இளமையில் வெல்! ஸ்னேஹா ஷெகாவத்

ஸ்குவாட்ரன் லீடர் ஸ்னேஹா ஷெகாவத் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் 144 வீரர்கள் கொண்ட விமானப் படைப்
இளமையில் வெல்! ஸ்னேஹா ஷெகாவத்

ஸ்குவாட்ரன் லீடர் ஸ்னேஹா ஷெகாவத் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் 144 வீரர்கள் கொண்ட விமானப் படைப் பிரிவைத் தலைமையேற்று அணிவகுத்துச் சென்றவர் ஆவார். சுதந்திரத்திற்குப் பிந்தைய 63 ஆண்டு கால குடியரசு தின வரலாற்றில் பெண் ஒருவர் விமானப்படைப் பிரிவைத் தலைமையேற்று அணிவகுத்துச் செல்வது அதுவே முதல் முறையாகும்.

இதனால் குஜராத்தின் முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் ஸ்னேஹாவைப் பாராட்டி விருந்தளித்தார். விருந்தின்பொழுது பத்திரிகையாளர்களுடன் நேர்முகச் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. "உங்களது வழிகாட்டி யார்?' என்ற கேள்விக்கு "எனது சகோதரர் அஜீத் சிங் ஷெகாவத்தான்!' என்றார் ஸ்னேஹா.

அவரது சகோதரர் அஜீத் சிங் 85% உடல் குறைபாடு உடையவர் ஆவார். தனது உடல் குறைபாட்டை பொருட்படுத்தாமல் தணிக்கையாளர் தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்று தற்பொழுது காந்தி நகரில் தலைசிறந்த தணிக்கையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தியாவின் முதல் Spastic Charted Accountant என்ற பெருமையைப் பெற்றவர் இவரே ஆவார்.

அவர்தான் ஸ்னேஹாவை விமானப் படைப் பிரிவில் சேரும்படி வற்புறுத்தி உள்ளார். இதற்காக ஸ்னேஹா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. ஸ்னேஹாவின் சகோதரர் ஒவ்வொரு முறையும் "நீ குடியரசு தின அணிவகுப்பில் விமானப் படைப் பிரிவிற்குத் தலைமையேற்று அணிவகுத்து வரவேண்டும்!' என்று கூறியபடியே இருப்பாராம்!

2015-ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பைத் தொலைக்காட்சியில் கண்டு களித்த அஜீத் சிங்கின் கண்கள் கலங்கியபடியே இருந்தன. 15கி.மீ.தொலைவு அணிவகுப்பை முடித்த ஸ்னேஹா முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டது தனது சகோதரரிடம் மட்டுமே! ஆனந்தக் கண்ணீரில் மிதந்த ஸ்னேஹா தன் சகோதரரிடம் பகிர்ந்து கொண்டது விசும்பல்களுக்கிடையே இரண்டு வார்த்தைகள் மட்டுமே! "தன்யவாத்! (நன்றி)...ஜெய்ஹிந்த்!'

இந்திய விமானப்படைப் பிரிவில் பைலட்டாகப் பணியாற்றி வருகிறார் ஸ்னேஹா. இந்திய விமானப்படை 1992ஆம் ஆண்டு முதல் பெண்களை சிறப்பு அதிகாரிகள் பிரிவிற்குத் தெரிவு செய்து வருகிறது. 

இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் போர்க் காலங்களில் போர் விமானங்களை ஓட்டுதல், ராடாரிலிருந்து கிடைக்கும் தகவல்களை (DECODING SECRET MESSAGES) பிற விமானப்படைத் தளங்களுக்கு அனுப்புதல் போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். 

6 மாதங்களுக்கு ஒரு முறை இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் ஏறத்தாழ 5000 இளம்பெண்கள் (21 முதல் 25 வயதிற்குட்பட்டோர்) விமானப்படைப் பிரிவில் சேர விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களில் 10இல் ஒருவர் உடல் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று விமானப்படைப் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். 

ஸ்னேஹா அவ்வாறு தேர்ச்சி செய்யப்பட்ட இளம்பெண் ஆவார். இவ்வாறு தேர்ச்சி பெறும் இளம் பைலட்கள் போர் இல்லாத காலங்களில் இராணுவ ஹெலிகாப்டர் மற்றும் இராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் சரக்கு விமானங்கள் (MILITARY CARGO FLIGHTS) போன்றவற்றை இயக்குகின்றனர். 

இவர் தற்பொழுது வதோதராவிலுள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் "ஸ்குவாட்ரன் லீடர்' ஆகப் பணிபுரிந்து வருகிறார். 

"இளம் பெண்கள் இராணுவத்தின் ஏதாவது ஒரு பிரிவில் சேர்ந்து பணியாற்ற முன் வரவேண்டும்! இதற்காகத் தன் உடல் தகுதியை மேம்படுத்த தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்!'' என்று கூறுகிறார் இந்த இளம் சாதனையாளர்! 2015ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பிரமித்துப் போனார்! இவரை முன் மாதிரியாகக் கொண்டு பல பெண்கள் இப்பொழுது இந்திய இராணுவப் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்! 

"இளைய பாரதத்தினாய் வா! வா! வா!
எதிரிலா வளத்தினாய் வா! வா! வா!''

-லக்ஷ்மி பாலசுப்ரமணியன், 
கடுவெளி.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com