தகவல்கள் 3

ஒருமுறை என்.எஸ். கிருஷ்ணனிடம், திருச்சி ஜட்கா வண்டிக்காரர்கள் சங்கத்திலிருந்து தங்கள் ஆண்டு விழாக் கூட்டத்திற்குத்
தகவல்கள் 3

முன்னுக்கு வாங்கோ!
ஒருமுறை என்.எஸ். கிருஷ்ணனிடம், திருச்சி ஜட்கா வண்டிக்காரர்கள் சங்கத்திலிருந்து தங்கள் ஆண்டு விழாக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டார்.
 கூட்டத்தில் கலைவாணர், "உங்களைப்போல நல்ல உள்ளம் கொண்ட மக்களிடையே நான் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களைப்போல் பரந்த நோக்கும் பெருங்குணமும் உள்ள மக்களை நான் பார்த்ததில்லை. இந்தக் காலத்தில் பொறாமையும் பூசலுமே நிலவுவதைக் காண்கிறோம். ஆனால், உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். உங்கள் வண்டியில் யார் ஏறினாலும் நீங்கள் முதலில் சொல்லும் வார்த்தை "முன்னுக்கு வாங்கோ' என்பதுதான். இந்தக் காலத்தில் யார் இப்படிச் சொல்லுகிறார்கள்'' என்றார்.
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

தமிழ்ப்பற்று
ஒளிரும் முகமுடைய சிறுவன் சாமிநாதன் மேலே என்ன படிப்பது என்பது பற்றி விவாதம் நடந்தது. குடும்பப் பெரியவர் குரல் ஓங்கி ஒலித்தது. "இதபார்... ஒண்ணு சம்ஸ்கிருதம் படி... அல்லது இங்கிலீஷ் படி. இங்கிலீஷ் படிச்சா இந்த லோகத்திலேயே சவுக்கியமா இருக்கலாம். சம்ஸ்கிருதம் தேவ பாஷை! அதைப் படிச்சா மேல் லோகத்திலே சவுக்கியமா இருக்கலாம். நீ என்ன படிக்கப் போற?' "தமிழ் படிக்கப் போறேன்' என்றான் சிறுவன். "ஏன்?' உறுமினார் பெரியவர். "இங்கிலீஷ்' படிச்சா இங்க நன்னா இருக்கலாம்....சமஸ்கிருதம் படிச்சா மேல் லோகத்திலே நன்னா இருக்கலாம்....தமிழ் படிச்சா இரண்டு இடத்திலேயும் நன்னா இருக்கலாம்' என்று சொன்னான். அந்தச் சிறுவன் தமிழ் படித்ததால்தான் இன்று தமிழே நன்றாக இருக்கிறது. அவர்தான் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதைய்யர்.
ந.பரதன், ஏரல்.

நம்பிக்கை
ஒருமுறை நூற்றி ஒன்று வயதுடைய ஓவியர் லிபர்மென் தன்னுடைய டாக்டரைப் பார்க்கச் சென்றார். லிபர்மென் அணிந்திருந்த உடை ரொம்பவும் பழசாக இருப்பதைப் பார்த்த டாக்டர் "லிபர்மென், நீங்கள் புதிய சூட் ஒன்றைத் தைத்துக்கொள்வது நல்லது' என்று சொல்ல உடனே லிபர்மென் பளிச்சென்று பதில் சொன்னார் "உங்களைப் பார்க்க வரும் வழியில்தான் புதிய சூட் ஒன்றை வாங்கினேன். கடைக்காரர் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு அது உழைக்கும்'' என்று சொன்னார்.
வாழ்க்கையைப் பற்றிதான் லிபர்மெனுக்கு எவ்வளவு நம்பிக்கை!
இரா.பாரதிதாசன், தஞ்சாவூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com