூச்சி! (சிலருடைய முகத்தில் சிரிப்பும் தெரிகிறது)
குமரன்: சரி.. என்ன செய்யலாம்?
ராமன்: எல்லாரும் எங்க அப்பாவை அழைச்சிட்டு வர்றோம்.
சுப்பு: அவன் வீடு எனக்குத் தெரியும். வீட்டில எல்லாரையும் அழைச்சுகிட்டு அங்கே போகலாம். அவனோட குறும்புத்தனத்தைச் சொல்லலாம்.
குமரன்: மருது, நீ என்ன சொல்றே..
மருது: இது சாப்பாட்டு நேரம். எல்லாரும் போகட்டும். நான் யோசிச்சுச் சொல்றேன்.
(எல்லோரும் போகிறார்கள்)

காட்சி-2 
இடம் - குமரன் அறை
மாந்தர் - குமரன், மருது

(மருது வருகிறான்)
குமரன்: உன் கருத்தைச் சொல்லு.
மருது: ரமேஷை ஒண்ணும் செய்ய வேண்டாம் சார். எல்லாரும் அவனைப் பத்தி புகார் செஞ்சாலும்.. வகுப்பிலே ஒரே சிரிப்பு.. ஆட்டம் பாட்டம்.. இதுவும் இருந்தது.
பள்ளிக்கூடத்துக்குப் புதுசா வந்திருக்கான். ஏற்கெனவே இருந்த பள்ளிக்கூடத்திலே.. இவன் குறும்பு தாங்காமே டி.சி கொடுத்தாங்களாம்.. அவனே பெருமையா சொன்னான்.
 .. அவனும் இருக்கட்டும்.. இல்லேன்னா பள்ளிக்கூடம் "போர்' அடிக்கும்.
குமரன்: அவனுக்குப் பொழுது போகலேன்னா அதுக்கு நம்ம பிள்ளைங்கதான் கிடைச்சாங்களா..அவங்க பெற்றோர் வந்து புகார் செஞ்சா நாம என்ன பதில் சொல்றது..
மருது: அவனைப் பற்றிய கவலையை விடுங்க. அவனை நான் பார்த்துக்கறேன்.
குமரன்: எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு.. எல்லாம் நல்லவிதமா முடியட்டும்..

(மருது போகிறான்)

காட்சி-3
இடம் - குளக்கரை ஆலமரம்
மாந்தர் - ரமேஷ், மருது.

(ரமேஷ் ஆலமரத்தடியில் ஒரு கல்மீது உட்கார்ந்திருக்கிறான். மருது ஒரு "வீங்கிய பையோடு வருகிறான்)

ரமேஷ்: பை முடுக்கா இருக்கு.. அதிலே என்ன..
மருது: (பையைக் கவிழ்க்கிறான். பல பொம்மைகள் கீழே விழுகின்றன).
இதெல்லாம் நீ வகுப்பிலே பலபேர் மீது போட்டது.. அதையெல்லாம் சேர்த்து எடுத்து வந்தேன்.
ரமேஷ்: அந்த நேரம் நான் ஓடி வந்திட்டேன். மறுபடி கடையிலே வாங்க நினைச்சேன்.. என் வேலை மிச்சமாயிடுச்சு.. இனிமே நீதான் என் நண்பன்.
மருது: இந்தப் பொம்மை விளையாட்டு எனக்கும் பிடிச்சிருக்கு. நாம கூட்டணி அமைச்சு பிரமாதமா இந்த வேலையிலே ஈடுபடுவோம்.
ரமேஷ்: என்ன கிண்டல் செய்யறியா?
மருது: எனக்குக் கிண்டலும் தெரியாது.. வண்டலும் தெரியாது.. சுண்டல்தான் தெரியும். எங்க அப்பா கடற்கரையிலே சுண்டல் வியாபாரி.
ரமேஷ்: நீ என்னோட குறும்பு... விளையாட்டு இதுக்கெல்லாம் உதவி செஞ்சா.. சுண்டலை மொத்தமா நான் ஒருத்தனே வாங்கறேன்.. உங்க அப்பாவுக்கு அலைச்சல் மிச்சம்.
மருது: வழக்கமா அவருகிட்ட சுண்டல் வாங்கறவங்களுக்கு ஏமாற்றமா இருக்குமே..
ரமேஷ்: அந்தக் கவலை உனக்கு எதுக்கு.. ஏமாத்தினாதான் நமக்கு மகிழ்ச்சியா இருக்கும். கண்ணாமூச்சிதான் விளையாட்டா..
மருது: சரி... நாம விளையாட்டை விரிவு செய்யணும். இந்த பொம்மைங்க போதாது.. உன்கிட்ட இல்லாத பொம்மையா வாங்கு...  நான் தெருத்தெருவா போயி இந்த மாதிரி பயங்கரமான பொம்மை தர்றீங்களான்னு கேட்டு வாங்கறேன்.
ரமேஷ்: எல்லாரும் பொம்மை வாங்கறீங்களான்னுதான் கேட்பாங்க... அலைவாங்க... நீ வித்தியாசமா செய்யறே.. இப்படித்தான் எனக்கு நண்பன் வேணும்..

காட்சி-4
இடம் - குளக்கரை ஆலமரம்
மாந்தர் - ரமேஷ், மருது.

ரமேஷ்: (எரிச்சலோடு) இந்தப் பள்ளிக்கூடத்திலே எல்லாம் கத்துக்குட்டிங்க. பழைய பள்ளிக்கூடமும்தான்..
மருது: ஏன்..?
ரமேஷ்: நான் புதுமையா ஏதாவது செய்ய நினைக்கிறேன். அது பிடிக்காம டி.சி கொடுக்கறாங்க. கொடுமையா இருக்கு... குமரன் சார்கிட்ட என்னைப்பத்திப் புகாராமே..
மருது: கவலைப்படாதே.. குமரன் சாரும் உன்
பக்கம்தான். அவரும் சிறு வயசிலே இப்படித்தான் இருந்தாராம்.. 
ரமேஷ்: எப்படி?
மருது: இப்படி இருந்து.. நிறைய அடி வாங்கினாராம்.. அதுபோல அடி உனக்கு விழக்கூடாதுன்னு கவனமா இருக்காரு..
ரமேஷ்: அடியா..?
மருது: ஆமாம்.. எங்க பிள்ளைங்களைப் படிக்க அனுப்பினா யாரோ பாம்பு.. தேளைக் காட்டிப் பயமுறுத்தறானாமே.. நிஜமாவே நான் தேளோட வர்றேன்னு ஒருத்தர் சொன்னாராம்.
(ரமேஷ் திகைக்கிறான்)
இன்னொருத்தர் அவனுக்கு டி.சி கொடுங்கன்னு சொன்னாராம்.
ரமேஷ்: என்னடா இது.. வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறுதா..
மருது: நீ இங்கே படிக்கணும்னு குமரன் விரும்பறாரு.. அவன் நல்ல பையன்.. கொஞ்சம் விளையாட்டும் குறும்பும் இருக்கு.. நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லிட்டாரு..
(ரமேஷ் சிந்திக்கிறான்)
மருது: நம்ம மகிழ்ச்சியிலே அடுத்தவங்க துன்பப்படக் கூடாது. அவங்களும் மகிழ்ச்சியா இருக்கற மாதிரி நம்ம செயல் இருக்கணும்..
ரமேஷ்: அந்த வழி எனக்குத் தெரியலியே.. நீ சொல். 
மருது: பொம்மை மூட்டையோட நாளைக்குப் பள்ளிக்கு வா.. அங்கே சொல்றேன்..

காட்சி-5
இடம் - பள்ளியின் பொது அரங்கம்
மாந்தர் - குமரன், ரமேஷ், மருது, மாணவர்கள்.

(பொது அரங்கின் நுழைவாயில் அருகே ஒரு பெரிய டயனோசர் காலைத் தூக்கியபடி நிற்கிறது. தாடையை அசைக்கிறது. தலையைத் திருப்புகிறது.
 உயிரியல் கண்காட்சி என்ற பதாகை.
 உள்ளே ரமேஷின் பொம்மைகள் கண்காட்சியாக.. முறையாகப் பார்வைக்கு இருக்கின்றன.
 மாணவர்கள் பார்க்க ஆர்வத்தோடு வருகிறார்கள். ரமேஷ், மருது போன்ற மாணவர்களின் துணையோடு கண்காட்சியை நடத்துகிறான்.
 அவனுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. சுற்றிச் சுற்றி வந்து... பொம்மை வடிவில் இருந்த உயிரினங்களைப் பற்றிக் கூறுகிறான்).
ரமேஷ்: இந்தப் பக்கம் முதுகெலும்பில்லாத உயிர்கள் கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, தேள், பூரான், பட்டாம்பூச்சி, மண்புழு... இதெல்லாம்..!
 அங்கே முதுகெலும்புள்ள பிராணிகள் மீன், தவளை, ஓணான், பச்சோந்தி, பாம்பு, பறவை, யானை, ஆடு, மாடு, குதிரை, யானை, குரங்கு போன்ற பாலூட்டி! மனிதனும் பாலூட்டிதான்!
மருது: ஒவ்வொரு பிராணியோட உடல் அமைப்பு.. உணவுப்பழக்கம்.. செயல்பாடு. அவற்றால் மனிதனுக்கு என்ன பயன்பாடு... நாம் எப்படி அவற்றைக் காக்க வேண்டும். எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். இப்படி எல்லாத்தையும் அழகா நம்ம ரமேஷ் சொல்வான்! அவன் அந்த விஷயத்திலே ஒரு புலி!
ரமேஷ்: புலி, சிங்கம், நாய், பூனை இதெல்லாமும் பாலூட்டிதான்!

(ரமேஷின் முகத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. மாணவர்கள் அவனைப் பாராட்டிக் கையைக் குலுக்குகிறார்கள். தலைமை ஆசிரியரும் வந்து பார்த்து, முதுகில் தட்டிக் கொடுத்து அரவணைக்கிறார். ஒரு பரிசு தருகிறார்!)

மாணவர்கள்: உன் குறும்புத்தனத்தால எரிச்சல் அடைஞ்சோம். இந்தக் கண்காட்சியால எங்க கோபம் ஓடிப்போச்சு!
நீ ரொம்ப நல்ல பையன். திறமைசாலி!

(ஆசிரியர் குமரனும் மருதுவும் மகிழ்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். அவர்கள் அவனுக்குக் கொடுத்த பயிற்சியும் வழிகாட்டலும் அவனிடம் செய்த மாற்றத்தால் வந்த மகிழ்ச்சி அது!)

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com