மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

அந்த ஊர் கோயிலிலிருந்து மூன்று மனிதர்கள் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள். அப்போது வாசலில் நின்று கொண்டிருந்த கடவுள் ஒருவனைப் பார்த்துக் கேட்டார்.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

அந்த ஊர் கோயிலிலிருந்து மூன்று மனிதர்கள் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள். அப்போது வாசலில் நின்று கொண்டிருந்த கடவுள் ஒருவனைப் பார்த்துக் கேட்டார்.
 "மனிதா நான் கடவுள். உனக்கென்ன வேண்டும்?''
உடனே அந்த மனிதன் கடவுள் முன் மண்டியிட்டு வணங்கி,
 "கடவுளே எனக்கு அள்ள அள்ளக் குறையாத அளவற்ற செல்வம் வேண்டும்'' என்றான்.
 இரண்டாமவனைப் பார்த்து கடவுள் கேட்டார்,
 "நான் கடவுள். மனிதா உனக்கு என்ன வேண்டும்?'' அவனும் கடவுள் முன் மண்டியிட்டு வணங்கிவிட்டு,
 "தெய்வமே எனக்கு அழகையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டும்'' என்றான்.
 மூன்றாமவனைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டபோது,
 "அவன் எனக்கு அபார புத்தி கூர்மை வேண்டும்'' என்றான்.
 "சரி என்னோடு வாருங்கள்'' என்றார் கடவுள்.
 எல்லோரும் அடுத்த கணமே ஊருக்கு வெளியே உள்ள செங்கல் சூளையில் இருந்தார்கள். அங்கே ஒரு மனிதன் சேறுபடிந்த உடம்போடு வியர்வை ஒழுக ஒழுக வெயிலில் செங்கல் அறுத்துக்கொண்டிருந்தான். அவன் தன் உடம்பில் ஒரு கிழிந்த வேட்டியை மட்டுமே உடுத்தியிருந்தான் வயிறு ஒட்டிக் கிடந்தது.
 கடவுள் அவனை பார்த்துக் கேட்டார், "நான் கடவுள். மனிதா உனக்கு என்ன வேண்டும்?''
 ஆனால், அந்த மனிதன் கடவுளைத் திரும்பிப் பார்க்காமல் தான் செய்கிற வேலையிலே கவனமாக இருந்தான். மீண்டும் கடவுள் அவனைக் கேட்டார்.
 "மனிதா உனக்கு என்ன வேண்டும்?'' அந்த ஏழை நிமிர்ந்துகூட பார்க்காமல் "எனக்கு ஒன்றும் வேண்டாம்'' என்றான். கடவுளோடுகூட வந்த மூவரும் அந்த ஏழையை அதட்டினார்கள். "உனக்கென்ன பைத்தியமா? கடவுளே நேரே வந்து என்ன வேண்டும் என்று உன்னைக் கேட்கிறார். நீயோ அவரை மதிக்காமல் இருக்கிறாயே!'' என்று கடிந்து கொண்டார்கள்.
 "கொஞ்சம் இருங்கள் வருகிறேன்'' என்றான் அந்த மனிதன். பிறகு தனது வேலையை பொறுமையாக முடித்துவிட்டு கைகளில் இருந்த சேற்றைக் கழுவித் துடைத்துவிட்டு அவர்களிடம் வந்தான்.
 "அது சரி. உங்களில் யாரப்பா கடவுள்?'' என்று கேட்டான். எல்லோரும் விழித்தார்கள்.
 கடவுள் மெல்லச் சிரித்துக்கொண்டு கூறினார். "நான் கடவுள். மனிதா உனக்கு என்ன வேண்டும்?'' என்றார்.
 அந்த மனிதன் கடவுளைப் பார்த்து, "நீதான் கடவுளா? வாவா உன்னைத்தான் ரொம்பக் காலமாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்'' என்று கூறிவிட்டு கடவுளின் முகத்தை உற்றுப் பார்த்தான்.
 அதில் எல்லையற்ற கருணையும் அன்பும் சாந்தமும் இருந்தது. நிறைந்த அமைதியும் ஒளியும் அவர் கண்களில் சுடர் வீசிற்று. அதைப் பார்த்த மனிதன் மிகவும் மனம் நிறைவடைந்து அவரது பாதங்களில் விழுந்து வணங்கினான்.
 பிறகு எழுந்து நின்று கூறினான். "தெய்வமே பூலோகத்தில் சில மனிதர்கள் தங்களை தெய்வமென்று கூறித் திரிகிறார்கள். அதனால்தான் உங்களையும் சந்தேகப்பட்டேன். செய்யும் தொழிலை நான் தெய்வமாக மதிக்கிறவன். அதனால் உங்களை நான் காக்க வைத்துவிட்டேன். இதனால் என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் எனக்கு ஏதேனும் தர நினைத்தால் ஒரு வரம் தாருங்கள். நான் உயிரோடு உள்ள நாள் மட்டும் ஒருவரிடமும் சென்று கையேந்தாத மன வலிமை எனக்கு வேண்டும். என்னிடம் யார் எப்போது எதைக் கேட்டாலும் அவர்களுக்கு இல்லையென்று கூறாமல் தருகின்ற மனம் வேண்டும். பசியால் நோயினால் மனக்கவலையால் வாடும் எல்லா உயிர்க்கும் உதவி செய்கிற உள்ளம் எனக்கு வேண்டும். உலகம் எங்கும் அமைதியும் சாந்தமும் இன்பமும் நிலவ வேண்டும். இதுவே நான் தங்களிடம் வேண்டும் வரம்'' என்றான்.
 கடவுள் மற்ற மூவரையும் பார்த்துச் சொன்னார்,
 "நீங்கள் மூவருமே உங்களது நன்மையையே நாடினீர்கள். ஆகவே நீங்கள் அனைவருமே சுயநலவாதிகள். ஆனால், இந்த ஏழையோ தனக்கென்று எதையும் கேட்காமல் உலக நன்மைக்காக வரம் கேட்டான். நான் தரிசிக்க வந்த தெய்வம் இவன்தான்'' என்று கூறிவிட்டு கடவுள் அந்த ஏழையைப் பார்த்து வணங்கினார்.
 பிறகு அவனைப் பார்த்து "உன்னிடத்தில் நான் இருக்கிறேன். என்னிடத்தில் நீ இருக்கிறாய்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைந்து போனார்.
 அந்த ஏழை உழைப்பாளி மகிழ்வோடு மீண்டும் தன் வேலையைக் கவனிக்கச் சென்றான்.


-சரஸ்வதி பஞ்சு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com