வான்மழையே! வா மழையே!

வான்மழையே! வான்மழையே!வா மழையே! வா மழையே!
வான்மழையே! வா மழையே!

வான்மழையே! வான்மழையே!
வா மழையே! வா மழையே!
நானுன்னை அழைத்தேனே
நல்லுதவி கேட்டிடவே!

உன்வரவு இல்லாம
ஊரெல்லாம் காய்ஞ்சிடுச்சே!
பொன்விளையும் பூமியிலே
புல்கூட முளைக்கலியே!

ஆறுகுளம் வறண்டிடுச்சே
அடையாளம் இழந்திடுச்சே!
சோறு தந்த சோழநாடு
சோகத்தில் மூழ்கிடுச்சே!

ஏரிகுளம் குட்டையெல்லாம்
எழுப்பிவிட்டோம் மாளிகையை!
மாரிமழை இல்லையின்னு
மனசுவிட்டுப் புலம்புறோமே!

நட்டுநட்டு வளர்த்தமரம்
நாள்பலவாய் வாழ்ந்தமரம்
வெட்டிவெட்டிச் சாய்த்துவிட்டு
வேதனையில் வாடுறோமே!
தப்பு நாங்க செஞ்சுபுட்டோம்
தாமதமா உணர்ந்துபுட்டோம்!
எப்பவுமே உன் தயவு
எங்களுக்கு வேணுமிங்கே!

ஊரெல்லாம் மரம்நட்டு
உனக்காகக் காத்திருக்கோம்!
நீர்நிலைகள் தூர்வாரி
நின்வரவைப் பார்த்திருக்கோம்!

நீரின்றிக் காய்ந்த நிலம்
நின்னாலே வளம் பெறவே
காரிருள்போல் மேகத்தைக்
கண்முன்னே காட்டிடுவாய்!

குடிப்பதற்கு நீர்தந்து
குடிகளை நீ காத்திடுவாய்!
படித்திருந்தும் தவறுசெய்த
பாவிகளை மன்னிப்பாய்!

நாவெல்லாம் வாழ்த்திடவே
நன்மழையே பெய்திடுவாய்!
பூவாலே பந்தலிட்டுப்
புகழ்பாடி வரவேற்போம்!
-நா.இராதாகிருட்டிணன், கடலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com