மன்னன் காட்டிய வழி!

வேட்டையாடும் வேட்கையில்வேந்தனொருவன் காட்டிலே
மன்னன் காட்டிய வழி!

கதைப் பாடல்
வேட்டையாடும் வேட்கையில்
வேந்தனொருவன் காட்டிலே
கூட்டி வந்த படையுடன்
கொஞ்சம் ஓய்வு எடுத்தனன்!

மன்னனுக்கு உணவினை
தயாரிக்கும் வேலையாள்
உண்ணும் உணவில் இட்டிட
இல்லை உப்பு என்பதால்,

மன்னன் முன்பு பணிந்துபோய்
"என்ன செய்ய?'' என்றனன்..
"உந்தன் அச்சம் நீக்கிடு
ஒருநொடியில் உனக்குநான்

உப்பு வாங்கி வந்திட
உடனே ஆணை இடுகிறேன்!
இப்போதிங்கு யாருளார்?
இங்கு வருக!'' என்றனன்!

கனிவு கொண்ட வேலையாள்
பணிந்து நிற்க மன்னனும்
"காசு தந்து கடையிலே
உப்பு வாங்கு'' என்றதும்

"மன்னனுக்கு உப்பினை
மண்ணில் தருவாரில்லையோ?
என்ன வேண்டி நாமுமே
இதற்குக் காசு ஈவதாம்?''

என்று கேட்க, மன்னனும்
"ஒன்று சொல்வேன் உனக்குநான்
மன்னன் ஒன்றை இரவலாய்
மண்ணில் பெற்றான் என்றிடின்...

...மக்கள் தங்கள் மனதிலே
மண்ணில் யாவும் இரவலாய்
வாங்கும் எண்ணம் கொள்ளுவர்
வையம் தூற்ற வாழுவர்!

...உரிய பொருளைத் தந்துதான்
ஒன்று பெறுதல் நன்றெனும்
அரிய கருத்தை உணருவாய்''
என்று அனுப்பி வைத்தனன்!

-வளர்கவி, கோவை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com